“ரூ.5 கோடி பேரிகார்டு – தவெக அரசின் புது ரக ஊழல்” : தோலுரித்த ஸ்டாலின்

Published On:

| By Kavi

தாராபுரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 2) பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று காலை ரோடு ஷோ நடத்திய முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மாலையில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார்.

ADVERTISEMENT

அப்போது திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய ஸ்டாலின், ”ஒருத்தர் கிட்ட பெட்டி பெட்டியா பணத்தை திணிச்ச காரணத்தினால மக்களாக இருக்கக்கூடிய உங்கள் மேல் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருக்கு. பெட்டியை கொடுத்தது யாரு? பெட்டியை வாங்கினது யாரு? உங்களுக்கு நல்லா தெரியும்.

இன்னொன்று நீங்க தெரிஞ்சுக்கணும், நீங்க கட்டுன வரிப்பணத்தாலதான் இந்த இடைத் தேர்தல் நடக்கப்போகுது.

ADVERTISEMENT

5 மாசம் முன்ன நீங்க போட்ட ஓட்டு இருக்கு பாருங்க, அதை செல்லாத ஓட்டாக்கிட்டாங்க. அந்த மக்கள் விரோதிக்கு, அந்த துரோகிக்கு நீங்க தக்க பாடம் புகட்ட ரெடியா?

திமுக வேட்பாளர் வாக்கை விற்கமாட்டார்

ADVERTISEMENT

துரோகத்தை முறியடிக்கிறது மட்டும்ல்ல, விலை போகாத ஒருவரை, உங்களுக்கு விசுவாசமானவரை, வெற்றி பெற வைக்கவும் உங்களை நாடி நான் வந்திருக்கிறேன். இதோ உங்களிடத்தில் இருகரம் கூப்பி ஆதரவு கேட்டு, வாக்கு கேட்டு இங்கே நிற்கிறார் யார்? நம்முடைய தங்கை வழக்கறிஞர் சுகன்யா.

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடைய வேட்பாளர் சுகன்யா, அவருக்கு உதயசூரியன் சின்னத்தில வாக்களிச்சு நீங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில வெற்றி பெற செய்யணும்.

தங்கை சுகன்யா துடிப்பான இளம் வேட்பாளர், அடிப்படையிலேயே ஒரு வழக்கறிஞர். அதனால் சட்டமன்றத்திலையும் உங்களுக்காக நல்லா வாதாடுவாங்க. எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட வாங்குற வாக்குகளை ஆளுங்கட்சி கிட்ட போய் விலை பேசி விக்க மாட்டாங்க, அதான் முக்கியம்.

பொதுத்தேர்தல் நடந்து முடிஞ்சு அஞ்சு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள இந்த இடைத்தேர்தல். இது எதனால வந்துச்சு? இதுக்கு காரணம் யார்ன்னு தயவுசெய்து நீங்க சிந்திச்சு பார்க்கணும்.

சத்தியத்துக்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்களான நீங்களே இப்போ என்ன சொல்லி கூப்பிடுறீங்க? ‘பெட்டி பாமா’… இன்னொன்னு இருக்கு ‘மல்டிபாமா’…

எப்பவுமே சட்டமன்ற உறுப்பினர் இறந்தால்தான் அந்த தொகுதியில ஒரு இடைத்தேர்தல் வரும். அப்படி வந்த தேர்தல் இது அல்ல. நீங்க தேர்ந்தெடுத்த வேட்பாளர் ஜனநாயகத்தை சாகடிச்சிட்டாங்க. அதனால இந்த இடைத்தேர்தல் வந்திருக்கு.

ஆட்டம் காணக்கூடிய ஆளுங்கட்சிக்கு துணை போக விலை போனதால இந்த தேர்தல் வந்து சேர்ந்திருக்கு. வாக்களிச்ச உங்க மேல துளி கூட மதிப்பே இல்லாம, உங்க விரல்ல இருக்கிற மை அழியறதுக்கு முன்னாடியே வேற கட்சிக்கு ஓடி போன அவருடைய செயல்தான் காரணம். என்ன கொள்கை இருக்கு? யாருடைய நலன் இருக்கு? உங்க வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர், அதை விலைபேசி வாங்கின ஒரு கட்சி… இதுக்கு யாராவது வாக்களிப்பீர்களா?

ஜனநாயகத்துக்கு வில்லன்

பெரும்பான்மையான இடங்களை பெற முடியாத நிலையில், வெறும் 118 இடங்களை கூட வெல்ல முடியாத மக்கள் ஆதரவில்லாத ஒரு முதலமைச்சர் இருக்கிறார். தன்னுடைய சுயலாபத்திற்காக மக்களுடைய தீர்ப்பை விலைக்கு வாங்க வரவச்சிருக்கக்கூடிய தேர்தல்தான் இந்த இடைத்தேர்தல்.

புதுசா ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய அவர், ஆட்சி செய்றது எப்படி அப்படின்னு கத்துக்குறதுக்கு முயற்சி செய்வார்ன்னு பார்த்தா, அதை விட்டுட்டு அடுத்த கட்சி எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்கிட்டு இருக்கார் இப்போ. இதுதான் நிர்வாகமா? இதுதான் மாற்றமா? ‘ஜனநாயகன்’னு ஒரு படம் நடிச்சார். படத்துக்கு அந்த பேரை வச்ச முதலமைச்சர் ஜனநாயகத்தோட வில்லனா இப்போ… ஜனநாயகத்துக்கு வில்லனா… அதுல கதாநாயகன், இப்ப இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு வில்லன்! வில்லனா குதிரைபேரம் பேச இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்கிறார்.

மக்களுடைய பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால இந்த ரியல் சி.எம். முதல்ல என்ன செஞ்சாரு? திமுக கூட்டணியில் இருந்த… நம்ம கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து ஆதரவை வாங்கினார். ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்ற எண்ணத்தில கம்யூனிஸ்டுகளும் ஆதரவு தந்தாங்க.

விஜய்க்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்

அதுக்கு பிறகு இவங்க யாரையும் நம்பாம அப்பவே என்ன செஞ்சாரு? சோபா செட் அனுப்பிச்சாரு. எங்க? பல இடங்களுக்கு. அப்ப சோபாவை அனுப்பி அதிமுகவுல பாதி எம்.எல்.ஏ.-க்களோட ஆதரவை வாங்கினார். அது போதாதுன்னு அதிமுகவை உடைச்சு பல எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா பண்ண வச்சார். தன்னுடைய கட்சியில இணைச்சுக்கிட்டு இந்த இடைத்தேர்தலை இப்ப வர வச்சிருக்கிறார். தமிழ்நாட்டில இதுக்கு முன்னாடி இப்படி ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கா?

ஆக ஆணவத்தோட உச்சத்தில இருந்து தமிழ்நாட்டு மக்களோட வாக்குரிமையை கொச்சைப்படுத்துகிற முதலமைச்சர் விஜய்க்கு தாராபுரம் மக்களாகிய நீங்க கொடுக்கப்போற அடி மறக்க முடியாத பாடமாக, மரண அடியாக இருக்கணும்!

இல்லனா என்ன ஆகும்? தமிழ்நாடு முழுக்க இதுவே வேலையா இறங்கிடுவாங்க, அதை ஞாபகம் வச்சுக்கங்க. இப்பவே எந்த அமைச்சரும் எந்த வேலையும் செய்யல. அவங்க துறையை கூட கவனிக்கல. எந்த துறைன்னு அவங்களுக்கே தெரியாது. கரண்ட் இல்ல, பால் கிடைக்கல, பாமாயில் கிடைக்கல. மக்கள் இப்ப திண்டாடிட்டு இருக்காங்க. அமைச்சர்கள் எல்லாம் இப்ப எங்க? இடைத்தேர்தல் நடக்கிற தொகுதிகள்ல டேரா போட்டு உட்கார்ந்திருக்காங்க.

நாலே மாசத்தில நாறி போச்சு

ஆக அரசாங்கம் செயல்படாம இருக்கு. இதெல்லாம் தெரிந்த காரணத்தினால்தான் துரோகத்தின் உருவமாக வர ஆளுங்கட்சி வேட்பாளருக்கு மக்களான நீங்க தரமான வரவேற்பை தந்து விரட்டிட்டு இருக்கீங்க. பல ஊர்கள்ல ஆளுங்கட்சியை சார்ந்தவங்க நுழைய கூட முடியல. டிவியில பார்க்கிறோம், பத்திரிக்கையில பார்க்கிறோம். இது ஆளுங்கட்சி வேட்பாளர், அமைச்சர்களுக்கான எதிர்ப்பு மட்டும் கிடையாது. இன்றைக்கு போலி பிம்பத்தைக் காட்டி ஏமாற்றுகிற முதலமைச்சர் விஜய்க்கான எதிர்ப்பு! அதை மறந்துடக்கூடாது.

பொதுவா ஒரு ஆட்சியோட முதல் ஆறு மாசத்தை தேனிலவுன்னு சொல்லுவாங்க, ‘ஹனிமூன் பீரியட்’னு சொல்லுவாங்க. ஆனா நாலே மாசத்தில நாறி போச்சு இந்த ஆட்சி! நாலே மாசத்தில நாறி போச்சு. தவெகவுக்கு வாக்களிக்காத மக்கள் மட்டும்ல்ல, அவங்களுக்கு வாக்களிச்ச மக்களுமே இப்ப நாலு திசையிலும் புலம்பிக்கிட்டு இருக்காங்க. அந்த நிலைக்கு வந்துட்டாங்க. இப்ப உள்ளூர்ல பேரு ரிப்பேர் ஆகுதுன்னு தெரிஞ்சதும் இவங்க என்ன பண்றாங்க தெரியுமா? இப்போ கோடிக்கணக்குல காசை கொடுத்து பக்கத்து மாநிலங்கள், வடமாநிலங்கள்ல எல்லாம் ‘தளபதி… விஜய் சாதனைகள்’னு அந்த மாநில மொழிகள்ல பொய் செய்திகளை பரப்ப ஆரம்பிச்சிட்டாங்க. டிசைன் டிசைன்னா பொய் செய்தி!

சாதனைகளை சொல்ல என்ன இருக்கு?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழ்நாட்டில எல்லா தெருக்களையும் ட்ரோன் மூலமா கண்காணிக்கிறாராம்… யோசிச்சு பாருங்க, இதெல்லாம் பொய்ன்னு தெரிஞ்சவங்க தமிழ்நாட்டை எவ்வளவு கேவலமா நினைப்பாங்க? இதெல்லாம் ஏன் செய்றாங்க தெரியுமா? நாலு மாசத்தில சாதனைகளை சொல்ல என்ன இருக்கு? கரண்ட் கட்டா? அறிவாள் வெட்டா? நல்லா ஞாபகம் வச்சிருக்காப்பா… சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் கொடுமைக்கு ஆளாவதை சொல்வதா? விலை உயர்வை சொல்வதா? ஷாக்கடிக்கிற மின்சார கட்டணத்தை பத்தி சொல்வதா? கடன் தள்ளுபடின்னு சொல்லி விவசாயிகளை ஏமாற்றியதை சொல்வதா? அதனாலதான் எல்லாமே ரீல்ஸ்! சினிமா நடிக்கிறதை நிறுத்திட்டு முதலமைச்சர் இப்போ மக்கள் முன்னாடி நடிச்சிட்டு இருக்கார். இப்ப லேட்டஸ்ட்டா பிரச்சாரத்தில் கூட இருக்கிறவங்க ஆர்ட்டிஸ்ட்டா மாத்திட்டு இருக்காங்க… தாராபுரத்துல பார்த்தோம், அந்த டிராமா எல்லாம்!

மீடியானா அலர்ஜி

நீங்க அழுவாதீங்க…உங்களுக்கு ஓட்டு போடுறதெல்லாம் நாங்கதான் ஆகணும்னு இப்ப மக்கள் சொல்றாங்க.

பிரச்சார மேடையில மைக் கிடைச்சா போதும், முடிவு பண்ணிட்டு மனப்பாடம் பண்ண டயலாக்கை கத்துறாரு. அவர் பேசுறதே கிடையாது, கத்துறதுதான். சட்டமன்றம் வந்தாலும் சரி, பொதுக்கூட்டமா இருந்தாலும் சரி, எங்கயிருந்தாலும் கத்துறதுதான். ஆனா மீடியா மைக்கை பார்த்தா மட்டும் அவருக்கு அலர்ஜி!

மேடையில அப்படி கத்துறீங்களே, சட்டமன்றத்துல கத்துறீங்களே… மீடியா மைக்கை பார்த்து கொஞ்சம் பொறுமையா பேசக்கூடாதா? அவருக்கு அலர்ஜி! அவர்கிட்ட மேட்டூர்ல கூலிங் கிளாஸ் வாங்குனாங்க ஒரு பாட்டி. அதே மாதிரி அவர் காலை உணவு பரிமாறினப்போ ஒரு சின்ன பொண்ணு… அவங்க கூட தைரியமா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாங்க, கேள்விகளுக்கு பதில் சொல்றாங்க. ஆனா இந்த ரியல் சி.எம்.-க்கு மட்டும் மீடியான்னு சொன்னாலே பயப்படுறாரு. இந்த லட்சணத்துல என்னைப் பார்த்து “வாயைத் திறங்க ஸ்டாலின் சார்” அப்படின்னு காட்டுக்கத்தல் கத்துறாரு. “வாயைத் திறங்க ஸ்டாலின் சார்” அப்படின்னு என்னைப் பார்த்து கத்துறாரு. நானும் கத்துறேன்… நானும் கத்துறேன் சி.எம். சார்… புரோ சி.எம். சார்…

சி.எம். சார்? என்ன பயம்?

நான் எல்லாத்துக்கும் பேசிட்டுதான் இருக்கேன். தலைமை தேர்தல் ஆணைய விவகாரத்தில ஏன் சார் பேச மாட்டேங்கிறீங்க? இத நான் கேட்கல, உங்களுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே கேட்கறாங்க சார். என்ன சார் பயம் சி.எம். சார்? என்ன பயம்?

இந்தியா முழுக்க எல்லா தலைவர்களும் பேசிட்டு இருக்க விஷயத்தில கூட உங்களால வாயை திறக்க முடியலன்னா என்ன காரணம் சார் சி.எம். சார்? பி.ஜே.பி.-ன்னா அவ்வளவு பயமா சி.எம். சார்?

இங்கு தாராபுரத்துல பிரச்சாரத்துக்கு வந்தப்போ அவரே ஒரு உண்மையை சொல்லிட்டார். என்ன சொன்னார்ன்னு உங்களுக்கு தெரியும்… தவெக பாஜகவோட கிளைதான் ஒத்துக்கிட்டார்.

சீஃப் மினிஸ்டரா நடந்துக்கோங்க… சீப் மினிஸ்டரா மாறாதீங்க!

அந்த உண்மையை சொன்னதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டிய சட்டமன்றத்தினுடைய மாண்பையும் இந்த முதலமைச்சர் கெடுத்துட்டார். கண்ட கண்ட சைகை எல்லாம் காட்டி, நான் மிசா சிறைவாசத்தில் சந்திச்ச கொடுமைகளையெல்லாம் கிண்டல் பண்ற இடமா சட்டமன்றத்தை மாத்தி…

மக்கள் உன்னை பார்த்து ‘மாண்புமிகு முதலமைச்சர்’னு கூப்பிடுற தராதரத்தோடு அவர் நடக்கணும். சுருக்கமா சொல்றேன், சீஃப் மினிஸ்டரா நடந்துக்கோங்க… சீப் மினிஸ்டரா மாறாதீங்க! நான் மறுபடியும் சொல்றேன், தயவு செஞ்சு சி.எம். சார் அவர்களே, புரோ சி.எம். சார் அவர்களை நீங்க சீஃப் மினிஸ்டராக நடந்துக்கங்க, சீப் மினிஸ்டராக நடந்துக்கங்க!

நீங்க நடத்துகிற தவெக என்பது ஒரு அரசியல் கட்சியே அல்ல. அது ஒரு கார்ப்பரேட் மாபியா! அதுல இன்வெஸ்டிங் பார்ட்னர், வொர்க்கிங் பார்ட்னர், ஸ்லீப்பிங் பார்ட்னர், சீக்ரெட் பார்ட்னர்னு பெரிய கும்பலே இருக்கு. நான் சொல்றேன், அந்த பார்ட்னர்லாம் யாருன்னு உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டை அம்பேலாக்கணும் என்பதுதான் அந்த கார்ப்பரேட் மாபியா கும்பலுடைய டார்கெட்.

தவெக ஆட்சி அமைஞ்ச இந்த நாலு மாசத்தில நாட்டுல நடப்பது என்ன? பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாத காரணத்தினால் விவசாயிகள் போராடிட்டு இருக்காங்க. மீனவர்கள் வாழக்கூடிய பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டப்போற காரணத்தினால மீனவர்கள் போராட்டம். மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு… அதுக்கு பாஸ், எல்லாரும் இந்த கோவிலுக்குள்ள போறதுக்கு, இந்த குடமுழுக்கை போய் பாக்குறதுக்கு பாஸ் கொடுப்பாங்களே… அது எல்லாத்தையும் பழக்க தோஷத்தில பிளாக்ல வித்தாங்களே… பிளாக்ல! அந்த முயற்சி… அதனால பக்தர்கள் எல்லாம் போராட்டம். வார கடைசியில ஊருக்கு போக பேருந்துகள் இல்லாம பயணிகள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், மின்வாரிய ஊழியர்கள் போராட்டம், ஆவின் பால் கிடைக்காமல் போராட்டம்…

பட்டுவேட்டி சட்டையில பந்தா

இது எல்லாத்துக்கும் மகுடம் வெச்ச மாதிரி முதலமைச்சருடைய தொகுதியை தொடங்கி எல்லா தொகுதியிலும் மின்வெட்டுக்கு எதிரா போராட்டம்! ஏழு மணி நேரம் மின்சாரம் இல்ல, எட்டு மணி நேரம் மின்சாரம் இல்ல… வீட்டை விட்டு மக்கள் எல்லாம் இரவுல ரோட்டுல வந்து சாலை மறியல் பண்ணிட்டு இருக்காங்க.

இப்படி மக்களுடைய நிம்மதியை கெடுத்து அலையவிட்டு, முதலமைச்சர் மட்டும் பண்ணையார் மாதிரி பட்டுவேட்டி சட்டையில பந்தா பண்ணிட்டு இருக்கார். அங்க வெள்ளிக்கிழமைனா பாருங்க, ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு டிரஸ் ஜோசியர் சொல்லி இருக்கார். வெள்ளிக்கிழமைனா பண்ணையார் மாதிரி பட்டுவேட்டி கட்டிட்டு பந்தா பண்ணிட்டு இருக்கார். தமிழ்நாட்டு மக்களுடைய, விவசாயிகளுடைய உயிர் பிரச்சனை வாழ்வாதாரத்தில கூட கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காம மௌனமா இருக்கிறாரு. கர்நாடகத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு என்ன பயம் சி.எம். சார்? புரோ… என்ன பயம் சொல்லுங்க? என்ன தயக்கம்? தைரியம் இருந்தா சொல்லுங்க, என்ன தயக்கம்? ரொம்ப பயப்படுறீங்க, சொல்லுங்க!

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள்ல வறட்சி பாதிப்பு அதிகரிச்சு சிறப்பு நிதி ஒதுக்கி இருக்காங்க. குறுவை சிறப்பு தொகுப்புக்கும் வறட்சி நிவாரணத்துக்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சர். இதெல்லாம் பேப்பர் படிச்சு தெரிஞ்சுக்கணும். படிச்ச அப்புறமாவது விவசாயத்துக்கு ஏதாவது செய்யுங்க.

அடுத்து 200 யூனிட் மின்சாரம் இலவசம்னு சொன்னாரு, இப்போ உங்க கரண்ட் பில் குறைஞ்சிருக்கா? ஏறி இருக்கா? பெரும்பான்மையான இடத்தில ஏறிடுச்சு! அது மட்டுமா, விலைவாசி எல்லாமே தாறுமாறா ஏறிடுச்சு. தேர்தலுக்கு முன்ன என்ன விலை, இன்னைக்கு என்ன விலை? இன்னைக்கு காலையில தாராபுரம் நகரத்தில டவுன்ல, நகராட்சியில நான் ரோட் ஷோ போனேன்.

அப்ப ஒரு மளிகை கடையில இறங்கி போய் கேட்டேன்… அரிசி, சர்க்கரை, எண்ணெய், காய்கறிகள் எல்லா விலையும் எப்படின்னு கேட்டேன். கண்ணாபின்னான்னு சொன்னாங்க! நாலு மாசம் முன்ன அரிசி, சர்க்கரை, மளிகை பொருள், காய்கறி விலை என்ன விலை? இப்ப என்ன விலை? இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியுமா?

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய ரிவியூ மீட்டிங் நடத்தி அதை கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சர் என்ன பண்ணாரு? ஃபாரின் ஷூட்டிங் பண்ண போயிட்டாரு, கிளம்பிட்டார்!

இப்ப தமிழ்நாட்டில என்ன உயர்வு தெரியுமா? ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, இடைவிடாத கொலையும் உயர்வு! செய்தியை பார்த்தாலே ஒரே நாள்ல 5 கொலை, 8 கொலை… கொத்து கொத்தா கொல்றாங்க! கொத்து கொத்தா கொல்றாங்க!

போதைப்பொருள் பத்தி போலீசுக்கு தகவல் கொடுத்தா, தகவல் கொடுத்தவங்களே கொல்லப்படுறாங்க. போதை பொருள் வச்சிருந்தவங்க மேல எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில மாசம் கணக்கெடுத்து பார்த்தா, கடந்த சில மாசத்தில 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கு, 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வந்திருக்கு.

ஏராளமான லாக்கப் டெத், ஆணவக் கொலைகள்… வரலாறு காணாத வேகத்தில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கு. உண்மையிலேயே நல்லாட்சி நடந்தா, ‘நடப்பது எங்க ஆட்சி’னு மக்கள் தான் பெருமையா சொல்லணும். ஆனா இப்போ யார் அப்படி பெருமையா சொல்றாங்க தெரியுமா? குற்றவாளிகள் எல்லாம் கெத்தா சொல்றாங்க “இது எங்க ஆட்சி” அப்படின்னு சொல்லிட்டு கத்துறாங்க, சுத்துறாங்க! அந்த அளவுக்குதான் சட்டம் ஒழுங்கு இருக்கு.

சிங்கப்பெண் அதிரடிப் படை எல்லாம் எங்க போச்சு? கடந்த காலம் நடந்ததை விட பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை இப்பதான் பல மடங்கு, பல மடங்கு அதிகரிச்சிட்டு இருக்கு. இது பத்தி எல்லாம் போலீஸ் துறையை கையில் வச்சிட்டு இருக்கக்கூடிய முதலமைச்சருக்கு துளி கூட தெரியாது, துளி கூட கவலை இல்லை.

சட்டம் ஒழுங்கை பத்தி கேள்வி கேட்டா பதில் சொல்லுகிற பொறுப்பை கூட மத்த அமைச்சர் கிட்ட கொடுத்துறார். அரசு பதவியில ஜோசியர் நியமனம், கம்யூனிஸ்ட் கட்சியை குறிவச்சு அரசு ஆணை ஜி.ஓ., சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு தகவலை ஆர்.டி.ஐ.-யில் தராமல் இருக்கக்கூடிய ஒரு அரசு ஆணை, மாநில நெடுஞ்சாலைகள்ல இந்தி பெயர் பலகைகள்… இப்படி பல விஷயங்கள் அறிவிச்சிட்டு யு-டர்ன் அடிச்சிட்டு இருக்கார்.

இதனால என்ன நடக்குது தெரியுமா? நமக்கு வரவேண்டிய முதலீடுகள் எல்லாம் ஆந்திராவுக்கு யு-டர்ன் அடிச்சிட்டு போயிட்டு இருக்கு. ஆட்சினா என்னன்னே தெரியாத ஒரு கூட்டத்து கிட்ட தமிழ்நாடு சிக்கி சீரழிஞ்சிட்டு இருக்கு.

இதுவே நம்ம கழக ஆட்சி அமைஞ்ச போதெல்லாம் மக்களின் தேவைகள் என்னென்னன்னு தெரிஞ்சு திட்டங்களை தீட்டுவோம்.

திமுகவின் திட்டங்கள்

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான் கொங்கு வேளாளர் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தும், அவங்களுடைய பொருளாதார, கல்வி உரிமையை உறுதி செஞ்சார். அதேபோல அருந்ததியின மக்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்து உயர்வு கொடுத்தது கலைஞருடைய ஆட்சி.

சிறுபான்மை சமுதாய மக்கள் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது, அவங்க வாழ்வை ஒளியேற்றியது தலைவர் கலைஞருடைய ஆட்சி!

கடந்த அஞ்சு வருஷத்துல என்னுடைய தலைமையில் இந்த திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிற வகையில் திட்டங்களை செஞ்சோம். இதே தாராபுரத்தில் மட்டுமே பெருமையா சொல்றேன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில 55,745 பேருக்கு 1,000 ரூபாய் இன்றைக்கு வரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறதுனா அது யாருடைய ஆட்சி? உங்க ஸ்டாலினுடைய ஆட்சி… அடியேன் ஸ்டாலினுடைய ஆட்சி!

இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில, முதன் முதலில் கட்டணமில்லாத பேருந்து பயணத்தை ஆட்சிக்கு வந்த முதல் நாளில் தொடங்கி வச்சவன்தான் உங்க முன்னாடி நிக்கிற இந்த ஸ்டாலின்!

அதுமட்டுமா? படிக்கிற மாணவனுக்கு பணம் தடையாக இருக்கக் கூடாதுன்னு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டு வந்து மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்தவன் தான் இந்த ஸ்டாலினுடைய கரம்!

கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தோழி விடுதி, மக்களைத் தேடி மருத்துவம்… சொன்னா இப்படியே சொல்லிக்கிட்டே இருந்தா ஒரு நாள் போதாது. இந்த தாராபுரம் பகுதி தொழில் வளர்ச்சிக்காக மட்டும் 87 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்கோம்.

ஆனா, தவெக ஆட்சிக்கு வந்த அஞ்சு மாசத்தில் கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்கள் எல்லாம் என்ன? எல்லாத்துக்கும் பேர் வச்சாரு வெற்றி வெற்றி வெற்றின்னு… அதான் என்ன? அவங்க அந்த அஞ்சு மாசத்துல என்ன திட்டம் கொண்டு வந்திருக்காங்க தெரியுமா? பெரிய பெரிய திட்டம் கொண்டு வந்திருக்காங்க, நான் மறுக்கல. என்ன தெரியுமா? ‘வெற்றி மின்வெட்டு திட்டம்’, ‘வெற்றி அறிவாள் வெட்டு திட்டம்’, ‘வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்’, ‘வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்’… இப்படித்தான் இருக்கும்.

ஆறு மணி நேரத்தில டெண்டரை குளோஸ் பண்றது. டெண்டர் விடுறதுக்கு முன்னாடியே நாமக்கல் கவிஞர் மாளிகையில பணிகள் நடந்துட்டு இருக்கு… நடந்து முடிஞ்சிருச்சு. மேட்டூர் அணையை திறக்க வரும்போது 5 கோடி ரூபாய் செலவுல சாலை ஓரம் தடுப்புகள் அமைக்கிறது… பேரிகார்ட் போடுறாங்க பாருங்க, 5 கோடி ரூபாய்!

இப்படி புதுவிதமான ஊழலை உருவாக்குற வேலைகளைதான் தவெக ஆட்சியில் நடக்குது. நான் சொல்றேன், தப்பித்தவறி… அது நடக்க போறதுல்ல… தப்பித்தவறி இந்த இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி வெற்றி பெற்றா, இப்ப சொல்றேன்… வெற்றி பெற்றா மின்கட்டணம் உயரும், பால் விலை உயரும், கட்டணம் உயரும், வரிகள் உயரும்! அதனாலதான் சொல்றேன், இந்த இடைத்தேர்தல்ல சரியான அடி கொடுத்தாதான் எம்.எல்.ஏ. வாங்குகிற அந்த ஷாப்பிங்… எம்.எல்.ஏ. ஷாப்பிங் இருக்கு பாருங்க, அதை நிறுத்திட்டு ஆட்சியில கொஞ்சம் கவனமாவது செலுத்துவாங்க. அதனால இந்த இடைத்தேர்தல் என்பது தாராபுரம் தொகுதிக்கானது மட்டும்ல்ல… ஒட்டுமொத்த தமிழ்நாட்டை காப்பாத்தற பொறுப்பும் இந்த தாராபுரம் பகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்குதான்!

இதே உங்க நாட்டுல வாழ்ந்த வீரன் தீரன் சின்னமலை… அந்த மாவீரனுக்கு தளபதியாக இருந்தவர்தான் பொல்லான். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுனாங்க. ஆனா துரோகம்தான் மாவீரன் தீரன் சின்னமலையின் உயிரை பறிச்சது. அதே மாதிரி துரோகம்தான் தாராபுரம் தொகுதியில் இப்போ இடைத்தேர்தல் மூலமாக திணிச்சிருக்கு, ஜனநாயகத்தை சாகடிச்சிருக்கு. இந்த இடைத்தேர்தல் தாராபுரம் மக்களான உங்களின் வாக்கின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கக்கூடிய சவால்!

இந்த ஆணவத்தை அடக்க நீங்க தீர்ப்பளிக்க போகிற நாள்தான் அக்டோபர் 6.

திரும்ப திரும்ப இடைத்தேர்தலை வர வைப்பார்கள்

“நம்முடைய ஒரு வாக்கால என்ன ஆகிடும்” என்று கூட நினைச்சிடாதீங்க. “குழந்தைங்க சொல்லிட்டாங்க, அவங்களுக்காக ஒரு ஓட்டை மாத்தி போடுவோம்”னு நினைக்காதீங்க. அந்த குழந்தைகளோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னு நினைச்சு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!

இந்த தவெகவுக்கு நீங்க தப்பித்தவறி வாக்களிச்சா கூட தமிழ்நாடு முழுக்க திரும்ப திரும்ப இடைத்தேர்தலை வரவைக்க பார்ப்பாங்க. அதுக்கு நாம இடம் கொடுத்து விடக்கூடாது. ஜனநாயகம் காக்க, உங்கள் கண்ணியம் காக்க, தமிழ்நாட்டை காக்க, முக்கியமா தாராபுரம் மக்கள் உங்கள் தன்மானத்தை காக்க நமது வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிச்சு சட்டமன்றத்தில அனுப்பி வைக்கணும்” என வாக்கு சேகரித்தார்.

MK Stalin Speech | பெட்டி பெட்டியா பணம் வாங்கிருக்காங்க | TVK | CM Vijay | Dharapuram | By Election
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share