வைஃபை ஆன் செய்ததும், “ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு.. நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. எலக்ஷன் முடிஞ்சும் பிரசார பாட்டு எதற்கு?
திமுக மீட்டிங்கில கேட்ட பாட்டுங்க ப்ரோ.. இப்ப நானும் திமுகவோட அதிமுக்கியமான மீட்டிங் மேட்டரை பத்திதான் ஷேர் செய்ய போறேன் ப்ரோ..

சட்டசபை தேர்தலில் திமுக 59 இடங்களில் மட்டும்தான் ஜெயிச்சது.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் என 15 சீனியர்கள் தோல்வி அடைந்தது தொண்டர்களை பெரும் அதிர்ச்சியடைய வைச்சது..

இந்த தோல்விக்குப் பிறகு மே 14-ந் தேதி சென்னையில அண்ணா அறிவாலயத்துல மா.செ.க்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருந்தார். அந்த கூட்டத்துல, தேர்தல் முடிவுகளைப் பத்தி கள ஆய்வு செய்ய 18 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு குழுவுக்கு 2 பேர் வீதம் மொத்தம் 36 பேர் கொண்ட 18 குழுக்களும் இவங்களுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுச்சு..

அதோட இல்லாம, udanpirapinkural.in என்ற வெப்சைட்டையும் உருவாக்கி அதிலிலும் திமுக தோல்விக்கான காரணங்களை தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் எழுத்தாகவும் வாய்ஸ் மெசேஜிலும் தெரிவிக்கலாம்னு அறிவிக்கப்பட்டுச்சு..

36 பேர் கொண்ட 18 குழுக்கள் சம்பந்தபட்ட தொகுதி வாரியாக போய், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய கிளை நிர்வாகிகள், தொண்டர்களை நேரடியாக சந்திச்சு கருத்துகளை கேட்டது.. வெப்சைட்டுலயும் கருத்துகள் குவிஞ்சது..

கள ஆய்வுக் குழு தொகுதிகளுக்குப் போய் ஆய்வு செஞ்சுட்டு வந்ததை ஆய்வறிக்கையாக ஸ்டாலினிடம் கொடுத்தாங்க.. வெப்சைட்டுல வந்த கருத்துகளும் தொகுக்கப்பட்டுச்சு..
ஆனாலும் திமுக தலைமை எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறதே… அப்படிங்கிற பேச்சும் எழுந்தது..
அந்த நேரத்துல, “திமுக மா.செ.க்கள், நிர்வாகிகளை மாத்தனும்னு உதயநிதி சொல்றாரு.. ஆனால் அப்படி மாத்தினா அதிருப்தியில இருக்கிறவங்க தவெகவுக்கு போயிடுவாங்கன்னு ஸ்டாலின் நினைக்கிறாரு.. உதயநிதியை செயல் தலைவராக்க போறாரு”ன்னு ஏகப்பட்ட தகவல்கள் ரெக்கை கட்டி பறந்துகிட்டே இருந்துச்சு..

இதற்கிடையில உதயநிதியும் சபரீசனும் கள ஆய்வுக் குழு அறிக்கைகள், வெப்சைட்ல வந்த கருத்துகள் அத்தனையையும் தொகுத்து ஒழுங்குபடுத்தி ஸ்டாலினுடன் ஆலோசனை செஞ்சாங்க.. இதனடிப்படையில இப்ப திமுகவை மறுசீரமைக்கிற ஆபரேஷனை தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின்..
பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டவங்களை புதன்கிழமையன்னைக்கு தொடர்பு கொண்டு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடக்குதுன்னு தகவல் சொல்லப்பட்டுச்சு..
இந்த கூட்டத்தைப் பத்தி நாம ஸ்டாலினுக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்டாலின் வீட்டில் தொடங்கிய ஆலோசனை கூட்டம் 9 மணிக்கு முடிந்தது.இதுல பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ஆ. ராசா, இளைஞரணி செயலாளர் உதயநிதி, மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ,சபரீசன் உள்ளிட்டவங்க கலந்துகிட்டாங்க..
மு.க. ஸ்டாலின் அதிரடி முடிவுகள்
கட்சியை எப்படி மறுசீரமைப்பு செய்யலாம்னு ”ஸ்லைடு ஷோ” மூலம் விவரிக்கப்பட்டுச்சு..

அதாவது,
- 234 தொகுதிகளை 2 ஆக பிரிக்கிறது
- 2 சட்டசபை தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர்னு 117 மா.செ.க்கள் நியமனம்
- மா.செ.க்களின் அதிகபட்ச வயது 70
- சென்னையில் பகுதி செயலாளர்கள், பிற மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்களின் அதிகபட்ச வயது 50
- கிளைச்செயலாளர்களின் அதிகபட்ச வயது 40
- மாவட்டங்களுக்கான தொகுதிகள் ,ஒன்றியங்கள் எது எது? என்று அந்த மா.செ.க்களிடம் அறிக்கை வாங்குவது; அந்த அறிக்கையை தலைமை கழகம் சரி பார்த்து முடிவெடுப்பது
- மாநகர செயலாளர்கள் என்ற பதவி இனி இல்லை
- மாநகர செயலாளர்களுக்கு பதில் மா.செ.க்கள் மட்டும்தான்
- கட்சி பதவிகளுக்கு நியமனம் என்பது இனி இல்லை
- கட்சி பதவிகளுக்கு தேர்தல் மூலம் மட்டுமே தேர்வு
- புதியதாக உருவாக்கப்படும் 117 மாவட்டங்களில் ஆதி திராவிடருக்கு 30%; பெண்களுக்கு 10% ஒதுக்கீடு
இப்படி கட்சியை சீரமைப்பு செய்யலாம்னு பாயிண்ட் பாயிண்ட்டாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுச்சு..
இதை பார்த்த துரைமுருகன் உள்ளிட்ட எல்லாருமே, “சரியாகத்தான் இருக்கிறது.. இதன்படியே செய்யலாம்”னு ஏத்துகிட்டாங்க..
இதனடிப்படையில இனிவரும் நாட்களில் ஸ்டாலினின் அதிரடி ”ஆபரேஷன்” தொடங்க போகுது..
தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்து ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ள சிலரை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைகள் எல்லாம் முடிஞ்ச பிறகு, தேர்தல் தோல்வி பத்தி ஸ்டாலின் ரொம்பவே உருக்கமாக பேச அப்படியே எல்லாரும் உணர்ச்சிவசப்பட… மீட்டிங்கும் முடிஞ்சிருச்சு.. ”ன்னு சொல்றாங்க ப்ரோ.

அறிவாலயத்துல ஆகஸ்ட் 22-ந் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடக்குது.. அந்த கூட்டத்துல இந்த ஆபரேஷனை பத்தி ஸ்டாலின் அறிவிப்பார் அப்படிங்கிற எதிர்பார்ப்பு இருக்குதுங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
