அமைச்சர் என். ஆனந்த் அறை வாசலில் சிவப்பு துணி: காரணம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்தின் அலுவலக அறை வாசலில், கதவு நிலையில் சிவப்பு நிறத்தில் துணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இது தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, அங்கு வருபவர்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என் ஆனந்திற்கு இறை பக்தி அதிகம். அவர் பொதுவாக எந்த ஒரு முக்கிய காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் த.வெ.க. வேட்பாளர் பட்டியலைக்கூட அவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைத்துப் பூஜை செய்த பிறகே, கட்சித் தலைவர் விஜய்யிடம் வழங்கியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

ADVERTISEMENT

சமீபகாலமாகக் காவிரி விவகாரம், மேகதாது அணை விவகாரம் என பல்வேறு சிக்கல்களால் நீர்வளத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் அமைச்சர் வாய் திறக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், நீர்வளத்துறை சார்ந்த நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் ஆனந்த் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட துணியையே தனது அறை வாசலில் கட்டி வைத்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share