“விஜய் பிரதமர் வேட்பாளரா?” – கூட்டணியில் புயலைக் கிளப்பும் ஆதவ் பேச்சு; காங்கிரஸ் அமைச்சர் அளித்த பளிச் பதில்!

Published On:

| By Pandeeswari Gurusamy

விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்ற ஊகத்திற்கு பதில் சொல்ல முடியாது என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தொகுதிகளை 50% உயர்த்தினாலும் வட இந்திய ஆதிக்கம் உருவாகும் சூழலே ஏற்படும். ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று அண்ணா அன்றே முழங்கினார். மாநில நலனுக்காகக் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். 5 முதல் 6 இந்தி பேசும் மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரைத் தேர்வு செய்துவிடலாம் என்ற சூழல் உள்ளது; அது மாற்றப்பட வேண்டும். தென்னிந்தியாவிலிருந்து… ஏன், தமிழ்நாட்டிலிருந்தே எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமாரிடம், ஆதவ் அர்ஜுனாவின் பிரதமர் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு; தென்னிந்தியாவிற்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் பேசியிருக்கலாம்.

ஆனால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவரான ராகுல் காந்தி, 2029-இல் நாட்டின் பிரதமராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதைத் தமிழக வெற்றிக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்பது வெறும் ஊகம், அதற்குப் பதிலளிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share