காவிரி ‘பந்த்’- ஆதரவு தராத ‘கன்னடர்கள்’- விஜய், ஸ்டாலின், இபிஎஸ் படங்களுக்கு அவமரியாதை!

Published On:

| By Mathi

Karnataka Cauvery Bandh: Desecrate photos of Vijay, Stalin, EPS

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்த 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு (Cauvery Bandh) ‘கன்னடர்கள்’ ஆதரவு தரவில்லை. அதேநேரத்தில் சில இடங்களில் போராட்டம் நடத்திய விஷமிகள், தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்களை அவமரியாதை செய்தனர்.

தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் 12,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இந்த உத்தரவுக்கு எதிராக வாட்டாள் நாகராஜ் தலைமையிலான குழு முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

ADVERTISEMENT

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. காவிரி பாசன பகுதிகளான மைசூரு, மண்டியாவில் சில விவசாய அமைப்பினர் மட்டும் போராட்டம் நடத்தினர்.

ஆனால் மைசூரு, மண்டியாவிலும் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கின; பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்து இருந்தன; திரையரங்குகள் மூடப்படவில்லை.

ADVERTISEMENT

பொதுவாக காவிரி முழு அடைப்பின் போது மைசூரு- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்து போக்குவரத்தை கன்னட அமைப்பினர் தடை செய்வர். ஆனால் இந்த முறை ‘அடையாள’ போராட்டங்கள் மட்டுமே சிறிது நேரம் நடைபெற்றது. இதனால் மைசூரு- பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

அதேபோல சுற்றுலா தலங்களும் திறந்தே இருந்தன. வழக்கம் போல சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

ADVERTISEMENT

தமிழக எல்லையான ஓசூர் அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்திய 18 கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக தலைவர்களுக்கு அவமரியாதை

நஞ்சன்கூடு சிவசங்கர் என்பவர் தலைமையிலான கும்பல், தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி படங்களை துடைப்பத்தால் அடித்து அவமரியாதை செய்தனர்.

காவிரி பிரச்சனைக்காக கர்நாடகாவில் அழைப்பு விடுக்கப்படும் முழு அடைப்பு போராட்டங்கள் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கும். ஆனால் இம்முறை கன்னடர்களே, இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share