தமிழ்நாடு அரசின் ”தகைசால் தமிழர்” விருது (Thagaisal Tamilar Award) ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.

கடந்த திமுக ஆட்சியில் 2021-ம் ஆண்டு முதல் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகளில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், இந்த விருதுகளை வழங்கினார்.
- 2021-ம் ஆண்டு முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா
- 2022-ம் ஆண்டு மற்றொரு முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இரா. நல்லகண்ணு
- 2023-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி
- 2024-ம் ஆண்டு மூத்த காங்கிரஸ் தலைவர் முனைவர் குமரி அனந்தன்
- 2025-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தற்போது முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் விஜய் அரசின் முதலாவது ”தகைசால் தமிழர் விருது” நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.
விஜய் அரசின் முதலாவது ‘தகைசால் தமிழர்’ விருது யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
”தகைசால் தமிழர் விருது” யாருக்கு தரலாம்?
முதல்வர் விஜய் அரசின் தகைசால் தமிழர் விருதை யாருக்கு தரலாம் என மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ”தகைசால் தமிழர்” விருது இதுவரை அரசியலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதுவும், திமுக-வின் தோழமை கட்சிகளை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்ப்ட்டது. அதில் மாற்றம் செய்யவேண்டும்.
என்னுடைய பரிந்துரை:
- பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி
- முனைவர் அ பிச்சை
இபா-வின் இலக்கிய பங்களிப்பையும் பன்முகதன்மையையும் அனைவரும் அறிவோம்.
முனைவர் பிச்சை ஒரு காந்தியவாதி. அச்சிந்தனையை பரப்பவேண்டும் என்பதற்காக நீண்ட ஆண்டுகளாக செய்து வருகின்ற எழுத்துப்பணியை அவருடைய தள்ளாத வயதிலும் (91+) செய்துவருகிறார்.
அது மட்டுமின்றி, 40 ஆண்டுகளுக்கு முன்பே, சிறப்பு திறனாளிகளின் பிரச்சினைகளின் நலன்களை அரசுக்கொள்கைகளில் உள்ளடக்கி மாற்றங்கள் கொண்டுவருபவதற்கு பாடுபட்டவர்.
ஒருவருக்குத்தான் இப்பரிசு ஒரு வருடத்தில் கொடுக்கவேண்டும் என்பதான நியதியை வைத்துக்கொள்ள தேவையில்லை. தகுதியானவர்கள் இருந்தால், ஒருவருக்கு மேல் கொடுப்பது என்பது மற்றப் பல பரிசுகளுக்கு நிகழ்ந்துள்ளது. பலமுறை “பாரத ரத்னா” விருது இரண்டு-மூன்று நபர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு டி. ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
