VIDEO: மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ‘தீண்டாமை கொடுமை’!

Published On:

| By Mathi

Untouchability Atrocity Against Mallikarjun Kharge

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்ற இடம் ‘தீட்டுப்பட்டதாக’ கூறி ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா அமைப்பினர் கங்கை நீரை தெளித்து சுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று ஆகஸ்ட் 13-ந் தேதி பேசிய மல்லிகார்ஜூனா கார்கே, “நான் அரசியல் பிரச்சினையாக்க விரும்பவில்லை. நான் ஒரு தலித் என்பதால் என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் யாரிடமும் ஒருபோதும் கூறியதில்லை; யாரிடமும் கெஞ்சியதும் இல்லை. என்னிடம் போராடும் வலிமை இருக்கிறது; நான் போராடுவேன்.

ADVERTISEMENT

ஆனால், ஹல்த்வானியில் நான் நின்ற மேடையைச் சுத்தம் செய்ததன் மூலம், எனக்கு தீண்டாமையின் உணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், நான் அவமதிக்கப்பட்டேன்.

எனது கோரிக்கை இதுதான்.. ஹல்த்வானியில் மேடையைச் சுத்தம் செய்தவர்கள் மீது தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

அப்போது பேசிய மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், “ கார்கே அவமதிக்கப்பட்டது நம் அனைவருகும் அவமதிப்புதான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் போராட்டம்

மல்லிகார்ஜூன கார்கேவை ‘தீண்டாமை’ என்ற பெயரில் அவமதித்ததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த பேராதரவைக் கண்டு பொறாமையடைந்த தீவிர வலதுசாரி அமைப்பினர், திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் எளிய சமூகப் பின்னணியில் இருந்து உயர்ந்தவர் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவர் பங்கேற்றதால் அந்த இடம் “தீட்டுப்பட்டுவிட்டது” என்று கூறி, கங்கை நீரைத் தெளித்து அந்த இடத்தை “சுத்திகரிப்பு” செய்துள்ளனர்.

சாதிய வன்மத்துடனும், தீண்டாமை மனநிலையுடனும் நடத்தப்பட்ட இந்தப் பிற்போக்குத்தனமான செயல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு மட்டுமல்ல; சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி மற்றும் மனித மாண்பை நிலைநாட்டும் இந்திய அரசியலமைப்பிற்கே விடுக்கப்பட்ட சவாலாகும்.

எனவே, இந்த அவமதிப்புச் செயலையும் சாதிய பாகுபாட்டு மனநிலையையும் வன்மையாகக் கண்டித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்தும், நாளை 14.08.2026 மாலை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கண்டன சத்தியாகிரகப் போராட்டமும் நடத்திட வேண்டும்.

மாவட்டத் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் அண்ணல் காந்தியடிகள் சிலையிலிருந்து தொடங்கி, புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு நிறைவு பெறும் வகையில் அமைக்க வேண்டும். அங்கு சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி, சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை மனநிலைக்கு எதிரான காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுதியான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share