கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு புதிய சிக்கல்? – என்ன சொல்கிறார் அமைச்சர் சம்பத்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோவையில் உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தைப் போன்று, தமிழகத்தில் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது அமையும் என்றார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, கோவையில் பன்னாட்டு விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான பணிகளை முன்னாள் துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமாக இருந்த உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்தார்.

அதன்படி, கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் 20.72 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

ADVERTISEMENT

ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்போது ஆய்வுகளை நடத்தினார்.

பின்னர் ஸ்டேடியத்திற்கான மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டது. அதன்படி ஸ்டேடியத்தைக் கட்டுவதற்கான டெண்டரும் கோரப்படும் என கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 30,000 இருக்கைகள் கொண்ட, 20 ஏக்கர் பரப்பளவிலான கிரிக்கெட் மைதானம் மற்றும் 10 ஏக்கர் பரப்பளவிலான வணிக வளாகத்தையும் அமைக்க திமுக அரசு திட்டமிட்டிருந்தது.

ADVERTISEMENT

புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளுக்கு, இந்திய விமான நிலைய ஆணையமும் தடையில்லாச் சான்று வழங்கியது.

பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதால் அப்பணிகளில் தேக்கம் ஏற்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றார். ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டபடி கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கடந்த திமுக ஆட்சியில் கோவையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் இன்னும் முழு வடிவம் பெறவில்லை. இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கோவை, சென்னை அல்லது வேறு எங்கு அமைக்கலாம் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்திடம் கிரிக்கெட் மைதானம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார். அங்கு சாத்தியம் இல்லாத பட்சத்தில் மாற்று இடங்களும் பரிசீலிக்கப்படும் என்றார்.

இதனால் கோவையில் திட்டமிட்டபடி ஒண்டிப்புதூர் பகுதியில் கிரிக்கெட் மைதானம் அமையுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? அல்லது இத்திட்டம் கைவிடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது கோவை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share