தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
முக்கிய தொகுதியாக உள்ள கோவை தொகுதியில் திமுகவிற்கு வெற்றியை உறுதி செய்ய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அக்கட்சியின் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக பொதுமக்களிடையே தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் டி.ஆர்.பி ராஜா இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார்.
அதில், “தமிழ்நாட்டின் கிரிக்கெட்டிற்காக மிகப் பெரிதாக கனவு காண்போம். கடந்த சில நாட்களாக கோவையில் பிரச்சாரம் செய்த போது பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான இளைஞர்களை சந்தித்தோம்.
தடகளம், துப்பாகி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங் போன்று விளையாட்டுகளில் கோவை இளைஞர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கிரிக்கெட்டில் கோவையின் ஆர்வம் ஈடு இணையற்றது. டி.என்.பி.எல் தொடரில் விளையாடி வரும் 3 அணிகளின் உரிமையாளர்கள் இந்த கோவை மண்ணைச் சேர்ந்தவர்கள். இந்திய அணிக்கு விளையாடும் தகுதி படைத்த ஏராளமான வீரர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் இருந்து உருவாகி வருகிறார்கள்.
உலகத்தரம் வாய்ந்த மைதானம்!
கோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு விளையாட்டு கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய ஊக்கம் தேவை. இதற்கான வேலைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அற்புதமான திறன் படைத்த இளைஞர்களை உலகளவில் அறிமுகப்படுத்த கோவையில் ’உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைப்போம்.
இது கிரிக்கெட்டிற்கு மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு, நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
நெட்ஜீரோ மைதானம்!
குறிப்பாக நெட் ஜீரோ எனப்படும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட வேண்டும். மேலும் பருவநிலை மாறுபாட்டை கருத்தில் கொண்டு தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த மைதானம் கலங்கரை விளக்கமாக இருக்கும்.
எனவே கோவை இளைஞர்களின் திறமையை கருத்தில் கொண்டு, உலகளவில் புதிய உச்சத்தை தொடும் வகையில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைத்து தரும்படி முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு தேர்தல் வாக்குறுதியாக…
இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், 2024 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன்.
கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன், கோயம்புத்தூரில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி சென்னையின் சின்னமான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச-தரமான கிரிக்கெட் மைதானமாக இது கோவையில் அமைக்கப்படும்
நமது அரசும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு முயற்சிகளின் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
I am immensely happy that our Honourable CM @mkstalin has included in the DMK election manifesto Tamil Nadu’s long-cherished dream of establishing another international #CricketStadium in our State.
I join the cricket fans of Tamil Nadu, particularly #Coimbatore in expressing… https://t.co/H58gVtwsZ6
— Udhay (@Udhaystalin) April 7, 2024
முதல்வருக்கு நன்றி!
இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும். சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வாக்கிங், அப்பாயின்மென்ட் ரத்து: முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்!
பாஜக வேட்பாளர்களின் அனைத்து தொகுதிகளிலும் சோதனை: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்