வைஃபை ஆன் செய்ததும், “நம்பினோம் உன்னை
பகைவனாய் மாறியதேனோ?”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. வித்தியாசமான பாடலா இருக்கே?
இப்ப ஷேர் செய்ய போறதும் அந்த ரகம்தான்.. ”பங்கு சந்தை தொழில் முதலீட்டு ஆலோசகர், பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது”ன்னு ஒரு நியூஸ் ஓடுச்சு இல்லையா? இதை பத்தி நிறைய பேசிகிட்டு இருக்காங்க..

நாமும் என்னான்னு விசாரிச்சப்ப, பி.ஆர். சுந்தர் கேஸ் விவகாரமும், அதையொட்டின சம்பவங்களும் செம்ம பரபரப்பா இருக்குங்க ப்ரோ..
பி.ஆர். சுந்தர் விவகாரத்தை அவருக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப ஏகப்பட்ட பகீர் தகவல்களை கொட்டுறாங்க.. அதாவது, “பி.ஆர்.சுந்தர் கேஸ்ல சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான நபர் அன்புச்செழியன்.. இவர் கன்பெர்ட் ஐபிஎஸ் அதிகாரி. இவரு இப்போ தமிழ்நாடு டெக்னிக்கல் சர்வீஸ்ல இருக்காரு. இவரு மேல ஏற்கனவே 2015-19 காலகட்டத்துல வாக்கி டாக்கி ஊழல் வழக்கு இருக்கு, அதுல இவர்தான் ஏ-1 குற்றவாளி.
இவங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கல் வாங்கல் நீண்ட்காலமா இருந்திருக்கு.. அதுக்கு மாற்றா அன்புச்செழியன் தனக்கு ஒரு வீடு வாங்கித் தரச் சொல்லியிருக்காரு.
உடனே சுந்தரும் தன்னோட கம்பெனி பெயரிலும், லோன் மூலமாவும் 4000 சதுர அடி வீட்டை ரூ.2.5 கோடியில வாங்கித் தந்தது இல்லாம, இன்டீரியர் வேலைகளுக்கு மட்டும் சுமார் 60 லட்சம் ரூபாயும் கொடுத்திருக்காரு.
ஆனா, கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பணம் முழுவதையும் பி.ஆர். சுந்தர், அன்புச்செழியன்கிட்ட கேட்கிறாரு.. இங்கதான் பிரச்சனையே ஆரம்பமாகுது..

அன்புச்செழியன், ”எங்கிட்ட எப்ப பணம் கொடுத்தீங்க?” ன்னு சொல்லி நழுவி இருக்கிறாரு. இதனால டென்ஷனான பி.ஆர். சுந்தர், நேரா கமிஷனர் அமல்ராஜை போய் சந்திச்சு, “வாக்கி டாக்கி ஊழலில் அன்புச்செழியன் 15 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியிருக்காரு, அதுக்கான எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு”-ன்னு சொல்லியிருக்கிறாரு..
இதை கேட்டுகிட்ட கமிஷனர் அமல்ராஜ், “அன்புச்செழியனை கூப்பிட்டு திட்டுனார், “என்ன இது? இப்படி கீழ்த்தரமா நடந்துக்கிறீங்க? தொலைச்சிருவேன்” அப்படின்னு சொல்லிட்டு கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயரை கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னார்..
நரேந்திரன் நாயரும் பி.ஆர். சுந்தர் வீட்டுக்கு போய் விசாரிச்சார்.. அப்ப பி.ஆர். சுந்தரும் எல்லா ஆதாரங்களையும் வாக்குமூலத்தையும் ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்துட்டாரு..
ஆனாலும் அன்புச்செழியன் மேல போலீஸ் எந்த நடவடிக்கை எதுவும் எடுக்காததால, பி.ஆர். சுந்தர் நேரா டிஜிபிகிட்ட புகார் கொடுத்திருக்காரு. அவரு மறுபடியும் கமிஷனர் அமல்ராஜை பார்க்க சொல்றாரு..
இங்கதான் ட்விஸ்ட்.. பி.ஆர். சுந்தர்கிட்ட கமிஷனர் அமல்ராஜ், ”உங்க மேலேயே ஒரு பெண் கேஸ் கொடுத்துருக்கு.. அதனால இந்த கேஸை நீங்க கோர்ட்டுக்கு போய் பார்த்துக்குங்க”ன்னு சொல்லிடறாரு..
இதற்கு பின்னர்தான் பி.ஆர். சுந்தர் மீது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் பலாத்கார புகார் கொடுக்கிறார். அதில், “பி.ஆர். சுந்தர் என்னை பலாத்காரம் செஞ்சாரு.. அதுக்கு அவங்களோட மனைவியும் உடந்தையா இருந்தாங்க”ன்னு புகார் கொடுக்கிறாங்க.. இந்த புகாரின் அடிப்படையில் பி.ஆர். சுந்தர், அவரது மனைவி மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுச்சு..

இதுக்கு அப்புறமா பி.ஆர். சுந்தர் தரப்புல இருந்து ஆகஸ்ட் 4-ந் தேதி ஒரு விளக்க அறிக்கை வெளிவந்துச்சு.. அதுல என்ன சொல்லி இருக்காங்கன்னா, “பி.ஆர். சுந்தரின் மான்சன் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான குடியிருப்பில் இருக்கும் SP அன்புச்செழியன் காலி செய்ய மறுக்கிறார்.. லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறவர்தான் இந்த அன்புச்செழியன்.

இது தொடர்பாக டிஜிபி, கமிஷனர்கிட்ட பி.ஆர். சுந்தர் புகார் கொடுத்துள்ளார். அன்புச் செழியன் மேல நடவடிக்கை எடுக்கிறேன்னு கமிஷனர் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படலை..
இந்த சொத்து விவகாரம் தொடர்பாக ரெண்டு தரப்புமே லீகல் நோட்டீஸ் கொடுத்திருக்கு..
இப்ப பி.ஆர்.சுந்தரை பழிவாங்கும் வகையில செயல்படுறாங்க.. அன்புச்செழியன், பி.ஆர். சுந்தர் வீட்டுக்கு போய் அவங்க மனைவியை மிரட்டினாரு.. மான்சன் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அன்புச்செழியன்கிட்ட இருந்து சொத்தை மீட்க கோர்ட் நடவடிக்கைகளை எடுத்திருக்கு..
ஆனா அன்புச்செழியன், பி.ஆர். சுந்தரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மூலம் பொய்யான புகாரை கொடுக்க வெச்சிருக்கிறார்.. தன்னோட செல்வாக்கை பயன்படுத்துறார் அன்புச்செழியன். தன் மீதான பலாத்கார குற்றச்சாட்டை பி.ஆர். சுந்தர் திட்டவட்டமாக மறுக்கிறார்.. சொத்து தகராறை திசை திருப்பதான் இந்த மாதிரி அன்புச்செழியன் செயல்படுகிறார்”ன்னு சொல்லப்பட்டிருந்தது.
இதுக்கு பிறகு ஆகஸ்ட் 6-ந் தேதி நேத்து பெங்களூருவில் பி.ஆர். சுந்தரையும் அவரது மனைவியையும் சென்னை ராயப்பேட்டை போலீசார் கைது செஞ்சு சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க..
பின்னர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்ல நேத்து ரெண்டு பேரையும் ஆஜர்படுத்தினாங்க.. பி.ஆர். சுந்தருக்காக வக்கீல் சரவணன் ஆஜரானார்.. இந்த விசாரணையில சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட், “என்னங்க இது நம்புற மாதிரியான கேஸே இல்லையே.. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய கணவருக்கு மனைவியே உடந்தையா இருந்தாங்களா? கொடுத்த ஆதாரமும் சரியில்லை.. அரெஸ்ட் செஞ்ச முறையும் சரி இல்லை..”ன்னு சொன்னதோட பி.ஆர். சுந்தரையும் அவரது மனைவியையும் ரிமாண்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்ப முடியாதுன்னு ஜாமீனில் விடுவிச்சுட்டாரு”ன்னு சொல்றாங்க ப்ரோ..
இன்னொரு பக்கம் என்னான்னா, தன்னோட சோசியல் மீடியா பக்கங்களில் திமுக, திராவிட இயக்கங்களுக்கு ஆதரவாகவும் சிஎம் விஜய்யை கடுமையா விமர்சிச்சும் நிறைய ட்வீட் போட்டிருக்கிறாரு பி.ஆர். சுந்தர்..
அதனால பி.ஆர்.சுந்தரை, அன்புச்செழியன் தூண்டுதலில் பலாத்கார புகாரில்தான் கைது செஞ்சாங்களா? அல்லது சிஎம் விஜய்யை விமர்சிச்சதால ’எல்லாத்துக்கும் சேர்த்து’ கைது செஞ்சாங்களா?ன்னு பட்டிமன்றம் நடந்துகிட்டு இருக்கு..

இப்படி பட்டிமன்றம் நடக்குறதால பிஆர்.சுந்தர் இன்னைக்கு ஒரு ட்வீட் போட்டிருக்கிறாரு.. அதுல, “இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி. குறிப்பாக அண்ணன் சீமானுக்கு நன்றி. இது இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பாக ஆளும் கட்சிக்கும், இதற்கக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”ன்னு சொல்லி முடிவுரை எழுதிட்டாலும் பி.ஆர். சுந்தர் விவகாரத்துல இன்னும் ஏகப்பட்ட ‘உள் விவகாரங்கள்’ வராமலேயே இருக்குதுன்னும் ட்விஸ்ட் வைக்கிறாங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
