ஊழலா… ஆதாரத்தை காட்டுங்க : ஆளும் கட்சிக்கு எ.வ.வேலு பதிலடி!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 7) பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. 

டாஸ்மாக் தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் பேசினார். 

ADVERTISEMENT

717 மது கடைகள் மூடப்பட்டது தொடர்பாகவும், ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடர்பாகவும் பதிலளித்து பேசினார்.. 

அப்போது, இந்தத் துறையில் உள்ள ஊழலை ஒழித்ததால் வருமானம் அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,  “நம்முடைய அமைச்சர் நல்ல விளக்கமாக பேசினார். அதே சமயம் இந்த ஐந்தாண்டு காலங்களில் நீங்கள் ஆண்டுக்கு ஆண்டு இந்த கடைகளை குறைக்க போகிறீர்களா? 

உங்களுடைய மானிய கோரிக்கையில் இந்த ஆண்டு கடைகளை  குறைப்போம் என்று அறிவிக்க போகிறீர்களா?

ADVERTISEMENT

717 கடைகளை ஏற்கனவே குறைத்து விட்டோம் என்ற அறிவிப்பு இருக்கிறது. ஆனால் எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கடைகள் குறைக்கப்பட்டது என்ற விவரம் யாருக்குமே தெரியவில்லை. 

உள்ளூர் அளவில் எந்த பத்திரிகையிலும் இந்த கடைகள் எல்லாம் குறைத்து விட்டோம் என்ற அறிவிப்பு இல்லை” என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ”இந்த விவகாரத்தில் திமுக அதிமுக என்றெல்லாம் கிடையாது. 

காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும்போதே, நேரு ஒரு கமிட்டியை எல்லா மாநிலத்துக்கும் அனுப்பினார்.. சாராய கடைகளை திறக்கவே கூடாது என்றார். 

அப்போது, திருட்டு சாராயம் காவிரி போல் ஓடுகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னால் சாராயக்கடை இருக்க வேண்டும் என்று காங்கிரசை எதிர்த்து தமிழகத்தில் சொன்னார்கள்.

 வேண்டுமென்றே இந்த கருத்து சொல்லப்படவில்லை. திருட்டு சாராயம் குடித்து உடல்நலம் கெட்டுவிடும் என்பதற்காக சொன்னார்கள். 

இன்னொன்று அமைச்சருக்கு வயது குறைவாக இருந்தாலும் விளக்கமாகத்தான் பேசினார். ஆனால் போகிற போக்கில் ஊழல் என்று சொல்லி அடிக்கிறீர்கள். 

ஊழல் என்று யார் பேசினாலும் சரி அதற்குரிய ஆதாரத்தை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும். மேடையில் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் அதில் தவறு இல்லை. 

ஊழல் என்றால் அதற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். அப்படியானால் தான் நாங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக டெண்டர்களுக்கு 3%, 5% கொடுத்தால் தான் பில் கொடுக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி சொன்னதற்கு, ஆதாரத்தை கொடுங்கள், ஆதாரம் இல்லாமல் எதுவும் சொல்லக் கூடாது என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share