ஆன்லைன் மூலம் மது விற்பனையா? சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

துறையில் உள்ள ஊழல்களை ஒழித்ததால் வருமானம் அதிகரித்து வருகிறது; இன்னும் அதிகமான வருமானம் வரும் என அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், “தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்தார்கள். பள்ளி, பேருந்து நிலையம் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அருகாமையில் இருக்கும் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கே இருக்கும் அதிகாரிகளின் தவறா என்று தெரியவில்லை; வருவாயை மட்டுமே குறிக்கோளாக வைத்து கடைகள் இயங்கி வருகின்றன.

ADVERTISEMENT

செஞ்சி பேரூராட்சியில் ‘சாணக்யா’ என்ற பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது; அதிலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாகவே ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அதேபோல், வரிக்கல் என்ற ஊராட்சியில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகாமையில் 300 மீட்டர் தொலைவில் ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சட்டவிரோதமாக, உங்களது சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள். உடனடியாக நடவடிக்கை எடுத்து இக்கடைகளை அப்புறப்படுத்தவோ அல்லது இடமாற்றம் செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதற்குப் பதிலளித்த மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் “தமிழக அரசு சார்பில் மூடப்பட்ட 717 கடைகளின் எண்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இது மதுக்கடைகளுக்கு எதிரான அரசுதான். மக்களுக்குப் பிரச்சினை தரும் கடைகள் குறித்து நீங்கள் தகவல் பகிர்ந்தால், அக்கடைகளை இடம் மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், “ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடங்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு பாமக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறது” என்றார்.

அப்போது பேசிய அமைச்சர், “பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகமாக வாங்குவது தொடர்பாகப் புகார்கள் உள்ளன. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடர்களில், கடந்த ஆட்சிக் காலத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் தெரிவித்த பதில்களின்படி, 2011-லிருந்தே இந்தப் பிரச்சினை உள்ளது. இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்; அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றனர். ஆனால், யாரும் அந்தப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் போகவில்லை.

ADVERTISEMENT

ஆன்லைனில் மது விற்பனை என்பது கிடையாது; இது கேஷ்லெஸ் டிரான்சேக்ஷன் (Cashless Transaction – டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை) மட்டுமே. நீண்ட நாட்களாகப் ரொக்கப் பணப்பரிவர்த்தனை வேண்டாம் என்று கூறப்பட்டு வந்ததற்கு ஒரு தீர்வு காண்பதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. விரும்பும் நுகர்வோர்கள் அந்தக் கடைக்கு முன் சென்று, கடையில் எண்ணைக் கொடுத்தாலோ அல்லது Near by என்று கொடுத்தாலோ அந்த கடை எண் வந்துவிடும். அங்கு நுகர்வோர் விரும்பும் பொருள் இருக்கும் பட்சத்தில், அதைத் தேர்ந்தெடுத்துப் பணத்தை அனுப்பிவிட்டு QR குறியீட்டைக் காட்டினால் அந்தப் பொருளைக் கொடுப்பார்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினர் தவறான கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டாம். என்ன சந்தேகம் இருந்து கேட்டாலும் அதை விளக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.

மேலும் “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படாததற்குக் காரணம், இந்தியா முழுவதுமே மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதால்தான். இங்கு மதுவிலக்கைக் கொண்டு வரும்போது பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் தமிழகத்திற்குள் வந்தது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தன. எங்களது அரசு மக்களுக்கு மதுவை எளிதாகக் கிடைக்கும் வண்ணம் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. தவெக அரசு மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என்று எங்கும் சொன்னது கிடையாது; மதுவினால் வருமானம் உயர்வதைக் கண்டு சந்தோஷப்பட்டதும் கிடையாது. 717 கடைகளை மூடிய பிறகும் எப்படி வருமானம் அதிகரித்தது என்று சட்டமன்ற உறுப்பினர் கேட்டார். இந்தத் துறையில் உள்ள ஊழல்களை ஒழித்ததால் வருமானம் அதிகரித்து வருகிறது; இன்னும் அதிகமான வருமானம் வரும்” என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு, “அமைச்சர் டாஸ்மாக்கில் பல்வேறு ஊழல்களை நிறுத்தியுள்ளார். அதனால்தான் வருமானம் அதிகரித்துள்ளது. இந்த அரசு மதுக் கொள்கைக்கு எதிரான அரசு என்று தெரிவித்துள்ளார். ஆனால், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்தக் கடைகளைக் குறைப்போம் என்று அறிவிக்கப் போகிறீர்களா? காரணம், ‘717 கடைகளைக் குறைத்துவிட்டோம்’ என்று அறிவிப்பு மட்டுமே உள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்தக் கடைகளைக் குறைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. எண்களை ஆன்லைனில் போட்டிருக்கிறோம் என்கிறீர்கள்; உள்ளூர் பத்திரிகைகளில் இது குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “மதுவிலக்கைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பதை நாடறியும். மதுவிலக்கை முதன்முதலில் கொண்டு வந்தவர்கள் நீங்கள்தான். இப்போது அதற்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர்களும் நீங்கள்தான்” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய எ.வ.வேலு, “அவைமுன்னவர் தெளிவான ஒரு உண்மையைத் தெரிவித்துள்ளார். இதில் திமுக, அதிமுக என்பதெல்லாம் கிடையாது. காங்கிரஸ் பேரியக்கம் ஆண்டுகொண்டிருந்தபோது நேரு ஒரு கமிட்டியை அனுப்பினார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தினர் ஆட்சியில் திருட்டுச் சாராயம் காவிரி ஆறைப் போல ஓடுகிறது; அதைக்கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சாராயக்கடை இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஏற்கனவே அதிமுகவில் அமைச்சராக நீங்கள் இருந்த காலகட்டத்திலும் இது நடைபெற்றதுதான். அப்போதே நீங்கள் அறிவுரை சொல்லி வேண்டாம் என்று தெரிவித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டுப் போகிற போக்கில் ‘ஊழல்’ என்று பேசுகிறீர்கள். நான் இப்போதும் சொல்கிறேன், ஊழல் என்று அவையில் யார் பேசினாலும் சரி, அதற்கான ஆதாரத்தைச் சட்டமன்றத்தில் தர வேண்டும். மேடைகளில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், அதில் தவறில்லை; ஆனால், ஊழல் என்று சட்டப்பேரவையில் பேசினால் ஆதாரம் தர வேண்டும். ஆதாரத்தைக் கொடுத்தால்தானே அடுத்தகட்டத்திற்கு நாங்கள் போக முடியும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மதுவிலக்கு என்பதும் போதையில்லா தமிழகம் என்பதும் எங்களது கொள்கை ஆட்சிக்கு வந்த போதும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் மது தொழிலில் ஈடுபட்டது கிடையாது. திமுக பொருளார், திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாராய ஆலை நடத்துகிறார்களா இல்லையா? சாராய ஆலையை நடத்தி கொண்டு டாஸ்மாக் மூலம் ஆர்டர்களை யார் வாங்குகிறார்கள். இதற்கு மேல் என்ன ஆதாரம் என்று கேள்வி எழுப்பினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share