தமிழக சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 7) மூன்றாவது நாளாக கூடியது.
முதலில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து மேகதாது, காவிரி, பயிர் கடன் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசுகையில், ”நிதி அமைச்சர் கையில் ஜெபமாலையுடன் வந்து நிதிநிலை அறிக்கையை வாசித்தார். வேளாண் துறை அமைச்சர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு லட்டு, புளியோதரையோடு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற பேரறிஞர் அண்ணாவின் வழியில் வந்தவர்கள் நாங்கள்.
திராவிட மாடல் ஆட்சியை வட மாநிலத்திற்கும் உணர்த்தியவர் எங்கள் தலைவர் ஸ்டாலின்.
அந்த தலைவர் எங்கே என்று கேட்கின்றவர்களுக்கெல்லாம் என்னுடைய உரையிலே எங்கெங்கெல்லாம் அவர் இருக்கிறார், என்பதை கூற இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து தனக்கு பேச வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ ரகுபதி, “அவர் எனது நீண்ட கால நண்பர். அன்றைக்கே அவர் இந்த பதிவியில் உட்கார வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். இன்று அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்” என்று வாழ்த்து கூறினார்.
மேலும் அவர், “நாங்கள் வெளிப்படையாக செயல்படுகிறவர்கள். ஒளிவு மறைவு கிடையாது என்று சொல்கிறீர்கள். ஆனால் தகவல் உரிமை ஆணைய உறுப்பினர்களை நியமிக்காமல் இருக்கிறீர்கள். ஏன் அவர்களை நியமிக்கவில்லை. தகவல் உரிமை ச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியதற்கு ஏன் பதில் தரவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் பல்வேறு பொறுப்புகளில் வைத்திருக்கிறீர்கள். அதைப் பற்றிய தகவல்களை கேட்டபோது, தகவல் உரிமை ஆணையத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். எனவே தகவல் உரிமை ஆணையம் விரைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் மக்கள் பல செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி தொடர்பாக ரகுபதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் மரிய வில்சன் ஆகியோர் பதிலளித்தனர்.
பத்திரிக்கை செய்திகள் அடிப்படையில் பேச வேண்டாம் என்று அமைச்சர்கள் கூறியதற்கு, பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்து மட்டுமல்ல பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் இதை சொன்னோம் என்று ரகுபதி கூறினார்.
அப்போது ஆதாரமில்லாமல் எதையும் பேச வேண்டாம் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
உடனே ரகுபதி, ”சோசியல் மீடியாவில் வருவதை பேச வேண்டாம் ”என்று சொல்கிறீர்கள்.
”அந்த சோசியல் மீடியாவில் பொய்யாக போட்டுத்தான் நாங்கள் இங்கே உட்கார்ந்து இருக்கிறோம் நீங்கள் அங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள்” என்று சொன்னார்.
இதனை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
உடனே எழுந்து பதிலளித்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், “சோசியல் மீடியாவை நீங்கள் கையில் வைத்திருப்பதால் தான், நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்… நாங்கள் இங்கே இருக்கிறோம். சோசியல் மீடியா எங்களுக்கு இல்லை, உங்களுக்குத்தான்” என்று பதில் அளித்தார்.
இதனை முதல்வர் கவனித்து மவுனமாக சிரித்துக் கொண்டே இருந்தார்.
தொடர்ந்து சபாநாயகர் சப்ஜெக்ட்டுக்குள் வாங்க என்று கூறியதும், “வளர்ந்து வரும் இளம் காண்ட்ராக்டர்களுக்காக நாங்கள் பல்வேறு விதிமுறைகளை எல்லாம் தளர்த்தி இருக்கிறோம். டெண்டர்களில் ஆரோக்கியமான போட்டி உருவாகும். அதனால் அரசின் வீண் செலவுகள் குறையும் என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். ஆரோக்கியமான போட்டி உருவாகும் என்று சொல்லும் போது வீண் செலவு குறையும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை.
பட்ஜெட்டில் கசிவு… கசிவு… என்று நிறைய இருக்கிறது. கட்டிடத்தில் கசிவு இருந்தால் சொல்வார்கள். ஆனால் இங்கே புது வார்த்தை போல் கண்டுபிடித்து இருக்கிறீர்கள். இதை என்னவென்று சொல்வது” என்று ரகுபதி குறிப்பிட்டபோது,
கசிவு என்பதற்கு நிதியமைச்சர் விளக்கமளித்தார்.
“நடுவில் நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால்… நேரம் வளர்ந்து கொண்டே போகும். அப்போது உங்களாலும் பேசி முடிக்க முடியாது, மற்றவர்களுக்கும் பேச நேரம் கிடைக்காது.
நீங்கள் கசிவு, கசிவு என்று கேட்கிறீர்கள்… அந்த லீக்கேஜஸ் பேப்பர்கள் எல்லாம் முதல்வர் முன் இருக்கிறது. எப்போது அதைப்பற்றி பேச வேண்டும் என்று முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்.
மூன்று துறைகளில் ஆடிட்டிங் முடிந்து இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு ஆடிட்டிங் நடந்திருக்கிறது என்று எனக்கு தெரியாது.
நீங்கள் இப்படி எல்லாம் கேட்பீர்கள் என்று ஏற்கனவே முதல்வருக்கு தெரிந்திருக்கிறது போல. இதையெல்லாம் அவர் ஏற்கனவே கேட்டுவிட்டார். அவர் முன் எல்லாம் ரிப்போர்ட்டுகளும் ரெடியாக இருக்கிறது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பார்ட்டி பண்டு என்று சொன்னவுடன் நீங்கள் எல்லாம் எழுந்து சென்று விட்டீர்கள். இந்த முறை அதுபோல் நடக்காது. வெளிப்படையாக எல்லாவற்றையும் முதல்வர் அறிவிப்பார். அதை படிப்பதற்கே உங்களுக்கு 100 நாட்கள் ஆகிவிடும். அதை முடித்துவிட்டு வந்து பேசுங்கள் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்” என்றார்.
இதன்பின் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, “நீர்வளத் துறையில் மூன்று சதவிகிதம் கொடுத்தால் தான் பில். பொதுப்பணித்துறையில் ஐந்து சதவிகிதம் என்றால்தான் பில் என்று சொல்கிறார்கள்” என்றார்.
இதற்கு உடனே எழுந்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், “அதெல்லாம் பழைய காலம். எதுவாக இருந்தாலும் அவர் ஆதாரமாக சொல்ல வேண்டும். இப்போது ஒரு ரூபாய் நாங்கள் வாங்கினால் கூட, எங்களை இந்த இடத்தில் முதலமைச்சர் உட்கார வைக்க மாட்டார். அதனால் ஆதாரத்துடன் அவர் பேச வேண்டும். நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். எதுவுமே இல்லாமல் பேசினால் எப்படி” என்றார்.
உடனே வழக்கறிஞர்களை எல்லாம் அப்படித்தானே நியமித்திருக்கிறீர்கள் என்று திமுகவிடமிருந்து குரல் வந்தபோது, ”ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என்று தான் சொல்கிறோம். பில்லுக்கு என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் அது பழக்க தோஷமாக இருக்கலாம்” என பதில் அளித்தார் அமைச்சர் ஆனந்த்.
இதற்கு ரகுபதி, ”அது உங்கள் தோஷமாக இருக்கலாம்” என்று கூறியதும் குறுகிட்ட சபாநாயகர் நிதிநிலை அறிக்கை மீது மட்டும் பேசுங்கள் என்று உத்தரவிட்டார்.
உடனே ரகுபதி, “நிதிநிலை அறிக்கையில் தான் சொல்லி இருக்கிறீர்கள், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விட மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் சனிக்கிழமை அன்று பனையூரில் நடக்கிற வாரச் சந்தையை போய் பார்த்தால் இதற்கு முன்னால் தொட்டவர்கள் எல்லாரும் தான் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று பேச, இதை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பனையூரை பற்றி உறுப்பினர் பேசியிருக்கிறார். அவரும் அங்கே இருந்து தான் இங்கே மாறி இருக்கிறார் என்பது நாடறியும்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து சபாநாயகர் ரகுபதியிடம், தயவுசெய்து சப்ஜெக்டுக்குள் வாங்க என்று சொன்னதும்… தொட்டால் விடமாட்டோம் என்பதெல்லாம் சப்ஜெக்ட் தானே. நிதிநிலை அறிக்கையில்தான் அது இருக்கிறது. அதிலிருந்து தான் பேசுகிறேன். இல்லையென்றால் வேறு ஒரு நிதிநிலை அறிக்கை கொடுங்கள். அதை வைத்து பேசுகிறேன் என்று கூறியதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இதையும் சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.
இவ்வாறு சட்டப்பேரவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
