திடீர் பரபரப்பு.. திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சிக்கல்!

Published On:

| By Mathi

DMK MLA Markandeyan

”சட்டசபைக்குள் முதல்வர் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன்” என்று பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்புவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்:

ADVERTISEMENT

அமைச்சர் நிர்மல்குமார்: உறுப்பினர் (மார்க்கண்டேயன், திமுக) சிறைக்கதவுக்கு பின்னால் இருந்து அவைக்கு வந்ததாக தெரிவித்தார். அவர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது அதைப்பற்றி பேச வேண்டாம், இந்த அவை குறித்தும் முதலமைச்சர் குறித்தும் பொதுவெளியில் கடந்த மாதம் மார்க்கண்டேயன் அவதூறாக மோசமாக பேசியிருந்தார். அதனால்
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: காலையிலேயே சட்டமன்ற உறுப்பினர் (மார்க்கண்டேயன்) தொடர்பாக நாங்கள் ஒரு கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அதை சபாநாயகர் தெரிவிப்பார்.

ADVERTISEMENT

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: பொதுப்பணித்துறை அமைச்சர் காலையில் என்னை சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வெளியில் பேசிய பேச்சு அவையின் மாண்பை குறைப்பதாகவும், அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும், சட்டமன்ற மாண்பினை குறைப்பதாக இருப்பதும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை கொடுத்திருக்கிறார்.

உறுப்பினர் மார்க்கண்டேயன் இங்கே அவையில் சிறப்பான கருத்துக்களை எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். ஆனால் வெளியில் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதை அனைவரும் ஊடகங்களிலே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த பேச்சு முடிந்தவுடன் அந்த வன்முறை பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலபேர் கடிதமும் எழுதியிருந்தார்கள்.

ADVERTISEMENT

தொலைபேசி மூலமாகவும் எப்படி நீங்கள் சும்மா இருக்க முடியும் என்றெல்லாம் கேட்டார்கள்.

இதிலே மிகவும் மனமும் வருந்துகிற ஒரு செய்தி என்னவென்றால், மாண்புமிகு உறுப்பினர் இந்த அவையிலே இப்போது எல்லோரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லோரும் ரொம்ப உன்னிப்பாக அவருடைய பேச்சு ஆர்வமாக கேட்கக்கூடிய அளவுக்கு இங்கே தரமான ஒரு பேச்சாக பேசுகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் வெளியில் அவர் பேசிய பேச்சு என்பது என்னை போன்ற, உங்களை போன்ற அனைவருடைய மனதிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

“சட்டமன்றத்துக்குள்ள வச்சு பார்த்துக்க போறோம்டா. நாங்க என்ன கோமாளி பையன் நினைச்சுட்டு இருக்கீயா? சட்டமன்றத்தில நாம பயந்து ஓடுறமா?” இதான் அவருடைய பேச்சினுடைய ஒரு சாராம்சம்.

இது குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத்துக்குள்ளே வைத்து உனக்கு ”எலும்பு இருக்காது” என்று ஒருத்தர் சொன்னால் அது நியாயம்தானா என்று யோசிங்க.

ஆபாசமான பேச்சும், ஆபத்தை விளைவிக்கிற பேச்சும், வன்முறையை தூண்டுகிற பேச்சுகளாலே நாம் என்ன சாதித்து விட முடியும்?

மாண்புமிகு முதலமைச்சரை பற்றியும், அவருடைய எலும்பை உடைப்பேன் என்று சொன்ன உடனே, அமைச்சர் வன்னி அரசு அடுத்த நாள், எல்லாருக்கும் எலும்பு இருக்குன்னு ஒரு அறிக்கை கொடுத்தார். அப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் விரோதங்களை வளர்ப்பதும், வன்முறையை தூண்டுவதும் சரியல்ல.. இந்த அவைக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது.

இந்த அவைக்குள்ளேயே அதை நடத்துவேன் என்று சொல்லி காட்டுகிற அந்த சொல்லாடலும், அது குறித்து அவர் பேசிய அந்த வேகமும்… சரியல்ல.

இரண்டு விதமான நடவடிக்கை என் முன்னாலே இருக்கிறது. அவையிலேயே அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டு பெரும்பான்மையை வைத்து நடவடிக்கை என்ன வேணாலும் எடுக்கலாம் அல்லது உரிமைக்குழுவுக்கு அனுப்பலாம்.

என்னை பொறுத்தவரைக்கும் முறையான விசாரணை நடைபெற்று, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு, அதற்கு பின்னே என்ன செய்யலாம் என்ற அந்த முடிவோடு தான் இங்கே அமர்ந்திருக்கின்றேன்.

பொதுவாகவே, இந்த ஆபாசமான பேச்சும் அல்லது அருவருக்கத்தக்க வன்முறை பேச்சுக்களும் தவிர்க்கப்பட வேண்டும்.

சில காலம் காங்கிரசில் இருந்தேன். வன்முறையை வளர்க்கின்ற பேச்சை எந்த கட்சியினுடைய உறுப்பினர் பேசியிருந்தாலும், முதலில் அந்த கட்சித் தலைமை கண்டிக்க வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டார். காலையில் என் மனைவியிடம் நான் சொன்னேன். அந்த காட்சியை பார்த்தவுடன் நான் கலங்கி விட்டேன் என்று சொன்னேன். அப்போ என் மனைவி சொன்னார்கள், இவ்வளவு பெரிய வயதானவர்.. அவர் என்ன ஓடியா போயிட போறாரு? எதற்காக வந்து இரவு நேரத்திலே வந்து கைது செய்ய வேண்டும்? இது தவறு என்று என் மனைவி சொன்னார்கள்.

அவர்கள் வந்து புரட்சித்தலைவர் மீது அவ்வளவு ஆழ்ந்த பற்று கொண்டவர்கள். அந்த கட்சி மீது அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கையும், உறுப்பினராக இருந்தவர்கள். அந்த வார்த்தையை அவர் சொல்லிவிட்டு, இதெல்லாம் தப்புங்க என்று சொன்னார்கள்.

உடனே மூப்பனார் அவர்களிடம் இது குறித்து உடனடியாக நீங்கள் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேன். கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சில பேர், கொடுக்க வேண்டாம் என்று சில பேர். பொருள் எதுவாக இருந்தாலும், வழக்கு எதுவாக இருந்தாலும், ஒரு வயது முதிர்ந்தவரை, இந்த தமிழ்நாட்டுக்காக இவ்வளவு உழைத்தவரை இரவு நேரத்திலே கைது செய்து அழைத்து போனது தவறு. அந்த தவறை நீங்கள் சுட்டிக்காட்டாவிட்டால் யார் சுட்டிக்காட்ட முடியும் என்று அறிக்கை கொடுக்க வைத்தேன்.

இதனை நான் சொல்வதற்கு காரணம் என்ன என்று சொன்னால், தவறு எங்கே நடந்தாலும் அந்த கட்சித் தலைமை கண்டிக்க வேண்டும்.

சபை உரிமைக்குழு இப்போது இல்லை. சபை உரிமைக்குழு அமைக்கப்படட்டும். அப்படி அமைக்கப்பட்ட பிறகு, அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு, இந்த பிரச்சனையை நான் அவை உரிமைக்குழுவுக்கு அனுப்பி விடுகிறேன்.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு: அரசியலில் இருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாக யாராக இருந்தாலும் சரி, வெளியிலே பொதுக்கூட்டங்களிலே பேசுகிற பொழுது, உணர்ச்சி வசப்பட்டு சில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அது சம்பந்தமாக காவல்துறையின் சார்பாக வழக்குகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு, அது நீதிமன்றத்திற்கு போய், அது சரியா, தப்பா அல்லது தவறு என்று சொன்னால், அதற்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது.

அதே நேரத்திலே, இங்கே சட்டமன்றத்திலே ஏதாவது தவறாக பேசி இருந்து, மனம் புண்படுத்தும் அளவுக்கு உள்ளே இருக்கிற உறுப்பினர்கள் பேசுகிற பொழுதுதான், பேரவைத் தலைவர் அவர்கள் உரிமைக்குழுவுக்கு அனுப்பி, உரிமைக்குழுவில் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதை நீங்கள் தீர்ப்பாக வழங்குகின்ற வாய்ப்புதான் இதுவரைக்கும் இருந்திருக்கிறது.

ஒரே பிரச்சனைக்கு இரண்டு இடங்களிலே வழக்கு பதிவது என்பது, இரண்டு இடங்களிலே தண்டனை வழங்குவது என்பது, இதுவரைக்கும் இல்லாத ஒன்று.

நம்முடைய மார்கண்டேயன் அவர்களை பொறுத்தளவுக்கு பொதுக்கூட்டத்திலே வெளியிலே பேசியிருக்கிறார். அது சம்பந்தமாக தமிழ்நாட்டின் காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் ஏறத்தாழ 16 நாள் நீதிமன்றக் காவலில் இருந்திருக்கிறார்கள். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கு என்ன தீர்ப்பு வழங்குகிறதோ, அதை அவர் அனுபவிக்கப் போகிறார்.

ஆனால் அது சம்பந்தமாக நம்முடைய மாண்புமிகு பேரவைத் தலைவருடைய தலைமையில் இருக்கிற இந்த அவையிலே, அது சம்பந்தமாக நாம் ஆய்வு செய்வதுன்பதோ, அது குறித்து நாம் நம்முடைய கருத்தை வெளிப்படுத்துவது என்பது இதுவரைக்கும் இல்லாத ஒன்று. ஆகையால் நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: ஒரு நிகழ்வை உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். அவையைப் பற்றியும், அவையில் உள்ளதை பற்றியும் ஒரு பத்திரிகையாளர், பத்திரிகை உரிமையாளர் பேசியதற்காக, அந்த பிரச்சனை உரிமைக்குழுவுக்கு எடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டதை நாடே அறியும்.

வெளியிலே பேசியது சட்டமன்றத்தை பற்றியதாக இருந்தால், சட்டமன்ற உறுப்பினர் மாண்பை குறைப்பதாக இருந்தால், சட்டமன்றத்தின் பாதுகாப்பை குறைப்பதாக இருந்தால், நிச்சயமாக அது என்னுடைய கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் உரிமைக்குழு அனுப்புகிறோம். உரிமைக்குழு விசாரிக்கட்டும். பதில் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்.

வெளியிலே நடந்த வன்முறை பேச்சுக்கு காவல்துறை எடுத்து இருக்கிற நடவடிக்கை வேறு. இங்கே நாம் எடுக்கிற நடவடிக்கை, இந்த சபையின் மாண்பை குறைக்கின்ற வகையில் உறுப்பினர் பேசியிருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி மட்டும்தான். வெளியே பேசிய பேச்சு, இந்த சபையின் மாண்பையும், சபையின் பாதுகாப்புடைய உறுப்பினரையும் பாதுகாப்பை பற்றியது. உரிமைக்குழுவுக்கு அனுப்பி விடுகிறேன். அங்கே விசாரணை நடைபெறட்டும். முடிவு வரட்டும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற மிகப்பெரிய வரிகளுக்கு சொந்தக்காரர் பேரறிஞர் அண்ணா.

பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மடியில் விளையாடி, அரசியல் படித்து, மாபெரும் ஆலமரமாக இருக்கிற எங்களுடைய கட்சியினுடைய தானைத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்கிற போது, ”மார்கண்டேயன் முதலமைச்சர் எது பேசி இருந்தாலும் கூட, நீங்கள் முதல்வரை இவ்வளவு கடினமான வார்த்தைகளால் பேசி இருக்கக் கூடாது” என்றார்.

அதைப்போன்று என்னை சிறைச்சாலையில் பார்க்க வருகிறபோது, எவ்வளவு மாற்று அரசியல் கருத்துக்கள் இருந்தாலும் கூட, எங்களது எதிர்கட்சியினுடைய தலைவர், மிகப்பெரிய போராட்டக்காரருக்கு சொந்தக்காரர், ஈட்டியே இதயத்தில் பாய்ந்தாலும் அதை எடுத்துவிட்டு ஓடுகிற வல்லரசுக்கு சொந்தக்காரர் உதயநிதி ஸ்டாலின் என்னை சிறைச்சாலையில், பாளையங்கோட்டையில் பார்க்கிறபோது, ”நீங்கள் முதலமைச்சரை இந்த அளவுக்கு பேசியிருக்க வேண்டாம்” என்று சொன்னார்.

எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும், ”எவ்வளவுதான் இருந்தாலும் கூட, முதலமைச்சர் பேசியிருந்தால் அதற்கு நாம் அறிவுப்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும், கடினமான வார்த்தைகளை பேசி இருக்க வேண்டாம்” என்றுதான் சொன்னார்.

எங்களுடைய முதன்மை செயலாளர் நேரு அவர்களும், எங்களுடைய கொறடா வேலு ஐயா அவர்களும் கூட, நாம் பண்பட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் சொன்னார்களே என்பதை, எங்கள் தலைவர்கள் எவ்வளவு மாட்சிமைக்குரியவர்கள் என்பதை இந்த அவையில் நான் பதிய வைக்க விரும்புகிறேன்.

அதே நேரத்திலே, வீரபாண்டிய கட்டபொம்மனும் பிறந்த ஊரிலே நான் பிறந்தவன். வரியை கேட்கும்போது உனக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும்? எங்களது பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா? என்று கேட்டார். அவர் படையில் இருக்கக்கூடிய வீரன் சுந்தரலிங்கம் தான் முதல்முதல் சூசைட் பாம்.

எங்கள் ஊரில் இருக்கக்கூடிய வ.உ.சிதம்பரனார் தான் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிர்த்து கப்பலை நடத்தினார்.

பவர்ஃபுல் எனர்ஜெடிக் லீடர்ஸ் வாழ்ந்த அந்த கரிசல் கந்தக பூமியில் இருக்கிற நான், இந்த அவையினுடைய கதவுகள் பூட்டப்படும் என்று சொன்னபோது, என்னை அறியாமல் வந்த வார்த்தைகளுக்கு நீங்கள் அருள் கூர்ந்து அதை மறந்து விட வேண்டும் என்று கேட்டு நிறைவு செய்கிறேன்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share