எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மார்ச் 22 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை திருச்சியில் தொடங்கிய ஸ்டாலின்… தொடர்ந்து தமிழகம் முழுமையும் பயணித்து வருகிறார். அந்த வகையில் விழுப்புரத்தில் ஏப்ரல் 5 பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அன்று (ஏப்ரல் 5) மாலை சென்னையிலிருந்து கிளம்பி இரவு 7 மணிக்கு விக்கிரவாண்டியின் வி.சாலையில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். பிரச்சாரத்தை 8 மணிக்கு முடித்துக்கொண்டு 8:10 மணியளவில் அரசூர்-புதுப்பேட்டை-பண்ருட்டி வழியாக கடலூர் நோக்கி பயணித்த அவர் இரவு 10 மணிக்குத்தான் கடலூர் சென்றடைந்தார்.
இயல்பாக ஒரு மணிநேரத்தில் செல்ல வேண்டிய கான்வாய், கடலூரை அடைவதற்கு இரண்டு மணி நேரம் ஆகியுள்ளது. ஆங்காங்கே திரண்டு நின்று கட்சியினரும், மக்களும் கொடுத்த வரவேற்பு ஒரு காரணம் என்றால் அதிக தூரம், அதிக வேகத்தில் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
கடலூரை அடைந்தபிறகு அங்கிருக்கும் சி.கே.ஸ்கூல் வளாகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் இரவு தங்கினார். இரவு அங்கு யாரையும் அவர் சந்திக்கவில்லை.
அதன்பிறகு ஏப்ரல் 6 காலை 10:30 மணியளவில் நடைபயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். காலை நடைப் பயிற்சியின்போது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களோடு உரையாடி, தேனீர் கடையில் தேனீர் அருந்தி, மக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வார் முதல்வர். ஆனால் நேற்று வாக்கிங்கை ரத்து செய்துவிட்டார்.
மேலும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்ட கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் முக்கியப் பிரமுகர்களை சந்திக்க நேரம் கொடுத்திருந்தார். நிர்வாகிகள் காலையிலே வந்து காத்திருந்தனர்.
ஆனால் நேற்று காலை 8:30 மணியளவில் புதுச்சேரி அகர்வால் மருத்துவமனையிலிருந்து சிறப்பு கண் மருத்துவர்கள் கடலூர் கெஸ்ட் ஹவுசுக்கு வந்தனர். முதல்வருக்கு வழக்கமான பரிசோதனைகளை செய்துவிட்டு, இரண்டு கண்களிலும் மருந்து விட்டு, பின்னர் காட்டன் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லியுள்ளனர் மருத்துவர்கள். சின்ன ஓய்வுக்குப் பிறகு அந்த காட்டன் அகற்றப்பட்டுள்ளது. அவ்வப்போது முதல்வரின் கண்களில் நீர் வடியும் பிரச்சினை அவருக்கு உள்ளது. இதற்காகத்தான் புதுச்சேரி அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடைபயிற்சி திட்டத்தினையும், நிர்வாகிகளை சந்திக்கும் திட்டத்தினையும் ரத்து செய்தார் ஸ்டாலின்.
பகலில் ஓய்வெடுத்துவிட்டு நேற்று மாலை சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு செல்வதற்காக மாலை 5:30 மணியளவில் கெஸ்ட் ஹவுசிலிருந்து வெளியில் வந்தார்.
அப்போது மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களுமாகிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் அவரை அழைத்துச் செல்ல வந்தனர். அப்போது தருமபுரம் ஆதீனமும் வந்திருந்தார். அவரிடம் ஓரிரு நிமிடம் உரையாடினார். ஆதீனம் முதல்வருக்கு ஆசி வழங்க, முதல்வரும் ஆதீனத்துக்கு மரியாதை செலுத்திவிட்டுப் புறப்பட்டார்.
பிரச்சார வாகனத்தில் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் ஆகியோர் சென்றனர். முதல்வரின் காருக்கு பின்னால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ‘1333’ என்ற எண் கொண்ட காரில் சென்றார்.
சிதம்பரம் செல்லும் வழியில்தான் காரிலேயே அமைச்சர்களுடன் உரையாடியிருக்கிறார் ஸ்டாலின். “கடலூர் எப்படி இருக்கும்? ஜெயிச்சிடலாமா” என்று ஸ்டாலின் கேட்க, பின்னால் இருந்த அமைச்சர் கணேசன், ’பெரிய வித்தியாசத்துல ஜெயிப்போம் தலைவரே…’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘கடலூர், சிதம்பரம் இரண்டிலும் ஜெயித்திடலாம். சிதம்பரத்துல போன முறை மாதிரி இல்லாம நல்ல வித்தியாசம் வரும் தலைவரே’ என்று சொல்ல ஸ்டாலின் உற்சாகமானார்.
அதே உற்சாகத்தோடுதான் சிதம்பரம் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின். சிதம்பரம் பிரச்சாரக் கூட்டத்தில் திருமாவளவன் பெயரைச் சொல்லும்போது மட்டுமே கைதட்டல்களும் ஆரவாரங்களும் பிளந்தன.
சிதம்பரம் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேராக விழுப்புரம் சென்று மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு இரவு 9:15 மணிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பிறகு இரவு புதுச்சேரி அக்கார்டு ஹோட்டலுக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு நேற்று இரவு 10:45 மணியளவில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், திமுக பொறுப்பாளர் சிவா ஆகியோரை சில நிமிடங்கள் சந்தித்தார்.
அதன்பிறகு காலையில் பாண்டிச்சேரி சிங்காரவேலர் சிலை அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு விட்டார்.
சில நாட்கள் கூட இடைவெளியில்லாமல் தீவிர பிரச்சாரத்தினை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இப்படியான தொடர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியும், எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக சமயங்களில் உடல் சூடு அதிகமாகி, கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகளையும் அவர் எதிர்கொள்ள நேரிடுகிறது.
தினத்தந்தி இதழுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் தனது உடல் நிலை குறித்து அவரே ஒரு பதிலளித்திருக்கிறார்.
“நீங்கள் நலமா என்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம். நீங்கள் நலமா?” என்ற கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலில்,
“உங்களைப் போன்றவர்களின் அன்பினால் மக்களின் ஆதரவினால் எப்போதும் நலமாகவே இருக்கிறேன். நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என வாய்ப்புள்ள பயிற்சிகளை மேற்கொள்வதும், உணவுக் கட்டுப்பாடும் என் உடல் நிலையை நல்லபடியாகவே வைத்துள்ளது. அதனை மக்களுக்காக உழைக்க பயன்படுத்துகிறேன். நான் நலமாக இருப்பதை விடவும் நம் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற வகையில் செயல்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு மரியாதையுடன் புகழேந்தி உடல் தகனம்!
அழைக்கும் ராகுல்… யோசிக்கும் ஸ்டாலின்… எங்கே, ஏன்?
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் 4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா?