சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர் மாநாட்டைத் தமிழக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கி வைத்தார். தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முதலீட்டாளர் மாநாடு இன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
‘வெற்றி தமிழ்நாடு 2026’ என்ற இந்த மாநாட்டின் மூலம் ரூபாய் 67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு குறித்த விபரங்கள்
- ஹிந்துஜா குழுமம் – ரூ.2,500 கோடி
- கிருஷ்ணகிரியில் அமைய உள்ள அல்ட்ராவயோலெட் நிறுவனம் ரூ.779 கோடி முதலீடு
- காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட உள்ள டெய்ம்லர் நிறுவனம் – ரூ.4,000 கோடி
- ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்- ரூ.250 கோடி
- லூகாஸ் டிவிஎஸ் – ரூ.2,500 கோடி முதலீடு
- டைட்டன் – ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது
- செயின்ட் கோபைன் – ரூ.2,000 கோடி
- ஜே.கே. டயர்ஸ் – ரூ.5,000 கோடி
- பீனிக்ஸ் கோத்தாரி – ரூ.1,000 கோடி
முன்னதாக, தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமைய உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
