VIDEO: தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகாவில் ‘பந்த்’!

Published On:

| By Mathi

Cauvery: 'Bandh' in Karnataka Against Tamil Nadu

காவிரி நதிநீரை (Cauvery) தமிழ்நாட்டுக்கு திறந்து விட எதிர்ப்பு தெரிவித்தும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட வலியுறுத்தியும் அம்மாநிலத்தில் இன்று ஆகஸ்ட் 13-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் (Bandh பந்த்) நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் திறந்துவிடப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா மறுத்து வருகிறது. கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக இருந்த நிலையில் உபரி நீரை மட்டும் தமிழகத்துக்கு திறந்துவிட்டது கர்நாடகா.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கோரி திமுக மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கு மீது ஆகஸ்ட் 17-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை உடனே கர்நாடகா அரசு கட்ட வலியுறுத்தியும் கன்னட அமைப்புகள் இன்று அம்மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த முழு அடைப்புப் போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறும்.

ADVERTISEMENT

இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்து எல்லைகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் பள்ளி நிர்வாகங்கள் முடிவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதனால் அவைகள் வழக்கம் போல இயங்கினாலும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

ADVERTISEMENT

சில இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கால் டாக்சி உள்ளிட்ட வாகனங்கள், தாக்குதல் நடத்தப்படும் அச்சம் காரணமாக இயக்கப்படவில்லை. அதே போல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்துவார்கள் என அச்சத்தால் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மைசூர், மண்டியா உள்ளிட்ட காவிரி மாவட்டங்களில் மட்டும் முழுமையாக பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டங்களில் மதுவிற்பனையை முழுமையாகவும் போலீசார் தடை செய்துள்ளனர். சட்டவிரோத மதுவிற்பனையையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தமிழக- கர்நாடகா ஓசூர் எல்லையான அத்திப்பள்ளியில் வழக்கம் போல கன்னட அமைப்பினர் சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

மைசூர், மண்டியா மாவட்டங்களில் கன்னட அமைப்பினர் அரை நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட நூதன போராட்டங்களையும் நடத்தினர். மண்டியாவில் மைசூர்- பெங்களூரு நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வாகனப் போக்குவரத்தை முடக்கினர்.

ஆனால் பெங்களூரு, மங்களூரு போன்ற பெரு நகரங்களில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

இதனிடையே ஓசூர் எல்லையான அத்திப்பள்ளியில் அசம்பாவித சம்பங்கள் நடைபெறுவதாக கர்நாடகாவில் வதந்தி பரவியது. இதனையடுத்து அத்திப்பள்ளி காவல்துறையினர், “அத்திப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பல்வேறு கன்னட அமைப்புகள் “கர்நாடக பந்த்” அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இதுவரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை; இது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளனர். பெங்களூரு மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share