(எம்.பி. பரமேஸ்வரன்: ஒரு சகாப்தத்தை நேரில் சந்தித்த நினைவலைகள்)
நா. மணி
ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி , தனது 91வது வயதில் திருச்சூரில் இயற்கை எய்திய எம்.பி. பரமேஸ்வரன், இந்திய மக்கள் அறிவியல் இயக்க வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்.
அவரது இயக்கத்தின் நண்பர்கள் அவரை எம்.பி என்று சுருக்கமாக அழைப்பார்கள். விஞ்ஞானியாகத் தொடங்கிய அவரது பயணம், அறிவியலை ஆய்வுக்கூடங்களிலிருந்து மக்களிடம் கொண்டு செல்வதிலும், அறிவியல் மனப்பான்மையை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றுவதிலும் முடிந்தது.
அவரைப் பற்றி ஏராளமான கதைகளைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதைகளைக் கேட்கும்போதெல்லாம், “இவரை ஒருநாள் நேரில் பார்க்க முடியுமா? பேச முடியுமா?” என்ற ஆவல் இருந்தது. அந்த வாய்ப்பு டெல்லியில் கிடைத்தது. அவரைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிச்சென்று,“நான் பேராசிரியர் மணி, ஈரோடு” என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் வழக்கமான அறிமுகச் சொற்களைப் பேசவில்லை. “அப்படியா, மகிழ்ச்சி” என்ற சம்பிரதாய வார்த்தைகளைக் கூட அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக என்னிடம் ஒரு கேள்வியை வைத்தார்.
சமூகத்தில் நம் அடையாளம் எது?

“சமூகத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?” என்றார். நான் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன் என்று மீண்டும் கூறினேன். அவர் உடனே சொன்னார், “ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வாதாரத்திற்காக ஏதாவது ஒரு தொழிலை செய்து பிழைக்கிறான். ஒருவர் மூட்டை தூக்குகிறார். ஒருவர் தூய்மைப் பணியாளராக இருக்கிறார். ஒருவர் விவசாயத் தொழிலாளியாக இருக்கிறார்.
ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கிறார். நீங்கள் பேராசிரியராக இருக்கிறீர்கள். இவை எல்லாம் ஒருவர் தனது வயிற்றைக் கழுவுவதற்காகச் செய்து வரும் தொழில்கள். நீங்கள் பேராசிரியர் என்பதைக் காட்டிலும், சமூகத்திற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத்தான் சொல்லுங்கள்” என்றார். அதுவே உங்கள் அடையாளம் என்றார்.
எவ்வளவு சிறந்த மனிதர்! பார்த்த மாத்திரத்தில் ஓர் பாடம் நடத்தி விட்டாரே! என் அறியாமை இருளை அகற்றிவிட்டாரே! என்னை நினைத்து சங்கடமும் அவரை நினைத்து பெருமிதமும் ஒரு சேர எழுந்தது. “தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் மாவட்டத் தலைவராக இருக்கிறேன்” என்றேன் “அப்படிச் சொல்லுங்கள். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்” என்றார். அந்தக் கணத்தில் அவர் எனக்கு ஒரு அறிமுகப் பாடமே கற்றுக்கொடுத்தார்.
தான் வாழும் நகரமே தன் முகவரி
ஒரு மனிதனின் தொழில் அவரது வாழ்வாதாரத்தைச் சொல்கிறது. அவரது சமூகப் பணி அவரது வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்கிறது.அவர் சொன்ன அந்த வார்த்தைகளைப் பல இடங்களில் நான் பின்னர் எடுத்துக்காட்டாகச் சொல்லியிருக்கிறேன்.
எனது அறிமுகம் வாட்ஸ்அப் மின்னஞ்சலுக்கு முந்தைய காலம். விடைபெறும் போது, “உங்கள் முகவரியை சொல்லுங்கள்” என்றேன் . ஒரு துண்டுத் தாளில் “எம்.பி. பரமேஸ்வரன் திருச்சூர்.” என்று எழுதிக் கொடுத்தார். நான் அவரது முகத்தை பார்த்தேன். கடிதம் எழுதுங்கள் இந்த முகவரிக்கு. கட்டாயம் எனக்கு வந்து விடும்” என்றார்.
பெரிய பதவி இல்லை. அலுவலகம் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. உதவியாளர் இல்லை. ஓர் எளிய மனிதர் . ஆனால் ஒரு நகரத்தின் பெயரை மட்டும் தன் பெயருக்கு பின்னால் போட்டு முகவரி என்று எழுதிக் கொடுக்க எவ்வளவு உழைபு்பு உழைத்திருக்க வேண்டும். இது அவரது எளிமையின் வெளிப்பாடு மட்டுமல்ல. மக்களுக்குள் வாழ்ந்த ஒரு மனிதரின் முகவரி மக்களே என்பதற்கான அடையாளம்.

அறிவியல் மேதையாக இருந்து அறிவியல் போராளியாக பரிணாமம்
ஒரு விஞ்ஞானியிலிருந்து மக்கள் அறிவியல் போராளியாக எம்.பி. பரமேஸ்வரனின் வாழ்க்கைப் பயணம் சாதாரணமானதல்ல. கேரளாவில் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்த அவர், பின்னர் மாஸ்கோவின் Moscow Power Engineering Institute-ல் அணுசக்திப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1965-ஆம் ஆண்டே முனைவர் பட்டம் பெற்றார். இந்தியாவுக்குத் திரும்பிய அவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.
அறிவியல் யாருக்காக?
அவருக்கு முன்னால் ஒரு சிறப்பான விஞ்ஞான வாழ்க்கை இருந்தது. ஆனால் அவருடைய மனதில் வேறு ஒரு கேள்வி வளர்ந்துகொண்டிருந்தது. “அறிவியல் யாருக்காக?” அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்குள் மட்டுமே இருந்தால் போதுமா? அறிவியல் அறிவு சில ஆயிரம் பேரின் சொத்தாக இருந்தால் போதுமா? மக்களின் அன்றாட வாழ்க்கையோடு அறிவியல் இணைக்கப்பட வேண்டாமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடியதுதான்.
அறிவியலின் பயன்கள் எப்படி இருக்க வேண்டும்?
அவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்டம். 1975-ஆம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையப் பணியை விட்டு வெளியேறி, அறிவியலை மக்களிடம் கொண்டு செல்லும் முழுநேரப் பணியில் இறங்கினார். அது ஒரு வேலை ராஜினாமா மட்டுமல்ல. தனது வாழ்க்கை முறையின் தேர்வு.1962-ல் விதைக்கப்பட்ட விதை. கேரளாவில் 1962-ஆம் ஆண்டு உருவான கேரள சாஸ்த்ர சாஹித்ய பரிஷத் (KSSP), அறிவியலைத் தாய்மொழியில் மக்களிடம் கொண்டு செல்வதைத் தாண்டி, அறிவியல் மனப்பான்மையையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்க்கும் மக்கள் இயக்கமாக வளர்ந்தது. பின்னர் KSSP “மக்கள் அறிவியல் இயக்கம்” என்ற பரந்த அடையாளத்தை ஏற்றுக்கொண்டது.
அதன் முழக்கம் “சமூகப் புரட்சிக்கான அறிவியல்”
அறிவியல் என்பது தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கான பாடம் மட்டுமல்ல. அது மூடநம்பிக்கையை எதிர்ப்பதற்கான ஆயுதம். அது இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான கருவி. அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அறிவு.அது சமூக அநீதியை நிலைநாட்ட தக்க கேள்விகளை கேட்கும் திறன். அதுதான் பரமேஸ்வரனின் மக்கள் அறிவியல் பார்வை. அந்த இயக்கம் பின்னர் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், ஆற்றல், எழுத்தறிவு, உள்ளாட்சித் திட்டமிடல் உள்ளிட்ட பல துறைகளில் தலையிட்டது.
மக்கள் அறிவியல் இயக்கங்களின் தந்தை

தமிழ்நாட்டில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆந்திராவில் ஜன் விஞ்ஞான் வேதிகா உள்ளிட்ட பல மாநில மக்கள் அறிவியல் இயக்கங்களின் வளர்ச்சிக்கும் இந்தப் பரந்த இயக்கப் பாரம்பரியம் ஊக்கமளித்தது. அறிவொளி இயக்கத்தின் பின்னால் இருந்த அறிவியல் மனம் தமிழ்நாட்டில் “தமிழ்நாடு அறிவியல் இயக்கம்” என்ற பெயரை எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், “அறிவொளி இயக்கம்”என்ற சொல்லைக் கேட்டிராதவர்கள் மிகக் குறைவு. அறிவொளி இயக்கம் என்பது வெறும் எழுத்தறிவுப் பிரசாரம் அல்ல. எழுத்தறிவை ஒரு சமூக இயக்கமாக மாற்றிய முயற்சி. கேரளாவின் எர்ணாகுளத்தில் தொடங்கிய முழு எழுத்தறிவு இயக்கத்தின் அனுபவம் பின்னர் தேசிய அளவில் விரிவடைந்தது.
இந்தப் பணியில் KSSP முக்கியப் பங்காற்றியது. தேசிய அளவில் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி (BGVS) உருவாவதற்கும் இந்த அனுபவம் வழிவகுத்தது. எம். பரமேஸ்வரன் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்காற்றியவர். அதனால் அறிவொளி இயக்கத்தின் வரலாற்றைப் பேசும்போது, அதன் பின்னணியில் இயங்கிய மக்கள் அறிவியல் இயக்க வரலாற்றையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. அறிவியலை மக்களிடம் கொண்டு சென்ற இயக்கம், அறிவையும் எழுத்தறிவையும் மக்களிடம் கொண்டு செல்லும் இயக்கமாக மாறியது.
எண்ணங்கள் ஏராளமாக இருக்கலாம். பற்றாக்குறையாக இருக்கக் கூடாது
எம்.பி. பரமேஸ்வரனை இரண்டாவது முறையாகச் சந்தித்தபோது, அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “உங்கள் ஈரோடு மாவட்டத்தில் அறிவியல் இயக்கப் பணிகள் எப்படி நடக்கின்றன?” அப்போது 2005 சர்வதேச இயற்பியல் ஆண்டு. அதையொட்டி இரண்டு நாள் மாநிலப் பயிற்சி நடைபெறவுள்ளதாகச் சொன்னேன். “அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். “இனிமேல்தான் திட்டமிட வேண்டும்” என்றேன்.
அவர் சொன்னார்…
“பொதுப்பணி செய்ய வேண்டுமென்றால் ஏராளமான திட்டங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். பத்து வேலைகளைத் திட்டமிடுங்கள். ஒன்றில் பிரச்சினை வந்தால் இன்னொன்றைச் செய்யுங்கள்.” பின்னர் அவர் ஆங்கிலத்தில் சொன்ன ஒரு வாக்கியம் இன்னும் என் நினைவில் இருக்கிறது: There may be idea leakage, not idea lacking” அதாவது, திட்டங்கள் அதிகமாக இருக்க வேண்டும். ஒரு திட்டம் செயல்படாமல் போனால் அதனால் இயக்கத்தின் சிந்தனை முடங்கிவிடக் கூடாது. அது ஒரு நிர்வாக அறிவுரை அல்ல. இயக்கத்தை உயிர் துடிப்போடு வைத்திருக்கும் உத்தி.
தியாகம் என்றால் என்ன?
“தியாகம் செய்ய வந்திருக்கிறோம் என்று நினைக்காதீர்கள்!” கேரளாவில் நடந்த அகில இந்தியப் பயிற்சி முகாமொன்றில் அவர் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த பயிற்சியாளர்களைப் பார்த்து அவர் கேட்டார், “இங்கே பயிற்சி எடுத்துக்கொண்டு உங்கள் ஊருக்குச் சென்று சேவை செய்யவும், உங்களைத் தியாகம் செய்யவும் வந்திருக்கிறவர்கள் யார்?” பலர் கைகளை உயர்த்தினர்.
“கைகளைக் கீழே போடுங்கள்” என்றார். பின்னர் சொன்னார்: “யாரும் தன்னைத் தியாகி என்று நினைத்துக்கொண்டு நீண்ட காலம் பணியாற்ற முடியாது. ‘நான் தியாகம் செய்கிறேன்’ என்று நினைத்தாலே அந்தப் பணி ஒரு சுமையாகிவிடும். சுமையை நீண்ட காலம் சுமக்க முடியாது.” அதன்பிறகு அவர் சொன்ன உதாரணம் அற்புதமானது.
“நீங்கள் உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு ஐஸ்கிரீம் கடைக்குச் செல்கிறீர்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கிறீர்கள். அந்தக் குழந்தை ஐஸ்கிரீமை சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியைப் பார்த்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதல்லவா? அதை நீங்கள் தியாகம் என்று நினைத்தீர்களா? உங்கள் மனைவிக்கு ஒரு பூ வாங்கிக் கொடுக்கிறீர்கள். அதையும் நீங்கள் சேவை என்று நினைத்துக்கொண்டா செய்கிறீர்கள்?அந்த மகிழ்ச்சிதான் பொது வாழ்க்கைப் பணியிலிருந்தும் கிடைக்க வேண்டும்.” எவ்வளவு ஆழமான அரசியல் உளவியல்! மக்களுக்காகப் பணியாற்றுவது என்பது தன்னை வருத்திக்கொள்வது அல்ல. மக்களின் மகிழ்ச்சியைத் தனது மகிழ்ச்சியாகக் காண்பது. அதுதான் நீண்ட கால இயக்கப் பணிக்கான எரிபொருள்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பதவியை துறந்து முழு நேரப் பணிக்கு
வேலையை ராஜினாமா செய்த அந்த மனிதர் தன் ஜீவிததிற்கு மாதம் ரூ.2,000 போதும் என்று சொன்ன விஞ்ஞானி பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகத் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், அவருக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திருக்கும். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் வந்திருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அவர் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார். மக்கள் அறிவியல் இயக்கப் பணிக்கு முழுநேரமாக வருவதற்காக தனது விஞ்ஞானிப் பணியை விட்டார். “வாழ்வதற்கு மாதம் ரூ.2,000 கிடைத்தால் போதும்” என்ற மனநிலையுடன் மக்கள் இயக்கப் பணிக்குள் நுழைந்தார்.பின்னர் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். மக்கள் அறிவியல் இயக்கங்களை உருவாக்கினார். அவற்றை ஒன்றோடொன்று இணைத்தார். இன்று 42 மாநில இடங்களைக் கொண்ட அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பாக அது செயலாற்றி வருகிறது.
அறிவியலை சமூகப் பிரச்சினைகளோடு இணைத்தல்

அறிவியலை மக்களின் மொழியில் பேசினார்.அறிவியலை சமூகப் பிரச்சினைகளோடு இணைத்தார். அறிவியல், கல்வி, பாலினச் சமத்துவம், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், ஜனநாயகம் என மக்களின் வாழ்க்கையைத் தொடும் ஒவ்வொரு தளத்திலும் அறிவியல் பார்வையைப் பயன்படுத்தினார். அவரது பணியின் தாக்கம் இந்தியாவுக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. KSSP, BGVS, All India People’s Science Network போன்ற அமைப்புகள் மூலம் மக்கள் அறிவியல் இயக்கம் ஒரு பரந்த வலையமைப்பாக வளர்ந்தது. “பதவியை விடப் பணி பெரியது”அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.
தலைவர், ஒருங்கிணைப்பாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், விஞ்ஞானி என பல அடையாளங்கள் அவரோடு இணைந்திருக்கின்றன. ஆனால் அவர் தன்னை ஒருபோதும் பதவிகளால் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் நான் அவரைச் சந்தித்தபோது, “நான் பேராசிரியர்” என்ற என்னுடைய அடையாளத்தைத் தள்ளிவிட்டு, “நான் சமூகத்தில் என்ன செய்கிறேன்?” என்று என்னைக் கேட்க வைத்தது. அவருடைய வாழ்க்கையே அந்தக் கேள்விக்கான பதிலாக இருந்தது.
மக்கள் இயக்கத்தின் தலைமையின் அழகு
இன்னொரு காட்சி என் கண்களில் இன்னும் அப்படியே இருக்கிறது.அவர் உருவாக்கிய KSSP-யின் பொன்விழா மாநாடு கோழிக்கோட்டில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பான ஒரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் மாநாட்டிற்கு வந்தபோது, அரங்கின் பின்புறம் ஒருவர் பெஞ்சின் மீது ஏறி நின்று, எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். “இவரே குள்ளமாக இருக்கிறார். எல்லோருக்கும் பின்னால் நின்றுகொண்டு நாடகத்தைப் பார்க்கும் மனிதர் யார்?” என்று அருகில் சென்று திரும்பிப் பார்த்தோம்.
அவர் வேறு யாருமல்ல. எம்.பி.பரமேஸ்வரன். கேரள அறிவியல் இயக்கத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பல்வேறு மக்கள் இயக்கத்தை உருவாக்கியவர். இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஞ்ஞானி. ஆயிரக்கணக்கான அறிவியல் செயற்பாட்டாளர்களுக்கு வழிகாட்டியவர். ஆனால் தனது சொந்த இயக்கத்தின் பொன்விழா மாநாட்டில், மேடைக்கு முன்னால் சிறப்பு இருக்கையில் அமரவில்லை. கடைசி வரிசையில் நின்று ஒரு சாதாரண பார்வையாளரைப் போல நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். இதுதான் பரமேஸ்வரன். பெரிய சாதனைகளுக்குள் வாழ்ந்த ஒரு மிகச் சாதாரண மனிதர்.
அமைதிப் பள்ளத்தாக்கைக் காத்த அறிவியல் போராளி
எம்.பி. பரமேஸ்வரனின் மக்கள் அறிவியல் பணியைப் புரிந்துகொள்ள அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டத்தை தவிர்க்க முடியாது. கேரளாவின் அழகிய அமைதிப் பள்ளத்தாக்கு காடுகளை அழித்து நீர்மின் திட்டம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக KSSP அறிவியல் அடிப்படையில் களமிறங்கியபோது, பரமேஸ்வரனும் அதன் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்தார். 1978-ல் உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற அவர், திட்டத்தின் தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஆய்வு செய்யப் பங்களித்தார். பின்னர் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்ற எளிய குற்றச்சாட்டை ஏற்காமல், “மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை; ஆனால் அதற்காக ஒரு முழுமையான உயிர்ச்சூழலை அழிக்க வேண்டுமா?” என்ற அறிவியல் கேள்வியை எழுப்பினார். அறிவியல் ஆய்வு, மக்கள் பங்கேற்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் இணைத்த அந்தப் போராட்டம் இறுதியில் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. 1980-களில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவாகப் பாதுகாக்கப்பட்டதன் பின்னணியில் இந்த மக்கள் இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அறிவியல் என்பது ஆய்வுக்கூடத்தில் மட்டுமல்ல; மக்கள் வாழ்வையும் இயற்கையையும் காப்பதற்கான சமூக சக்தியாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தனது செயல்பாட்டின் மூலம் நிரூபித்தவர் எம்.பி. பரமேஸ்வரன்.
ஒரு மனிதரைப் பற்றிய நினைவல்ல. ஒரு இயக்கத்தின் நினைவு
எம்.பி. பரமேஸ்வரனைப் பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். அவர் எழுதிய நூல்கள், அவர் உருவாக்கிய கருத்துகள், அவர் கட்டியெழுப்பிய அமைப்புகள், அறிவியல் மனப்பான்மைக்காக அவர் நடத்திய இயக்கங்கள், எழுத்தறிவு இயக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு, சுற்றுச்சூழல் மற்றும் குன்றாத வளர்ச்சிக்கு அவர் முன்வைத்த பார்வைகள் என ஒரு பெரிய வரலாறே அவருக்குப் பின்னால் இருக்கிறது. KSSP-யின் வரலாற்றில் அறிவியல், சுற்றுச்சூழல், கல்வி, எழுத்தறிவு, மக்கள் பங்கேற்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதை ஆய்வுகளும் பதிவு செய்கின்றன. ஆனால் இந்தப் பதிவு அவருடைய முழுமையான வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான முயற்சி அல்ல. நான் அவரிடம் கற்றுக்கொண்ட சில தருணங்களை மட்டும் பதிவு மட்டுமே.
சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறோம்?
“நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்பதற்குப் பதிலாக “சமூகத்திற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்கக் கற்றுக்கொடுத்தவர். “ஒரு திட்டம் தோல்வியடைந்தால் இயக்கம் நின்றுவிடக் கூடாது” என்று கற்றுக்கொடுத்தவர். “சேவை என்பது தியாகச் சுமை அல்ல, மக்களின் மகிழ்ச்சியில் இருந்து நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி” என்று கற்றுக்கொடுத்தவர். “அறிவியல் ஆய்வுக்கூடத்தில் மட்டும் இருக்கக் கூடாது. அது மக்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும்” என்று தனது வாழ்க்கையாலேயே நிரூபித்தவர். அவர் மறைந்துவிட்டார்; ஆனால் கேள்வி ஒன்றை விட்டுச் சென்றிருக்கிறார். எம்.பி. பரமேஸ்வரன் இன்று இல்லை. ஆனால் அவர் நம்மிடம் விட்டுச் சென்ற மிகப்பெரிய மரபு எந்த ஒரு அமைப்பின் பெயரும் அல்ல. அது ஒரு கேள்வி, “நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்கிறீர்கள்?”
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பதவியைச் சொல்லலாம்.
பேராசிரியர்.
ஆசிரியர்.
மருத்துவர்.
பொறியாளர்.
அரசு அதிகாரி.
தொழிலாளர்.
விவசாயி.
எத்தனை பெயர்களை வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் பரமேஸ்வரன் நம்மை மீண்டும் கேட்பார்,
“அது உங்கள் தொழில்.
சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” அந்தக் கேள்விக்கு நாம் அளிக்கும் பதிலில்தான் அவரது நினைவு உயிரோடு இருக்கும்.
அறிவியல் மனப்பான்மைக்காகவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், மக்களின் அறிவுரிமைக்காகவும், எழுத்தறிவுக்காகவும், சமத்துவத்திற்காகவும், மனிதநேயமான சமூகத்திற்காகவும் உருவாக்கப்பட்ட மக்கள் அறிவியல் இயக்கங்களின் ஒவ்வொரு செயலிலும் அவரது சிந்தனையின் ஒரு துளி தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும்.
ஒரு மனிதர் மறைந்துவிடலாம். ஒரு தலைமுறை மறைந்துவிடலாம். ஆனால் மக்களிடம் விதைக்கப்பட்ட அறிவின் விதை மறைவதில்லை. எம்.பி. பரமேஸ்வரன் அப்படிப்பட்ட ஒரு விதையை இந்திய மண்ணில் விதைத்துச் சென்றிருக்கிறார். அவர் ஒரு விஞ்ஞானியாக வாழ்ந்தார். ஒரு இயக்கமாக மாறினார். ஒரு சகாப்தமாக மறைந்தார். அன்பு எம். பி! செவ்வணக்கம் தங்களுக்கு.
கட்டுரையாளர்

