அதிமுகவில் இருந்து அப்சரா ரெட்டி விலகல் : ஏன்?

Published On:

| By Kavi

அதிமுகவில் இருந்து அப்சரா ரெட்டி விலகியுள்ளார்.

சென்னையை சேர்ந்த திருநங்கையான அப்சரா ரெட்டி அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தார்.

ADVERTISEMENT

கடந்த ஜூலை மாதம் அவருக்கு துணை கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்தநிலையில் தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அப்சரா அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

” மனதில் கனத்த உணர்வுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது விலகலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவுடனான எனது பயணம் எனக்கு வெறும் அரசியல் பயணம் அல்ல. புரட்சித் தலைவி அம்மா மீது கொண்டிருந்த ஆழ்ந்த மரியாதையும், அன்பும், அவருடைய அரசியல் சிந்தனைகள் மீதான நம்பிக்கையும் என்னை இந்த இயக்கத்துடன் இணைத்தவை.

ADVERTISEMENT

அம்மா, மக்களை முன்னிறுத்திய அரசியலையும், மரியாதை, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவருடைய அணுகுமுறையையும் நான் எப்போதும் மதித்து வந்துள்ளேன்.

அரசியல் என்பது மக்களைப் பிரிப்பதற்காக அல்ல; அவர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.

எனது அரசியல் பயணத்தில் நீங்கள் எனக்கு வழங்கிய நம்பிக்கை, அன்பு, மரியாதை மற்றும் வாய்ப்புகளுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மீதான எனது தனிப்பட்ட மரியாதையும் அன்பும் என்றும் மாறாது.

இந்த முடிவு எந்தவித கசப்பினாலும் அல்லது தனிப்பட்ட வருத்தத்தினாலும் எடுக்கப்பட்டதல்ல. எனது மனசாட்சிக்கும், நான் நம்பும் கொள்கைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

அதிமுகவில் இருந்த காலம் எனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயமாக இருக்கும். இந்த இயக்கத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களையும், பொறுப்புகளையும், நட்புகளையும், மக்களுடன் இணைந்து பணியாற்றிய வாய்ப்புகளையும் நான் என்றும் மதிப்புடன் நினைவுகூர்வேன்.

எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம். ஆனால் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எனது நோக்கம் மாறாது. அம்மா அவர்களின் பாதையில், மக்களுக்காக குரல் கொடுப்பதும், தேவையான இடங்களில் பாலமாக இருப்பதும், தைரியத்துடனும் அன்புடனும் மரியாதையுடனும் தொடர்ந்து பணியாற்றுவதும் எனது உறுதியாக இருக்கும்.

இந்த அரசியல் முடிவைத் தாண்டியும், நம்மிடையேயான தனிப்பட்ட அன்பும் மரியாதையும் என்றும் தொடர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
மரியாதையுடனும் நன்றியுடனும்” என எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று (ஆகஸ்ட் 12) கடிதம் அனுப்பியுள்ளார்.

அப்சரா ரெட்டி அதிமுகவில் இருந்து விலகியிருக்கும் நிலையில் அடுத்தது தவெகவில் இணைய போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது முன்னதாக சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share