மக்களவையில் பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026, அரசியலமைப்பு உறுதி செய்யும் நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, “சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் மீது வரி விதிக்கும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது” என உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026’-ஐ எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே இன்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தாக்கல் செய்தார். அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை அலட்சியப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது மாநில அரசுகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மசோதாவின் அடிப்படையில், மாநில அரசு தரப்பில் கனிம உரிமைகள் மீது எந்தப் பெயரிலும் புதிதாக வரிகளையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ விதிக்க முடியாது. கனிம வளம் கொண்ட நிலங்கள் அனைத்தும் புதிய விதிகளின் வரம்புக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் சுரங்கத் துறையில் ஒரே சீரான வரி அமைப்பைக் கொண்டு வர இயலும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே முறையான விவாதங்கள் நடத்தப்படாமல், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் “மக்களவையில் ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா- 2026, அரசியலமைப்பு உறுதி செய்யும் நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
ஒரு மாநிலம் கொண்டிருக்கும் கனிம வளங்கள் மூலம் எவ்வித வரி வருவாயும் அந்த மாநிலம் ஈட்ட முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளபட்டுள்ள இந்த மசோதாவானது, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் II-ன் 50வது பிரிவின் கீழ், ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ராயல்டியிலிருந்து தனித்து, கனிம வளங்கள் மற்றும் கனிமம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று தெளிவாக உறுதி செய்த தீர்ப்பை மறுக்கிறது.
வருவாய் ஈட்டும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது. அந்த வருவாய் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.
மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநிலங்களே நிர்வகித்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலங்களே பயன்படுத்தும் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை ஒன்றியத்தில் குவிப்பது கூட்டாட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும்.
சீர்திருத்தம் என்ற பெயரில் மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமையையும், வருவாய் ஆதாரத்தையும் பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து, மாநிலங்களின் நிதி சுயாட்சி மேலும் பறிபோகாமல் நாம் பாதுகாக்க வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.
