தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருக்கு, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து எந்த வித ‘அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பும் கிடையாது’ என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் வெற்றி பெற்ற சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார் உள்ளிட்ட ஆறு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியலமைப்புச் சட்டம் 190 (3)(b)ன் படி எந்த விதமான விசாரணையும் நடத்தாமல் சபாநாயகர் எப்படி ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்? இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, ”சபாநாயகர் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் தாக்கல் செய்த எதிர்மனுவை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு சபாநாயகரே பதிலளிக்க வேண்டும். சபாநாயகர் தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர செயலாளர் அளிக்கக்கூடாது. அதுவும் சபாநாயகர் நீதிமன்றத்துக்கு வந்து தான் இதைச் சொல்ல வேண்டும். அவர் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்க எந்தவித அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பும் கிடையாது” என்று வாதங்களை முன் வைத்தார்.
இதைத்தொடர்ந்து மற்ற வாதங்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி கேட்பதாக கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்றைய தினம் அதிமுக சார்பில் சபாநாயகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
