லஞ்சம் இல்லாத அரசு அமைய எம்.எல்.ஏ.க்களை ‘நல்லா’ வெச்சுக்குங்க.. சட்டசபையில் ஒலித்த குரல்!

Published On:

| By Mathi

VCK MLA Seeks Facilities to Prevent Corruption

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று சட்டசபையில் விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 12-ந் தேதி எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசியதாவது: ஐயா, இது என்னுடைய சொந்தக் கோரிக்கை, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. ஏற்கனவே, கடிதமாகவும் கொடுத்திருக்கேன்.

ADVERTISEMENT

280 கி.மீ. தொலைவில் இருந்து நான் இங்கே வருகிறேன். சட்டமன்றத்திற்கு பேருந்து, ரயிலில் வருவதற்கு பயண படிகள் தரப்படுகின்றன. ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் கிடையாது. வாடகை வாகனத்தில்தான் வருகிறேன்.

40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட தொகுதி மக்களை நேரில் போய் சந்தித்து மக்களுக்குப் பணி செய்யவும் வாகன வசதி இல்லை.

ADVERTISEMENT

அத்துடன் உதவிக்காக ஒரு செயலாளரைச் கையில வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊதியம் கொடுக்கிற வசதியும் இல்லை. இதுதான்
சட்டமன்ற உறுப்பினர்களில் பலரது நிலைமை. காலனி அணியாத எம்.எல்.ஏ கூட இருக்காங்க இங்க. ஆகையால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவி செய்கின்ற வகையிலே, வாகன வசதி செய்து தர வேண்டும்.

லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய நம்முடைய எம்.எல்.ஏ.க்களை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு விசிகவின் ஜோதிமணி எம்.எல்.ஏ. பேசினார்.

ADVERTISEMENT

முதல்வருக்கு சபாநாயகர் கோரிக்கை

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது: மாண்புமிகு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையுடனும் உண்மையுடனும் நடக்கும் போது சிரமங்கள் ஏற்படலாம் என சொல்லியிருப்பதாக கருதுகிறேன்.

தமிழக சட்டமன்றப் பேரவை மேலவை முன்னாள் உறுப்பினர்கள் நற்பணி சங்கமும் சில கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.

முதலமைச்சர், இந்த அவையில் இருக்கின்ற காரணத்தினால் நேரடியாக அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்வது என் கடமை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், நமக்கெல்லாம் தெரியும் கிள்ளி கொடுக்கிற கரங்கள் அல்ல அவருடைய கரங்கள்; அள்ளி கொடுக்கிற கரங்கள். அந்த வகையில், அவையில் அமர்ந்திருக்கின்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்காகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நற்பணி சங்கம் கொடுத்துள்ள கோரிக்கையையும் முதலமைச்சர் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன். இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share