நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்திய காலவரையற்ற பட்டினிப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
நீட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிரத்னம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் ‘நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம்’ சார்பில் தோழர்கள் புளியந்தோப்பு மோகன், திருவண்ணாமலை ரவி, ஜீவா, தனசேகர் ஆகிய நால்வர் கடந்த 01/08/2026 முதல் மேற்கொண்டு வந்த 12 நாட்களாகத் தொடர்ந்த காலவரையற்ற பட்டினிப் போராட்டம் இன்று (12/08/2026) நிறைவு பெறுகிறது.
முன்வைக்கப்பட்ட முதன்மை கோரிக்கைகள்- ஒன்றிய அரசுக்கு:
1) நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
2) கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
மாநில அரசுக்கு:
1) நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
2) தொடர் போராட்டங்களை முன்னெடுக்க பொது இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இப்போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், 11/08/2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான சிறப்புத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில், எங்களது போராட்டத்தையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேசி, அவையின் கவனத்தை ஈர்த்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், பா.ஜ.க தவிர்த்து இத்தீர்மானத்தை ஆதாரித்து நிறைவேற்ற உறுதுணையாக இருந்த தமிழக வெற்றிக் கழகம், திமுக, அஇஅதிமுக, வி.சி.க, பா.ம.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., காங்கிரஸ், முஸ்லீம் லீக், ம.ம.க., ம.ஜ.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழமைகளுக்கும், சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான அமைச்சரவைக்கும் நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பா.ஜ.க தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.
12 கோடி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான சிறப்பு தீர்மானம் த.வெ.க. தலைமையிலான தமிழ்நாட்டு அரசால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு இருப்பது என்பது ‘நீட் எதிர்ப்பு’ என்ற கொள்கை நிலையில் தமிழ்மண் உறுதியாக நிற்பதையே பறைசாற்றுகிறது.
அத்துடன், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் சனாதன காவி கார்ப்பரேட் அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு நிற்கிறது என்பதை பிற மாநிலங்களுக்கும் எடுத்தியம்புகிறது.
எனினும், நமது இலக்கு இன்னும் தொலைவில் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் வரையிலும், கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்குத் திரும்பும் வரையிலும் நமது அறப்போராட்டம் தொடரும்.
இந்திய ஒன்றியத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைய சமத்துவம், சமூக நீதியை காக்கும் தமிழ்மண்ணின் அறப்போர் தொடரும்.
இது தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர் நடத்திய போராட்டம்- நமது தலைமுறைகளின் எதிர்காலத்திற்கான போராட்டம். அதை நாமும் தொடர்ந்து முன்னெடுப்போம்.
கல்வி உரிமையை, மாநில உரிமையை, பொது சுகாதாரம் & மருத்துவ உரிமைகளையும் கட்டமைப்புகளையும் பாதுகாத்திட நீட் தேர்வினை முற்றுமுழுதாக நீக்கும் வரையில் போராட வேண்டியது நமது கடமையாகிறது.
இன்று (12/08/2026) இப்பட்டினிப் போராட்ட வடிவம் நிறைவு பெற்றாலும், அடுத்தகட்டமாக வேறு வடிவங்களில் அறவழியில் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். நீட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தை தமிழ்நாடு முழுவதும் அமைப்பு ரீதியாகக் கட்டமைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து, ஒன்றிய அரசின் நீட் தேர்வுக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் முன்களப் படையாக இக்கூட்டியக்கம் தொடர்ந்து இயங்கும்.
எங்களது கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் போராட்டத்திற்கான பொது இடத்தை ஒதுக்குவது தொடர்பான கோரிக்கை நிலுவையில் இன்னும் இருக்கிறது. அந்த கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதிலும், வெற்றி பெறுவோம்.
இந்த அறப்போராட்டத்திற்குத் துணைநின்ற அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். போராடுவதற்கு தன்னுடைய கட்சி அலுவலகத்தை தந்து துணை நின்ற தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன், எங்களது போராட்டத்தின் நியாயத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், அவசர மருத்துவ உதவியளித்த செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் தனது நன்றியை உரித்தாக்குகிறது. நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்! ஒன்றிணைந்து போராடுவோம்!! இவ்வாறு மணிரத்னம் தெரிவித்துள்ளார்.


போராட்டம் முடித்து வைப்பு
சென்னை சின்மயா நகரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு அரசின் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி, இன்று ஆகஸ்ட் 12-ந் தேதி பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.
