தொகுதி மறுவரையறைக்கு எதிரான விஜய் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்காகத் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால், அதை 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான அரசினர் தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், “எங்களது தலைவர் கலைஞர் அவர்கள்தான் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிப் பெருமை சேர்த்தார்; அதேபோல் சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தையும் கலைஞர் அவர்கள்தான் உருவாக்கிக் கொடுத்தார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை என்ற பெயரில் எக்காரணம் கொண்டும் நமது தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு. அதுமட்டுமல்லாமல், தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிதாகத் தொகுதி மறுவரையறை (Delimitation) கொண்டுவந்தால், அது எவ்வளவு பெரிய ஆபத்தாக அமையும் என்பதை இந்தியாவிற்கே முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் திமுக தலைவர்தான்.

இந்த விவகாரத்தில் கழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை இங்கு பேசிய அமைச்சர் பெருமக்கள் உட்பட பலரும் பதிவு செய்தனர். அதில் சில முக்கிய நடவடிக்கைகளை இந்த அவையில் பதிவு செய்ய நான் விரும்புகிறேன்.

ADVERTISEMENT

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டின் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைவதை அனுமதிக்க மாட்டோம்; தமிழ்நாட்டிற்குத் தற்போது உள்ள பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் குறையக் கூடாது என்று இதே சட்டமன்றத்தில் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர் திமுக தலைவர் அப்பேதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி இதுகுறித்த அமைச்சரவைக் கூட்டத்தையும் எங்கள் தலைவர் கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி எங்கள் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தற்போது இங்கு வீற்றிருக்கும் நீர்வளத்துறை அமைச்சர் தனது இயக்கத்தின் சார்பில் கலந்துகொண்டு கருத்துகளைப் பதிவு செய்தார்.

ADVERTISEMENT

மார்ச் 7-ஆம் தேதி, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் உள்ள ஆபத்துகளை விளக்கி தென்மாநிலங்கள் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுக்கும், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எங்களது தலைவர் அப்போதைய முதல்வர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

மீண்டும் மார்ச் 22-ஆம் தேதி ‘நியாயமான தொகுதி மறுவரையறை’ (Fair Delimitation) என்ற தலைப்பில், 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் மிக முக்கிய 10-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களைக் கொண்டு ஒரு கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை நடத்தினார். அதில் இந்தத் தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை நான் விளக்கினேன்.

2026 மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை நிர்ணயித்தால், தென்மாநில எம்.பி-க்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும். அதேநேரம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களில் எம்.பி-க்களின் தொகுதிகள் அதிகரித்துவிடும். எனவே, தொகுதி மறுவரையறை திட்டத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நடத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும்; 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படியே மக்களவைத் தொகுதிகள் தொடர வேண்டும் என்று நான் அங்கு விளக்கினேன். இதுவே அந்தக் கூட்டத்தின் முக்கிய முடிவாகவும் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த மார்ச் 24-ஆம் தேதி இதே சட்டமன்றத்தில் எங்களது தலைவர் அப்போதைய முதல்வர் விளக்கமாகக் கூறினார். இந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி அந்த மசோதாவின் நகலைத் தமிழ்நாடு முழுவதும் எரித்து எங்களது கடும் எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்தினோம். எங்கள் தலைவரே அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தொகுதி மறுவரையறை மசோதாவை எரித்தார். அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதை இந்தத் தீர்மானத்தில் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த மசோதாவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய எதிர்ப்பே, அது நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணமாகும்.

இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை சட்டத் திட்டத்திற்கான மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், 1971-இல் இருந்து 2026 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

அதற்கான புதிய சட்டத் திருத்தம் இந்த ஆண்டு வரவில்லை என்றால், 2027-இல் மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அப்படிச் செய்வதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளது என்று சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம். ஒருவேளை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்காகத் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால், அதை 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே செய்ய வேண்டும்.

அதில் ஏதாவது மாற்றம் வந்தால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் எம்.பி-க்களின் விகிதாச்சாரம் குறையும். தற்போது உள்ள 7.1 சதவீதத்தைக் குறைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share