தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் முன்மொழிந்த மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் வலியுறுத்தினார்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 12-ந் தேதி பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசியதாவது: ஆங்கிலத்தில் பொதுவாக “Smaller is beautiful” என்று சொல்வார்கள். அதற்கு ஏற்பப் போல்தான் நம்முடைய வரலாறு தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், சுதந்திரம் அடைந்த மெட்ராஸ் பிரசிடென்சியில் அன்றைக்கு மொத்தம் 12 மாவட்டங்கள் தான் இருந்தன. காலப்போக்கில் நிர்வாக வசதிக்காக இன்றைக்கு 38 மாவட்டங்களாக அவை பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இன்றைக்கு கூட பரப்பளவில் பெரிதாக இருக்கக்கூடிய திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களை எல்லாம் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த அவையிலேயே பல்வேறு உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி துறையில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதி மறுவரை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் மாநகராட்சி என்று பார்த்தீர்கள் என்று சொன்னால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாநகராட்சிதான் முன்பு இருந்தது. சென்னை மாநகராட்சி மட்டும்தான்.
காலத்திற்கேற்ப முதல் கட்டமாக கோயம்புத்தூரையும் மதுரையையும் தரம் உயர்த்தி மாநகராட்சியாக மாற்றினார்கள். அதற்குப் பிறகு திருச்சி, சேலம், நெல்லை என்று 6 மாநகராட்சிகளாக ஆனது. படிப்படியாக இன்றைக்கு தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரே மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள் எல்லாம் இருக்கிறது. கோயம்புத்தூர், தஞ்சாவூர், கும்பகோணம் என்றெல்லாம். இவையெல்லாம் கூட பார்த்தால் நிர்வாகத்திற்காக அவ்வாறு பிரிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் கூட கடந்த காலங்களில் மிகப்பெரிய கட்சிகளாக சொல்லக்கூடிய திமுகவும் சரி, அண்ணா திமுகவும் சரி தங்களுடைய கட்சி நிர்வாகத்திற்காக வருவாய் மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர்கள் வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு காலப்போக்கில் ஒரு வருவாய் மாவட்டத்திற்கு இரண்டு மாவட்ட செயலாளர்களாக வைத்தார்கள். அதற்குப் பிறகு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கிலிருந்து வடமேற்கு வரை இன்றைக்கு வந்துவிட்டது. மத்திய கூட வந்துருச்சு.
இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு தனிப்பெரும் கட்சி சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக இருந்து கொண்டிருப்பது தமிழக வெற்றிக் கழகம். அப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் எடுத்துக் கொண்டால் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் வைத்துக் கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்தியாவினுடைய மொத்த வாக்காளர்களுடைய எண்ணிக்கை 97 கோடியே 98 லட்சம் இன்றைக்கு. இருப்பதோ 543 தொகுதிகள் தான். கிட்டத்தட்ட நம்ம 100 கோடி வாக்காளர்களை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இது அளவீடு என்று எடுத்துப் பார்த்தீங்கன்னா சராசரியா ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 18 லட்சம் வாக்காளர்கள் கிட்ட வருகிறார்கள்.
மக்கள் தொகை என்று எடுத்தால் அது ஒரு 20 லட்சமாக இருக்கும். தமிழ்நாட்டில் அப்படியே பார்த்தீங்கன்னா தமிழ்நாட்டினுடைய மொத்த வாக்காளர்களுடைய எண்ணிக்கை 5. 5 கோடியே 73 லட்சம். கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படி நீங்க கணக்கெடுத்துப் பார்த்தீர்கள் என்று சொன்னால் இருப்பதோ 39 தொகுதி. அந்த 39 தொகுதிக்கு எடுத்தீங்கன்னா கிட்டத்தட்ட 14 1/2 லட்சத்திலிருந்து 18 லட்சம் வரை இருக்கும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல கூட நான் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவன். அந்த தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள், கிட்டத்தட்ட 17 லட்சம் மக்கள் தொகை இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
உலக நாடுகளில் எடுத்துக்கிட்டீங்கன்னா ஐநா சபையில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் 195. அங்கீகரிக்கப்படாத நாடுகளை எல்லாம் சேர்த்தால் 230. இப்படி நீங்க அந்த நாடுகளுடைய மக்கள் தொகையும் நம்முடைய தொகுதியினுடைய வாக்காளர்களின் எண்ணிக்கையும் கணக்கிட்டாலே கூட, ஆரணி நாடாளுமன்றத் தொகுதி 43-வது பெரிய நாட்டிற்கு சமமாக இருந்து கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஐஸ்லாந்து, மால்தீவ்ஸ், ப்ரூனே, மால்டா, சைப்ரஸ் போன்ற நாடுகளின் மக்கள் தொகையை விட ஒரு நாடாளுமன்றத் தொகுதியினுடைய வாக்காளர்கள் மிக அதிகமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் வைத்து கடந்த காலங்களில் இந்த தீர்மானத்தை இந்த ஒரு சட்டம் சட்டம் முன்வடிவை மத்திய அரசாங்கம் கொண்டுவந்த போது, அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த திமுக 5.3.2025-ம் ஆண்டு ஒரு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த கோரிக்கை என்னவென்றால், இங்கே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2026-ஆம் ஆண்டு எடுக்கப்படுகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தொகுதி வரையறை நடத்தப்படுமேயானால் பாட்டாளி மக்கள் கட்சி அதை கடுமையாக எதிர்க்கும் என்று அந்த நேரத்தில் பதிவு செய்தார்.
இன்றைக்கு 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கின்றன. விகிதாச்சார அடிப்படையில் எடுத்துக் கொண்டால் இது 7.18 ஆக வருகிறது. இந்த 7.18 விகிதாச்சார அடிப்படைக்கு குறையாமல் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு செய்யுமேயானால் அந்தத் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும் என்று அன்றைக்கு அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஒட்டி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்கள் என்னவென்றால், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மாநிலங்கள் இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்.
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவமான சதவீதம் 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது என்று அந்த கூட்டத்தில் அனைத்து கட்சி இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்து கட்சியினுடைய பிரதிநிதிகளுடன் அந்த தீர்மானம் அன்றைக்கு நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பிறகு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் வந்தபொழுது, தற்போதைய மாண்புமிகு உள்துறை அமைச்சர் மதிப்புக்கும் மரியாதைக்குரிய அமித் ஷா, நாடாளுமன்றத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தந்த மாநிலங்களில் அந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 50% உயர்த்தி 50% மகளிருக்கென்று வழங்கப்படும் என்று தெளிவாக நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி, தேர்தல் நேரத்தில் அதுவும் குறிப்பாக ஏப்ரல் 5-ஆம் தேதி 2026-ல் கேரளத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபொழுது இது குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவித்திருக்கிறார்.
தொகுதியின் அடிப்படையில் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் 816 தொகுதிகள் அப்படி என்றால் கூடுதலாக 273 தொகுதிகள் நாடாளுமன்றத்தில் அதிகமாகிறது. நீங்கள் சொல்வது போல 33% என்று நாம் எடுத்துக் கொண்டால் 176 தொகுதிகள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால் தொகுதி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தினால் 273 தொகுதிகள் பெண்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 1962-ல் 41 எம்பிக்கள் இருந்தார்கள். அதற்குப் பிறகு 72-ல்தான் 39-ஆக குறைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு எடுத்துக் கொண்டீர்கள் என்று சொன்னால் தற்போது இருக்கக்கூடிய 39 எம்பிக்களை வைத்து நீங்கள் 33% என்று கணக்கீடு செய்தீர்கள் என்று சொன்னால் இன்றைக்கு 13 எம்பிக்கள் தான் அதிகமாக வருவார்கள். பெண்களாக இருப்பார்கள். ஆனால் 50% உயர்த்தினால் 20 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தை அலங்கரிப்பார்கள். இன்றைக்கு வெறும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் அந்த அவையை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
33% மசோதாவை நிறைவேற்றினீர்கள் என்று சொன்னால் சட்டபையில் கூடுதலாக 77 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இந்த அவைக்கு கிடைப்பார்கள்.
தொகுதி மறுவரையறை குறித்து எந்த சட்ட முன்வடிவோ அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை வெளிவரப்படவில்லை. எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொடுக்கவில்லை.
இன்றைக்கு செவிவழி செய்தியை வைத்து ஒரு தீர்மானத்தை நாம் இங்கே கொண்டு வந்திருக்கிறோம். இன்றைக்கு இந்த சட்டம் வருமா? வராதா? என்றெல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த நேரத்தில் இந்த சட்டம் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? எனவே உடனடியாக இந்த தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசினார்.
