தமிழகத்திற்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படக் கூடாது. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமிழகத்தின் நலன் கருதி, கட்சி வேறுபாடின்றி மத்திய அரசை வலியுறுத்துவதில் தவறில்லை என பாஜக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அரசினர் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசுகையில் “இந்த அவசரம் எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. இந்த அவையில் சில உறுப்பினர்கள் சொன்னது போல், ஒரு முடிவு பெறாத காலகட்டத்தில் தான் இந்த மசோதா பரிசீலனையில் உள்ளது. ஆனால் ‘மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம்’. அந்த மாற்றத்தை மக்கள் விரும்பியதால் தான் நீங்கள் அனைவரும் அமைச்சரவையில் இருக்கிறீர்கள். காலப்போக்கில் அந்தத் தேவையான ஆக்கபூர்வமான மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிலர் 850 பேர் அமரக்கூடிய ஒரு சபையைக் கட்டியிருப்பதாக சொல்கிறார்கள் . நமது சகோதரர் ராமச்சந்திரன் ஒரு வீடு கட்டினால், அவருக்கும் அவரது மனைவிக்குமான வீட்டை மட்டும் கட்ட மாட்டார். அதுபோலவே, எதிர்கால வளர்ச்சிக்காகவும் தேவைக்காகவுமே அந்தப் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் அடுத்த தேர்தலை நினைத்துச் செயல்படவில்லை, அடுத்த தலைமுறையை நினைத்துச் செயல்படுகிறோம். அந்தக் காலகட்டத்தில் தேவைப்படும் என்பதற்காகவே இந்த நிலையை உருவாக்கியிருக்கிறார்களே தவிர, அதைக்களங்கப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஊராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்தையும் இன்று நாம் பெறுகிறோம். அதேபோல் ஊராட்சியைப் பேரூராட்சியாகவும், பேரூராட்சியை நகராட்சியாகவும் மாற்றுகிறோம். இதையெல்லாம் நிர்வாக வசதிக்காகவும், அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காகவுமே செய்து வருகிறோம்.
எனது தொகுதியான நீலகிரியை எடுத்துக்கொண்டால், அங்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி என்பது நான்கு மாவட்டங்களை அடக்கியது. மக்கள் தொகை அதிகரிக்கும் போது அதைப்பிரித்து வேலை செய்யும்போது, மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கும் என்ற எதிர்காலத்தை நினைத்துத்தான் இது போன்ற திட்டங்களைத் தீட்டுகின்றனர்.
இதில் உள்ள ஒரு கருத்தை நான் ஏற்கிறேன்; எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படக் கூடாது. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமிழகத்தின் நலன் கருதி, கட்சி வேறுபாடின்றி மத்திய அரசை வலியுறுத்துவதில் தவறில்லை.
ஆனால், இவ்வளவு அவசரமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. ஆகவே, இந்தத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதேபோல் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி பாஜக தான் என்பதை இந்தியாவும் உலகமும் அறியும். ஆகவே, 33 சதவீத இடஒதுக்கீட்டைப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை; அந்தத் திட்டத்தை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம்.” என தெரிவித்தார்.
