பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முதல்வர் விஜய் இன்று பேசியதாவது:
நம்மளோட குடும்பத்துல இருக்கிற, நம்மளோட வீட்ல இருக்கிற, நம்ம பாட்டிய, நம்ம அம்மாவை, நம்ம அக்காவை, நம்ம தங்கச்சிய பத்தின ஒரு தீர்மானம்.
அதைப்பத்தி பேசுறதுக்கு, அவங்களுக்காக பேசுறதுக்கு, நம்ம மனசுல இருந்து, நம்ம இதயத்துல இருந்து பேசுறேன்.
இதுக்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைச்ச இடத்துக்கும், இன்னைக்கு இந்த விஜய்க்கு கிடைச்சிருக்கிற இடத்துக்கும் மிகப்பெரிய காரணமா இருக்கிறதுல, என்னோட பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சிங்கதான் மிகப்பெரிய காரணம்ங்கிறதை என்னால மறுக்கவே முடியாது.
அந்த நன்றி விசுவாசத்தோட, அப்படி ஒரு உணர்வோடுதான் இப்போ இங்க நின்னு பேசுறேன்.
பெருசா பணம் இருந்துட்டா ஒரு வீட்டுக்கோ, பெரிய பொருளாதாரம் இருந்துட்டா ஒரு நாட்டுக்கோ, பெரிய பேரு வந்துடும்னு சில பேர் நினைக்கலாம். ஆனா உண்மையாகவே ஒரு வீட்டுக்கோ, ஒரு நாட்டுக்கோ எப்போ பெரிய பேரு கிடைக்கும் தெரியுமா?
அந்த வீட்டுப் பெண்கள் தனிப்பட்ட முறையில சமூகத்துல உயர்ந்தாதான் பெரிய பேரு ஒட்டுமொத்த சமூகத்துக்கே கிடைக்கும்.
நம்ம தமிழ்நாட்டு மண்ல சங்க காலத்துல இருந்தே அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, மிகப்பெரிய அடையாளமா இருக்கிற பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்காங்க.
ஔவையார், காக்கை பாடினியார்னு சங்க காலத்து ஆளுமைகள், கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி இவங்கல்லாம் இலக்கியத்துல நிலைச்சு நிக்கிறவங்க.
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் இவங்கல்லாம் ஆன்மீகத்திலேயும், இலக்கியத்திலேயும் உயர்ந்த இடத்துல இருக்கிறவங்க.
ராணி வேலுநாச்சியார், குயிலி, ருக்மணி லட்சுமிபதி அம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அஞ்சலை அம்மாள், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்னு நம்ம நாட்டோட விடுதலைப் போராட்டத்தில் கலந்துகிட்டவங்க.
நம்ம தமிழ்நாட்டுப் பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்காங்க.
சுதந்திரப் போராட்டத்துல இருந்து சமூகநீதி போராட்டம் வரைக்கும் கலந்துகிட்டவங்கதான் நம்ம தமிழ்நாட்டுப் பெண்கள். அதுமட்டுமா? கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம்னு எல்லா டிபார்ட்மெண்ட்லயும் இன்னைக்கு நம்ம தமிழ்நாட்டுப் பெண்களோட பங்களிப்பு பெருசா இருக்குன்றதை யாரும் மறுக்கவே முடியாது.
அப்படிப்பட்ட நம்ம வீட்டுப் பெண்களுக்கு அரசியலையும் முன்னேற வழிவகை செய்யணும். அதுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கணும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர்றது ஏதோ சலுகைன்னு நினைக்கக்கூடாது. சமூக நீதி சார்ந்தது, அரசியலமைப்பு சார்ந்தது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்ம நாட்டோட மக்கள்தொகையில ஏறக்குறைய பாதிப்பேர் பெண்கள்தான். அதனால அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படணும். அரசியலமைப்பு சட்டமும் அவங்களுக்கு சமத்துவ உரிமையை வழங்கித்தானே இருக்கு.
நம்ம தமிழ்நாட்டை எடுத்துக்கிட்டாலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம். ஓட்டு சதவீதத்துல கூட அவங்கதான் அதிகம். ஆனா அவங்களுக்கான அரசியல் இடம்னு பார்த்தா, 2021 சட்டமன்றத்துல 12 பெண்கள் இருந்தாங்க. இப்போ இந்த 2026 சட்டமன்றத்துல 23 பெண்கள் இருக்காங்க.
ரெண்டு மடங்கு ஆகி இருக்கு. ஆனாலும் சதவீத கணக்குப்படி பெருசா உயரல.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒன்றிய அரசு 2023-ஆம் ஆண்டு மக்களவை, அனைத்து மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச சட்டமன்றத்தில் பெண்களுக்கென மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டை கட்டாயமாக்கி, 106-வது அரசியல் சாசன திருத்த சட்டத்தினை 2023 செப்டம்பர் 28-ல் நிறைவேற்றி, 2026 ஏப்ரல் 16 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இப்பினும், மேற்படி தொகுதி ஒதுக்கீடானது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் தொகுதி மறுவரையறை பணிகளுக்குப் பிறகுதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டு 131-வது அரசியல் சாசன திருத்த சட்ட மசோதாவையும், 2026-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவையும் தாக்கல் செய்து 2026 ஏப்ரல் 17-ல் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களில் ஆதரவு இல்லாமல் மசோதா நிறைவேறவில்லை.
அவ்வாறு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இணைப்பதால், அதனை நடைமுறைப்படுத்த மேலும் பல ஆண்டுகள் காலதாமதம் ஆகலாம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கென மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் காலம் தாழ்த்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது பெண்களின் அரசியல் உரிமையை மறுக்கும் செயலாகும். எனவே மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையுடன் இணைத்து அதனை கொத்தி வைக்கக்கூடாது.
மேற்படி தொகுதி ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்ம டிவிகே அரசு பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குறதுல முன்னோடி மாநில அரசாதான் இருக்கு.
நாலு பெண் அமைச்சர்கள் இருக்காங்க. பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பான சிங்கப்பெண் அதிரடிப் படை இருக்கு. பெண்களுக்கான பாதுகாப்புல பெண்களுக்கான இம்பார்ட்டன்ஸ்ல டிவிகே அரசு ரொம்ப கவனமாதான் இருக்கு. இனியும் அப்படித்தான் இருக்கும்.
உள்ளாட்சியில உள்ளாட்சியில பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்ததும், இன்னைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளா மாறி இருக்காங்க. அவங்களோட தலைமைப் பண்பும் ப்ரூவ் ஆகி இருக்கு.
அதே மாதிரி பெண்களோட வெற்றியை சட்டமன்றத்திலேயும் பார்லிமெண்ட்டிலேயும் எக்ஸ்டென்ட் பண்ண வேண்டிய நேரம் வந்துருச்சு.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று இந்த பேரவையின் வாயிலாக பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
இது பெண்களுக்கான சலுகை இல்ல, இது அவர்களுடைய ஜனநாயக உரிமை. இது ஒருவருக்கான வெற்றி அல்ல,
இது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி.
ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயர்கிறது, ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது ஒரு நாடே உயர்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இணைப்பதால் ஏற்படும் காலதாமதத்தின் காரணமாக பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை ஒத்திவைக்கக்கூடாது என்றும், அதனை விரைவாக அமல்படுத்த தகுந்த அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
