மத்திய அரசு மசோதாவை கொண்டு வராத போது தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானம் ஏன்?- பிரேமலதா கேள்வி

Published On:

| By Mathi

Why Pass a Delimitation Opposition Resolution?- Premalatha

மத்திய அரசு மசோதா எதனையுமே கொண்டு வராத நிலையில் தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது ஏன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான அரசினர் தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட முன்மொழிவு இதுவரைக்கும் மத்திய அரசால் கொண்டு வரப்படவில்லை. அப்படி இருக்கையில், நம் தமிழ்நாட்டில் அந்த மசோதா குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது என்பது எந்த அடிப்படையில் இது சரியாக இருக்கும் என்பதை நான் கேட்கிறேன்.

ADVERTISEMENT

தமிழகத்தை விட பல்வேறு மாநிலங்களிலே மக்கள்தொகை அதிகமாகி இருக்கிறது. அந்த ஒரு காரணத்திற்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற எம்பிக்களினுடைய எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது.

எனவே, மத்திய மாநில அரசுகள் இரண்டும் கலந்து எல்லா மாநிலங்களுக்கும் 50% நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை கணிசமாக உயரும் வகையில் சமமாக கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டிலும் எம்பிக்களினுடைய எண்ணிக்கை உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ADVERTISEMENT

543 எம்பிக்கள் இருக்கின்ற இடத்திலே 815 எம்பிக்கள் வருவதற்கு வாய்ப்பாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 39 எம்பிக்கள் மட்டுமே இருக்கின்றார்கள். இந்த தொகுதி மறுவரையின் மூலமாக நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு 59 எம்பிக்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அந்த வகையில் 7.2% நம் விகிதாச்சாரம் குறையாமல் நம் மக்களுடைய பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேச முடியும். இன்றைக்கு நிலையில் 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி தான் இப்பொழுது நாடாளுமன்றத்திலே இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த தொகுதி மறுவரை செய்வதன் மூலம் 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வீதமாக அந்த தொகுதிக்கு மக்கள் சிறப்பாக நிச்சயமாக நம்மளுடைய எம்பிக்கள் பணியாற்ற முடியும்.

பெண்களுக்கு 33% தர வேண்டும் என்று ஒரு தீர்மானம், அதை ஒரு பெண் அவை உறுப்பினராக, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக அதை நான் வரவேற்கிறேன். இன்னும் இந்த விகிதாச்சாரம் அதிகமாக வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகையால் மத்திய அரசு சட்ட முன்வடிவு கொண்டுவந்த பின்னரே தொகுதி மறுசீரமைப்பு பற்றி நாம் ஆய்வு செய்வது சிறப்பாக இருக்கும் என்ற என் கருத்தைக் கூறுகிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share