தொகுதிகள் எண்ணிக்கையை 50% முதலில் அதிகரித்தாலும் ஆபத்து வரும்.. எப்படி? முதல்வர் விஜய் விளக்கம்

Published On:

| By Mathi

CM Vijay Explains Why Opposed Delimitation?

தொகுதி மறுவரையறை மசோதாவின்படி மக்களவை தொகுதிகளை 50% அதிகரித்தாலும் பின்னர் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் அபாயம் உள்ளது என தமிழக முதல்வர் விஜய் சுட்டிக்காட்டினார்.

தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அரசினர் தீர்மானத்தை முதல்வர் விஜய் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் விஜய் பேசியதாவது:

ADVERTISEMENT

டீலிமிடேஷன் தொடர்பான ஆலோசனை கூட்டம், தமிழ்நாட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் தமிழ்நாடு அரசால் நமது தலைமையில் 08.08.2026 அன்று கலைவாணர் அரங்கத்தில் நடந்துச்சு.

அந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 11 உறுப்பினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினரும் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரும் என ஆறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றாங்க.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் டீலிமிடேஷன் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுச்சு. அந்த ஆலோசனையில் டீலிமிடேஷனால் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு
டீலிமிடேஷனால் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், அதை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, இறுதியில் டீலிமிடேஷன் தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றலாம் என முடிவானது.

இந்தியாவில் 1952-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அது தொடர்ந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிற சென்சஸ் டீடைல்ஸ் படி, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செஞ்சு 1976 வரை தேர்தல்கள் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தப்படி, மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு டீலிமிடேஷன் காரணமாக மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக அடுத்த 25 வருஷத்துக்கு 1971-ஆம் ஆண்டு சென்சஸ் படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வைக்கப்படும்னு சட்டம் இயற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதே நிலையை முன்னிறுத்தி 84-வது மற்றும் 87-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1971 சென்சஸ் படி, மக்களவை தொகுதிகள் நிலைநிறுத்தப்பட்டன. இந்த திருத்தங்களின் நோக்கமே, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை செயல்படுத்திய மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்த 25 வருஷ லிமிட் இந்த 2026-ல் முடியுது. இதை முன்னிட்டு கடந்த 50 வருஷமா இருந்து வந்த டீலிமிடேஷன் தடையை அகற்றி 2011 சென்சஸ் அடிப்படையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா ஏப்ரல் 2026-ல் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த மசோதா தோல்வியில் முடிஞ்சது.

இப்போ மீண்டும் ஒன்றிய அரசு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க செய்து டீலிமிடேஷன் மசோதாவை அறிமுகப்படுத்த உத்தேசித்து இருப்பதாக சில அரசியல் கட்சிகள் தெரிவிப்பதாக கூறப்படுது.

இந்த வரக்கூடிய மசோதா குறித்து 8.8.2026-ல் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில் விவாதிச்சப்போ மேல சொன்ன மாதிரி தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதா நிறைவேறினால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 50% மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை முதலில் அதிகரித்தாலும், அதனைத் தொடர்ந்து 2026 சென்சஸுக்குப் பிறகு அரசியலமைப்புப் பிரிவு ஆர்டிகிள் 812A அதன் கீழ் மாநிலத்தின் மக்களவையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும்.

இப்படி செஞ்சா தென்மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பிருக்கு.

கடைசியில, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை சிறப்பாகப் செயல்படுத்தின தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பெரும் அரசியல் பிரதிநிதித்துவ அநீதி இழைக்கப்படும். சர்வ வல்லமை பெற்றதா டீலிமிடேஷன் ஆணையம் இருக்கு. இந்த அதிகாரத்தைத் தவிர்த்து பாராளுமன்றத்திற்கே இறுதி செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி பொருளாதார முன்னேற்றம் பெற்றுவரும் நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.

எனவே தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும் மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும் மேலும் தற்போது மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும். அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்டத்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுச்சு.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தினை அமல்படுத்த மேலும் காலதாமதம் இல்லாமல் தற்போது 543 என்ற நிலையிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகுதி மகளிர் தொகுதிக்கு வருகின்ற 2029 பாராளுமன்றத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முன்மொழியும் தீர்மானிக்கப்பட்டுச்சு.

ஆகவே, மேற்கூறிய காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சியின் தலைவர்களும் தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு தமிழ்நாட்டை முன்னிறுத்தி கட்சி வேறுபாடு இன்றி ஒருமித்த குரலில் பேச வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நாம முன்மொழிகிற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share