அரசியல் பரபரப்புக்காக முதல்வர் விஜய் தீர்மானம்- எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு!

Published On:

| By Mathi

CM Vijay's Resolution Against Delimitation Bill Amid Political Drama – Edappadi Palaniswami

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தது அரசியல் பரபரப்புக்கானது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதல்வர் விஜய் இன்று அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாடு தெளிவானது. அதாவது மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறையக்கூடாது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டிற்கு தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

மொத்த பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையான 543 இடங்களில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 7.18% விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரையறையில் குறையக்கூடாது.

ADVERTISEMENT

இதுதான் எங்கள் தேர்தல் அறிக்கையிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாக நாங்கள் தெரிவித்துள்ளோம்.

தொகுதி மறுவரையறையில் மாநிலங்களுக்கான தற்போதுள்ள விகிதாச்சாரம் குறையாமல் பாதுகாக்கப்படும் என்பது வெளிப்படையாக இல்லை.

ADVERTISEMENT

இந்த உறுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதால் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் 16.04.2026 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேசுகின்ற போது தமிழ்நாட்டிற்கான விகிதாச்சார பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதி அளித்தார்.

இதன்படி 7.18% என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுவதால் உறுப்பினர் எண்ணிக்கை 50% உயரும். தமிழ்நாட்டிற்கு இப்பொழுது இருப்பதை விட கூடுதலாக 20 இடம் சேர்த்து 59 இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே மாநிலத்திற்கான தற்போது உள்ள பிரதிநிதித்துவம் குறையாமல் எண்ணிக்கை 50% உயர்த்த வழிவகை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.

தமிழ்நாட்டில் பெரிய ஊராட்சிகள் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுகிறது.

அதேபோல பெரிய ஊராட்சி ஒன்றியங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுகின்றன.

பெரிய தாலுக்காக்கள் பல தாலுக்காக்கள் பிரித்துள்ளனர். நிர்வாக வசதிக்காக பல கோட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.

அதேபோல பல தொகுதிகள் அடங்கிய பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகின்றன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கின்ற பொழுது நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது 6 மாவட்டத்தினை பிரித்துள்ளோம்.

அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையே 10.2 லட்சம் வாக்காளர் தான் அங்க இருக்கிறாங்க. அதுக்கு ஒரு முதலமைச்சர்; அமைச்சர்கள் எல்லாம் அங்க இருக்கிறாங்க.

ஆனால், தமிழ்நாட்டில் புதுச்சேரி மாநிலத்தை விட அதிகமான வாக்காளர் எண்ணிக்கை கொண்ட பல மக்களவை தொகுதிகள் உள்ளன.
ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் 20,20,388 வாக்காளர்கள் இருக்கிறாங்க. திருவள்ளூர் தொகுதியில் 19,62,232 வாக்காளர்கள் இருக்கிறாங்க.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில தமிழகத்திலே அதிக வாக்காளர் எண்ணிக்கை உள்ள தொகுதி அந்த தொகுதியில் 5,36,991 வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.

எனவே, நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதியை வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை.

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த பாதகமும் இல்லாமல் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை.. தற்போதுள்ள விகிதாச்சாரப்படி அதாவது 7.18%க்கு குறைவு இல்லாமல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.

அதோட இன்றைக்கு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் 1998-ல் மத்தியில் மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அந்த மத்திய ஆட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கு வகித்தது.

அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த தம்பிதுரை,சட்டத்துறை அமைச்சராக இருந்தார்.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்து பேசிக் கொண்டிருந்த பொழுது எதிர்தரப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவை பிடித்து கிழித்தெறிந்து விட்டார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1998-லேயே பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% இட ஒதுக்கீடு பெற்று தருவதற்கு முயற்சி செய்யப்பட்டது.

அதோட உள்ளாட்சி அமைப்பிலே 33% இட ஒதுக்கீடு இருந்தது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி இருக்கின்ற பொழுது உள்ளாட்சி அமைப்பிலே 33% இட ஒதுக்கீட்டை 50% உயர்த்தி உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடை வழங்கியதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதையும் இந்த நேரத்திலே நினைவு கூர்ந்து.

மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையை மசோதா தாக்கல் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழக அரசு அரசியல் காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தை எவ்வளவு அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அரசியல் தனி தீர்மானமாக கொண்டு வருகிறது என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு சாதகமாக உள்ளதா பாதகமாக உள்ளதா என்பது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அரசியல் காரணங்களுக்காக தமிழக வெற்றிக்கழக அரசு கொண்டுவந்த இந்த தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கின்றது.

அதே நேரத்தில் இந்த தீர்மானத்தில் வரவிருக்கும் மக்களவை பொது தேர்தலிலும் அதன் பிறகு நடைபெறுகின்ற சட்டமன்ற பொது தேர்தலிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டு பலனை பெண்களுக்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கின்றது.

அந்த தீர்மானத்தை மட்டும் அதாவது நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்த தீர்மானத்தை மட்டும் ஆதரித்து அமர்கின்றேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share