அரசினர் தீர்மானம் வரும் போது முதலில் பிரதான எதிர்க்கட்சியை தான் பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இன்று அவை கூடியதும் முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுபோன்று தனி தீர்மானம் கொண்டு வந்தால் முதலில் எதிர்க்கட்சித் தலைவரைத் தான் சபாநாயகர் பேச அழைப்பார்.
ஆனால் இன்று (ஆகஸ்ட் 12) சிபிஎம் எம்.எல்.ஏ ஆர்.செல்லசாமியை பேச அழைத்தார்.
அப்போது எழுந்து பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, ”பேரவை தலைவருக்கு தெரிந்த செய்திதான் இது. அரசின் சார்பாக 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை செய்கிற போது, நன்றி சொல்வதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் அந்த பகுதியில் இருந்துதான் விடுவார்கள். ஆனால் தனி தீர்மானங்களை முதலமைச்சரோ, அமைச்சர்களோ கொண்டு வரும் போது பிரதான எதிர்க்கட்சியைத் தான் முதன் முதலாக பேச அனுமதிப்பார்கள். இதுவரையில் இப்படிதான் மரபு இருந்தது. அதனால் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதியுங்கள்” என்று கேட்டார்.
இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ”நீங்கள் சொல்வதை புரிந்துகொள்ள முடிகிறது. கடந்தமுறை இப்படிதான் அனுமதித்தேன். 1 எம்.எல்.ஏ, 2 எம்.எல்.ஏ.க்கள் அந்த வரிசையில் வருகிறது” என்று கூறியபோது, எ.வ.வேலு, “தனி தீர்மானம் கொண்டு வரும் போது எதிர்க்கட்சித் தலைவரைத் தான் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
உடனே எழுந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், ”எல்லாக் கட்சியும் பேசிய பின் எதிர்க்கட்சி அதற்கான விளக்கத்தை தரும்போது இன்னும் தெளிவாக இருக்கும் என்ற அடிப்படையில் பேரவை தலைவர் இந்த வரிசையில் அழைத்திருக்கிறார்” என பதிலளித்தார்.
இதையடுத்து சபாநாயகர், ”பேரவை விதி 98ன் படி, தீர்மானத்தை படித்து காட்டிய பின்னர் பேரவை தலைவர் அழைக்கிற வரிசையில் உறுப்பினர்கள் பேசலாம். அதனடிப்படையில் சில மாறுதல்களை நான் செய்கிறேன்” என்றார்.
உடனே எ.வ.வேலு, ”இந்த அவையில் முழு அதிகாரம் உங்களுக்கு தான் இருக்கிறது. இதுவரை என்ன மரபு இருந்தது என நான் நினைவூட்டுகிறேன். நீங்கள் முடிவெடுங்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து சபாநாயகர் சிபிஎம் எம்.எல்.ஏ ஆர்.செல்லசாமியை பேச அனுமதித்தார்.
