ராஜன் குறை
தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் நிச்சயம் வித்தியாசமான தேர்தல்தான் இது. காரணம் இந்த தேர்தலில் போட்டி யாருக்கும், யாருக்கும் இடையில் என்பதிலேயே அனைத்து தரப்பினருக்கும் உடன்பாடு இருக்கவில்லை. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க இந்த தேர்தல் “டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான போட்டி” என்று அறிவித்தே தேர்தலை சந்திக்கிறது. எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க இந்த நோக்கினை மறுத்து, இந்த தேர்தலும் வழமையான தமிழ்நாட்டு முரணரசியலான “தி.மு.க எதிர் அ.இஅ.தி.மு.க” என்ற போட்டிதான் என்று கூறுகிறது. இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டு புதிதாகக் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் “தி.மு.க எதிர் தவெக” என்பதுதான் போட்டி என்று ஓயாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் அரற்றத் தொடங்கினார்.
ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்த தி.மு.க வரலாறு
தி.மு.க-விற்கு 2018-ஆம் ஆண்டு ஸ்டாலின் தலைமையேற்றதிலிருந்தே ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த பாஜக-வின் இந்துத்துவ, மீட்புவாத, பாசிச அரசியலுக்கு எதிராக இயங்குவது என்ற உறுதியான நிலைபாட்டை எடுத்துள்ளார். இது திராவிட இயக்கத்தின் அடிநாதமான கொள்கைகளின் வரலாற்றுத் தொடர்ச்சி எனலாம். பார்ப்பனரல்லாதோர் அரசியல், தமிழ் மொழி பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, இரண்டையும் இணைக்கும் தமிழ் மாநில உரிமைகள், சுயாட்சி ஆகியவயை அனைத்துமே பாஜக-வின் இந்துத்துவ மீட்புவாத பெருந்தேசிய நோக்கிற்கு எதிரானவை.
உண்மையில் போட்டியிடும் தொகுதிகள், ஏற்கனவே பெற்றுள்ள வெற்றிகள் அடிப்படையில் தி.மு.க-விற்கும், அ.இஅ.தி.மு.க-விற்கும்தான் போட்டி. ஆனால் அ.இ.அ.தி.மு.க பாஜக-விடம் கொள்கை ரீதியாக சரணடைந்து விட்டதால்தான் தி.முக அதனை டில்லி அணியில் சேர்த்துவிட்டது. பாஜக அ.இஅ.தி.மு.க முகமூடி அணிந்து வருகிறது என்பதுதான் அதன் வாதம்.
ஆனால் அ.இ.அ.தி.மு.க நாங்கள் பாஜக-வுடன் தேர்தல் கூட்டணிதான் வைத்துள்ளோம். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று கூறி, தி.மு.க வேண்டுமென்றே பாஜக அடிமையென்று எங்களைக் கூறுகிறது. நாங்கள் பாஜக-வீற்கு 27 தொகுதிகளைத்தான் கொடுத்துள்ளோம். எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று கூறி வருகிறது.
தவெக பாஜக-அ.இ.அ.தி.மு.க கூட்டணியை புறக்கணித்து அபத்தமாக தன்னை தி.மு.க-வின் முக்கிய எதிரியாக முன்னிறுத்திக்கொள்வது பேசுவதற்கே தகுதியில்லாத ஒன்று என்பதால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அந்தக் கட்சியை குறிப்பிட்டுப் பேசுவதே கிடையாது. பெரும்பாலும் தி.மு.க அந்த கட்சியை பொருட்படுத்துவதேயில்லை. சில சமயங்களில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சில கருத்துக்களை தேவை கருதி கூறுவதுடன் சரி.
தி.மு.க தன் நிலைபாடு பாஜக, அ.இ.அ.தி.மு.க முகமூடி அணிந்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது என்பதே என்று மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளின் முதுகிலேறி உள்ளே நுழையும் பாஜக அந்த மாநிலத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நடைமுறையாகக் கொண்டுள்ளது வெளிப்படையானது. மஹாராஷ்டிரா, பீஹார் ஆகிய இரண்டு மாநிலங்களும் முக்கியமான உதாரணங்கள்.
தி.மு.க-வின் கருத்திற்கு முக்கிய ஆதாரம் எடப்பாடி பழனிசாமி பாஜக கொண்டுவந்த பல்வேறு பிற்போக்கு சட்டங்களை ஆதரித்ததுதான். காஷ்மீர் மாநில அந்தஸ்த்தை பறித்ததை எதிர்க்கவில்லை. குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை ஆதரித்தார். விவசாய சட்டங்களை ஆதரித்தார். பின்னர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பேரம் படியாமல் தனித்து நின்ற போது, கூட்டணி தர்மத்திற்காக அந்த சட்டங்களை ஆதரித்ததாகச் சொன்னார்.
ஆளுனர் ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் திராவிட கோட்பாட்டை நிராகரித்துப் பேசியபோது, திராவிடம் என்ற கருத்தே பொய்யானது என்று சொன்னபோது எடப்பாடி பழனிசாமி வாயையே திறக்கவில்லை. செய்தியாளர்கள் கேட்டபோது திராவிடம் குறித்தெல்லாம் ஆய்வாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். இவ்வளவு பலவீனமான கொள்கைப் பிடிப்பு கொண்டவராக இருப்பதால்தான் இவரை பாஜக அடிமை என்று கூறுவது சாத்தியமானது என்பது மட்டுமல்ல, அவசியமானதாகவும் மாறிவிட்டது.

பிரசாரப் பாடல்: ஒளிஞ்சு வரும் பருந்து
இதையெல்லாம் மனதில் வைத்துதான் தி.மு.க இந்த தேர்தலுக்கான பிரசாரப் பாடலை உருவாக்கியது. அதன் வரிகள் துல்லியமானவை:
பெரும் பெரும் பருந்து
வரும் வரும் ஓளிஞ்சு
நடிப்பினைப் புரிஞ்சு
விரட்டுவோம் துணிஞ்சு
அதாவது பாஜக என்னும் பருந்து நேரடியாக வராமல், அ.இ.அ.தி.மு.க பின்னால் ஒளிந்துகொண்டு வருகிறது என்பதுதான் அதன் பொருள். இந்த கருத்தை அ.இஅ.தி.மு.க தொடர்ந்து மறுத்து வந்தது. பல அரசியல் விமர் சகர்களும் பழனிசாமி பாஜக-விற்கு 27 தொகுதிகள்தான் கொடுத்துள்ளார். அது எப்படி அடிமைத்தனம் என்றெல்லாம் வாதம் செய்தார்கள்.
இந்த விவாதத்தை முடித்து வைக்கும் விதமாக வந்ததுதான் தொகுதி மறுவரையறை சட்டம். அதனைச் சுருக்கமாக புரிந்துகொள்வோம். அரசியலமைப்பு சட்டம், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து முடிந்தபிறகு, புதிய மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரித்து மறுவரை செய்யலாம் என்று கூறுகிறது.
இந்தியா முழுவதும் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு ஒரு சிக்கல் தோன்றியது. அதாவது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் தோன்றியது. அப்படி நடந்தால் மாநிலங்கள் உண்மையில் குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தாமல், அதிக தொகுதிகள் பெருவதற்காக மக்கள் தொகையை அதிகரிக்கத் துவங்கினால் அது நாட்டுக்கே நல்லதல்ல என்ற கவலை ஏற்பட்டது.
அதனால் 1971- சென்சஸ் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகளே 1976 முதல் 25 ஆண்டுகளுக்குத் தொடரும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 543 தொகுதிகள் என்பது நிலைபடுத்தப்பட்டது. பின்னர் 25 ஆண்டுகள் முடிந்தபோது, 2001-ஆம் ஆண்டு மீண்டும் இன்னொரு 25 ஆண்டுகளுக்கு இந்த நிலை நீடிக்கப்பட்டது.
இப்போது அந்த காலமும் முடிந்துவிட்டது. மக்கள் தொகை பெருகிவிட்டது. அதனால் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் என்று சிலர் கருதினர். பாஜக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்கள் உட்காரக் கூடிய வித த்தில் அரங்கம் உருவாக்கப்பட்டது.
இதில் பிரச்சினை என்னவென்றால் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரிப்பின் சதவீதம் மிக அதிகம். தென் மாநிலங்களில் குறைவு என்பதால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை வரையறுத்தால் தென் மாநிலங்களின் விகிதாசார பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதுதான். உதாரணமாக 543 கொண்ட அவையில் தமிழ்நாடு 39 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது 7.2% என்று வைத்துக்கொண்டால் புதிய சபையில் அது 850 பேரில் 46 பேர் என்று கொண்டால் 5.4% ஆகக் குறைந்துவிடும். மக்கள் தொகையைக் குறைத்ததற்காக தன் அரசியல் அதிகாரத்தை இழப்பதாக ஆகிவிடும்.
பாஜக இந்த பிரச்சினையை மடைமாற்றுவதற்காக பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டைத் தருவதை இந்த பிரச்சினையுடன் இணைத்தது. அதாவது தொகுதி மறுவரையறை செய்யும்போது 33% தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று தீர்மானம் இயற்றியது. அதனை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுமா என்ற அச்சம் எழுந்தது.
இதனை முன்கூட்டியே தவிர்ப்பதற்காக ஸ்டாலின் முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டினார். அதில் இப்போதிருக்கும் 543 தொகுதிகளே மேலும் முப்பதாண்டுகளுக்குத் தொடரும் என்று அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப் பட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இப்போதுள்ள எண்ணிக்கை அடிப்படையிலேயே வழங்கக் கோரியது.
இந்த பின்னணியில்தான் பாஜக திடீரென சென்ற வாரம் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய நாடாளுமன்றத்தைக் கூட்டியது. அதில் டிலிமிடேஷன் கமிட்டியை அறிவிப்பது, மொத்த தொகுதிகளை 850 என்று வரையறை செய்வது, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தையுமே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான மசோதாக்கள் என்று பாஜக கூறியதுதான் மிகப்பெரிய மோசடி எனலாம். பெரும் பருந்து வரும் ஒளிஞ்சு என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப மகளிர் நலன் என்ற போர்வையில் இந்திய அரசியல் கட்டுமானத்தையே மாற்றியமைக்க பாஜக முயன்றது.

பொங்கியெழுந்த முதல்வர் ஸ்டாலின் மிகக் கடுமையாக ஒன்றிய அரசை எச்சரித்தார். தமிழ்நாடு முழுவதும் அனைவர் இல்லங்களிலும் கருப்புக் கொடி ஏற்றச் சொன்னார். கருப்புச் சட்டை அணியச் சொன்னார். அவரே கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்தார். இது மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், பிற மாநில முதல்வர்களுடன் பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர்களை மசோதாக்களை எதிர்த்து வாதிட அனுப்பி வைத்தார். நாடாளுமன்றத்தில் பிரதமர் கூச்சமே இல்லாமல் இந்த மசோதாக்கள் மகளிருக்கானவை என்று பசப்பினார். இந்த மசோதாக்களை ஏற்றுக்கொள்ளாவிடால் எதிர்கட்சிகள் மகளிருக்கு எதிரானவை என்று பொருள்படும் என்று மிரட்டிப் பார்த்தார். ஆனால் எதிர்கட்சிகள் இணைந்து நின்று இந்த மசோதாக்களை முறியடித்தன. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால் மசோதாக்கள் தோல்வி அடைந்தன.
தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தைக் காக்க இவ்வளவு முக்கியமான போர் மூண்டபோது பழனிசாமி ஒன்றிய பாஜக அரசை ஆதரித்தார். வாய் வார்த்தையாக அமித் ஷா எல்லா மாநிலங்களுக்கும் 50% இருக்கைகள் அதிகரிக்கும் என்று சொன்னதை அனைவரும் நம்ப வேண்டும் என்றார். அவர்கள் கொண்டுவந்த மசோதாவில் அப்படியொரு கருத்தே இல்லையே என்றால், அமித் ஷா சொல்வதே “வேதவாக்கு” என்று தன் அடிமை விசுவாசத்தை நிரூபித்தார். தி.மு.க-வின் பிரசாரப் பாடல் முற்றிலும் உண்மையாக மாறியது. ஒளிஞ்சு வந்த பருந்தின் நடிப்பினை புரிஞ்சு துணிஞ்சு விரட்டியது தி.மு.க கூட்டணி.

உறுதியான பெரும் வெற்றி
பாஜக தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான முடிவை எவ்வளவு நயவஞ்சமாக செயல்படுத்த முயல்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். அதனை முதல்வர் ஸ்டாலின் சிறிதும் தயக்கமின்றி கடுமையாக எதிர்த்து முறியடித்த செயலை அனைவரும் வியந்து போற்றினர். இது தேர்தல் களத்தில் ஒரு ஆதரவு அலையை உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது.
கொஞ்சம் கூட கூச்சமின்றி பழனிசாமி பாஜக-வின் ஏமாற்று வேலையை ஆதரித்து பேசியதும், அதன் பிறகு பிரதமருடன் கூட்டத்தில் பங்கேற்றதும் அவர் எந்த அளவு மாநில நலனில் அக்கறையின்றி இருக்கிறார் என்பதை அம்பலப்படுத்தியது. ராகுல் காந்தி எப்படி மோடி தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ அதுபோல தமிழ்நாட்டு முதல்வர் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றார். ஸ்டாலின் அப்படி கட்டுப்பட மாட்டார் என்பதால், பழனிசாமியை ஆட்சிக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்றார். ஸ்டாலினின் உறுதியான ஆளுமையை, தலைமைப் பண்பை ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேயும். தேஜஸ்வி யாதவும் வானளாவ புகழ்ந்தனர்.
இப்போது களத்தில் உள்ள இரண்டு முக்கிய அணிகளையும் பண்புரீதியாக ஒப்பிட்டால் எந்த அளவு தி.மு.க அணி முன்னணியில் இருக்கிறது என்று புரியும். ஐந்து தலைப்புகளில் ஒப்பிடுவோம். 1) முதல்வர் வேட்பாளர்; 2) கூட்டணி ஒருங்கிணைப்பு; 3) கட்சி கட்டமைப்பு; 4) ஆட்சியின் சாதனைகள்; 5) பிரசாரம்.

முதல்வர் வேட்பாளர்: ஐந்தாண்டு ஆட்சிக்குப் பிறகு ஸ்டாலின் அகில இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவராகக் கருதப்படுகிறார். பீஹார் தேர்தலின் முன்னால் அங்கே உரையாற்ற அழைக்கப்பட்டார். பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணியில் இருப்பது அவரை சிறந்த ஆட்சியாளராகவும் அடையாளப்படுத்தியுள்ளது. பிற கட்சித் தலைவர்களை அணுகுவது, தனிப்பட்ட நட்புறவைப் பேணுவது, தன்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களையும் உடல் நலம் சரியில்லையென்றால் சென்று பார்த்து நலம் விசாரிப்பது என பண்பட்ட, முதிர்ச்சியான அரசியலுக்கு உரியவராக அவர் விளங்குகிறார். கூட்டணி கட்சியினர் அவரைப் போற்றிப் பாராட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியோ தன் சொந்தக் கட்சிக்காரர்களையே மன்னிக்காதவராக, கட்சியை விட்டுச் செல்பவர்களை தடுத்து அரவணைக்க முன்வராதவராக, தொடர்ந்து எதிரிகளை உருவாக்கிக் கொள்பவராகவே வெளிப்படுகிறார். அவரிடம் மாநில உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வோ, கோட்பாட்டுப் புரிதல்களோ வெளிப்படுவதில்லை. தன்னுடைய அரசியல் முடிவுகளை அவரால் நயம்பட விளக்கவும் முடிவதில்லை.

தன்னை முதல்வராக்கிய சசிகலாவிடம் அவர் ஏன் விரோதம் பாராட்டுகிறார் என்பதை பொதுவெளியில் விளக்காதது, அவர் சசிகலா காலில் விழுந்து பதவியேற்ற காட்சியை கேலிப்பொருளாக மாற்றிவிட்டது. இப்போது சசிகலாவே மீண்டும் அரசியல் களத்திற்கு வந்து அவரை துரோகி என்றழைத்து பிரசாரம் செய்யத் துவங்கிவிட்டார். தேர்தல் களத்தில் பழனிசாமி தொடர்ந்து சந்திக்கும் தோல்விகளுடன் இவையெல்லாம் சேர்ந்து கொள்ளும்போது அவர் ஆளுமையற்ற, சுயநல அரசியல்வாதியாகவே அறியப்படுகிறார். அவரை ஆதரித்து பேச விரும்புபவர்கள்கூட விவாதங்களில் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். கூட்டணி கட்சியினர், குறிப்பாக பாஜக தலைவர்கள் அவரை சிறப்பித்துப் பேசுவதேயில்லை. பழனிசாமி பிரதமரை புகழ்கிறார். பிரதமர் அவரை பராட்டுவதும் இல்லை; அவர் முதல்வராக வேண்டுமென முன்மொழிவதுமில்லை.
கூட்டணி ஒருங்கிணைப்பு: ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஏழாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் என தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது. எல்லா கூட்டணிகளிலும் இயல்பாகவே ஏற்படக்கூடிய தொகுதிப் பங்கீட்டு முரண்பாடுகள் வந்தாலும், ஸ்டாலின் அனைத்து கட்சித் தலைவர்களையும் அரவணைத்துச் செல்வதில் வெற்றி பெற்று விடுகிறார். இந்துத்துவ, மதவாத எதிர்ப்பு என்ற வலுவான இலட்சியம் அணியை ஒருங்கிணைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் அ.இ.அ.தி. மு.க அணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க, தி.மு.க அணியில் இணைந்திருப்பது பொதுமக்கள் பார்வையில் அணிக்கு வலுச்சேர்த்துள்ளது. பழனிசாமி தே.மு.தி.க-விற்குத் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய மாநிலங்களவை உறுப்பினர் இருக்கையை தி.மு.க அந்த கட்சிக்குக் கொடுத்தது ஸ்டாலினின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. பிரேமலதா முழு மனதுடன் உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல எஸ்.டி.பி.ஐ கட்சியும் அணி மாறியுள்ளது சிறுபான்மை வாக்குகளை முழுமையாக தி.மு.க கூட்டணி பக்கம் கொண்டுவந்துவிட்டது.
பழனிசாமி கூட்டணியில் நிலையற்ற தன்மை உருவாக இடம்கொடுத்துவிட்டார். சென்ற சட்டமன்ற தேர்தலை பாஜக, பாமக மற்றும் இதர கட்சிகளுடன் சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-விடமிருந்து விலகிவிட்டார். அதுவும் தேர்தலுக்கு சற்று முன்னால் என்.டி.ஏ கூட்டணிக்கட்சிகளை பிரதமர் கூட்டியபோது டில்லிக்குச் சென்று பங்கேற்றவர், அதன் பிறகு கூட்டணியை முறித்தார். அவர் கட்சிக்காரர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பல தலைவர்கள் பாஜக கூட்டணியால்தான் நாம் தோற்றோம் என்று வெளிப்படையாகக் கூறினர். பழனிசாமி இனி ஒருபோதும் பாஜக-வுடன் கூட்டணி கிடையாது என்றார். இத்தனைக்கும் பிறகு ஓராண்டுக்கு முன்னால் திடீரென டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து மீண்டும் கூட்டணியில் சேர்ந்துவிட்டார். அவர் ஏன் இப்படி அபவுட்டர்ண் எடுக்கிறார் என்பதை பொருத்தமான சொல்லாடலில் விளக்க முடிவதில்லை. பாஜக-வால்தான் தோற்றோம் என்று சொன்னவர்கள், அதனுடன் எந்த கொள்கை உடன்பாடும் கிடையாது என்றவர்கள், ஏன் திடீரென கூட்டணி வைக்கிறார்கள் என்று யாருக்கும் புரிவதில்லை. இதனால்தான் மிரட்டப் பட்டார், அடகு வைத்தார் என்பது போன்ற பேச்சுக்கள் எழுகின்றன.
பாஜக மட்டுமில்லாமல் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவருமே மிக, மிகக் கடுமையாக, சொல்லக் கூசும் வார்த்தைகளில், பழனிசாமியை சில காலம் முன்புவரை விமர்சித்துள்ளார்கள். இப்போது அவருடன் சேர்ந்து ஒரே மேடையை பகிர்ந்துகொள்கிறார்கள். இது போன்ற மாறுதல்கள் அரசியலில் சகஜம் என்றாலும், ஓரளவாவது காரணங்கள் கூறப்பட வேண்டும். இல்லாவிட்டால் கட்சி அணியினரிடம் ஒற்றுமை ஏற்படுவதோ, அவரவர் ஆதரவு வாக்குகள் மற்றவருக்குக் கிடைப்பதோ கடினம். அப்படி வாக்குகள் பரிமாறப் படவில்லையென்றால் கூட்டணியால் எந்த பயனும் கிடையாது.
கட்சி கட்டமைப்பு: தி.மு.க கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தன் கட்சி அணிகளை விரிவாக்கிக் கட்டமைத்து வருகிறது. இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்டவை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த அணியினர் நட த்திய மாநாடுகள், வாக்குச்சவடி முகவர்கள் மாநாடுகள் போன்றவை பிரம்மாண்டமாக இருந்தன. அவற்றிற்கு ஒப்பாகச் சொல்லக்கூடிய எந்த மாநாடும் அ.இஅ.தி.மு.க-வால் கடந்த ஆண்டில் நட த்தப் படவில்லை.

ஆட்சியின் சாதனைகள்: பெரும் வரலாற்று முன்னகர்வுகளை தி.மு.க இந்த ஐந்தாண்டுகளில் சாதித்துள்ளது. விடியல் பயணம் என்ற மகளிரின் கட்டணமில்லா பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் என்று தொடங்கினால் வரிசையாக திட்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கல்வி, மனித வள மேம்பாடு சார்ந்து மிகச் சிறப்பான முன்னெடுப்புகள் நடந்துள்ளன. சுகாதாரத் துறையிலும் பல பாய்ச்சல்கள் நடந்துள்ளன. கீழடி அகழாய்வு போன்ற பண்பாட்டுத் தளங்களில் மிகப் பெரிய சாதனைகள் நிகழ்ந்துள்ளன. ஆட்சியை விமர்சித்துப் பேசுவதுதான் அரசியல் விமர்சனம் என்ற தவறான எண்ணத்தால்தான் இந்த சாதனைகளை எடுத்துக் கூற ஊடகங்கள் தயங்குகின்றன. இத்துடன் ஒப்பிடும்போது பழனிசாமி நான்காண்டுகளை வீணாக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். விமர்சகர்கள் தி.மு.க சாதனைகளைப் புறக்கணித்தாலும் அவற்றால் பயணடைந்த அடித்தட்டு மக்கள் அவற்றை நிச்சயம் மனதில் கொண்டிருப்பார்கள்.

பிரசாரம்: பாஜக-வின் எதேச்சதிகார மதவாத பாசிசத்தை எதிர்ப்பது, பழனிசாமி பாஜக-விடம் சரணடைந்ததை விமர்சிப்பது, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப் பேசுவது, சமூக நீதி கொள்கைகளை விளக்குவது என தி.மு.க கூட்டணியின் பிரசார சொல்லாடல் மிக வலுவாக அமைந்துள்ளது. முதல்வர் ஒருபுறம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒருபுறம், மகளிர் அணித் தலைவி கனிமொழி கருணாநிதி ஒருபுறம் என்று தொடர்ந்த சுற்றுப்பயணத்தில் பிரசாரத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துள்ளார்கள். உதயநிதியின் உரையாடல் தன்மை கொண்ட பிரசாரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. எல்லா பிரச்சினைகளையும் சிரித்த முகத்துடன், நகைச்சுவையாக எதிர்கொள்கிறார். அவருடைய இயல்பான தன்னம்பிக்கை மிகுந்த வசீகரத்தைத் தருகிறது. இவர்களைத் தவிர கூட்டணி கட்சித் தலைவர்களும் தொடர்ந்து மாநிலத்தை சுழன்றடித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனுடன் ஒப்பிடும்போது அ.இஅ.தி.மு.க-பாஜக அணியின் பிரசாரத்திற்கு ஒருமித்த பண்பு அமையவில்லை. தி.மு.க அரசின் மீது சில குறைகளைக் கடுமையாகக் கற்பிக்கின்றனர். ஆனால் அதற்கு மாற்றாக முன்வைக்க அவர்களிடம் வலுவான சொல்லாடல் எதுவும் இல்லை. அ.இ.அ.தி.மு.க-வால் பாஜக கொள்கையைப் பேச முடியாது. பாஜக-வால் அ.இ.அ.தி.மு.க-வை பாராட்ட முடியாது. அதனால் தி.மு.க ஆட்சியை வசைபாடுவதுடன் பிரசாரம் முடிந்துவிடுகிறது. கூடுதலாக மூன்றாவது முனையாக பலராலும் கருதப்படும் விஜயின் பிரசாரமும் ஒரு சில வரிகளில் தி.மு.க-வை மூர்க்கமாக எதிர்ப்பதுடன் முடிந்துவிடுகிறது. அப்படியானால் அவருக்குக் கிடைக்கும் வாக்குகள் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைத்தான் பிரிக்க முடியும் என்பது வெளிப்படையானது.
இதையெல்லாம் பண்பு ரீதியாக சிந்துத்துப் பார்த்தால் எந்த கருத்துக் கணிப்பும் எடுக்காமலேயே ஒன்று புரியும். ஸ்டாலின் தொடர்வார்! தமிழ்நாடு வெல்லும் என்பதுதான் அது. அந்த வெற்றியும் சாதாரண வெற்றியாக இருக்காது; இமாலய வெற்றியாகத்தான் இருக்கும் எனலாம். மே மாதம் நான்காம் தேதி திராவிட மாடல் 2.0 ஆட்சி துவங்கும். வெல்வோம் ஒன்றாக!
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
