கவிதா முரளிதரன்
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்கிற பல பத்தாண்டு கோரிக்கை இன்று இந்தியாவில் நிறைவேற்றப்பட இருக்கும் முறை மிக ஆழமான ஒரு செய்தியைச் சொல்கிறது. பெண்களுக்கு என்ன உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதைவிட அது எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதில்தான் அந்த செய்தி இருக்கிறது.
ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில தொலைக்காட்சியின் விவாதத்தில் பங்கேற்றிருந்தேன். விவாதத்துக்கு சற்று முன்பு முன்னாள் ஒன்றிய அமைச்சர் மீனாக்ஷி லெகியின் பேட்டி ஒளிபரப்பானது. தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும், பெண்கள் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று சொன்னார். குறிப்பாக பெண்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று இதுவரை பேசிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகங்களை பார்க்கலாம் என்றார். பல பா.ஜ.க தலைவர்களும் தொகுதி மறுவரையறைக்கான நியாயமான எதிர்ப்பை பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கான எதிர்ப்பாக முன்னிறுத்தி, அதன் பின்னாலிருப்பது பெண் வெறுப்பு என்கிற பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது இட ஒதுக்கீட்டை அது தொகுதி மறுசீரமைப்போடு பிணைந்திருக்கிறது என்பதற்காக எதிர்ப்பவர்களை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களாக கட்டமைக்கும் பா.ஜ.கவின் உத்தி அது
பெண் வெறுப்பு பற்றியெல்லாம் பா.ஜ.க பேசுவதைப் போன்ற முரண் வேறெதுவும் இல்லை.
பெண்கள் பற்றிய பா.ஜ.கவின் பார்வைக்கும், நிலைப்பாட்டுக்கும், கத்துவா, ஹத்ரஸ் தொடங்கி பில்கிஸ் பானு, மணிப்பூர் வரையில் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய அதன் அலட்சியம், அதை நியாயப்படுத்தவும், ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் முனையும் அதன் துணிபு பற்றி தனி கட்டுரை எழுதலாம்.
பல பத்தாண்டுகளாக, பெண்கள் இட ஒதுக்கீடு என்பது அரசியல் பிரிவினைகள் கடந்த ஒரு கோரிக்கையாக இருக்கிறது. சட்டமியற்றும் மன்றங்களில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்திய ஜனநாயகம் என்பது முற்று பெறாத ஒரு லட்சியம். இது பா.ஜ.கவோ அல்லது வேறு எந்த அரசோ பெண்களுக்கு காட்டும் சலுகை அல்ல, வரலாற்றை நேர் செய்யும் ஒரு முயற்சி.
ஆனால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் காலம் வரும்போது அது நேரடியாக வரவில்லை. ஒன்றிய பா.ஜ.க அரசின் இன்னொரு எதேச்சதிகார நடவடிக்கையை, அதிகாரக் குவிப்பை, தேர்தல் வெற்றிக்கான அப்பட்டமான ஒரு உத்தியை, அதை நோக்கிய அரசியல் திட்டத்தை – தொகுதி மறுசீரமைப்பை – முன்னிறுத்தி வந்திருக்கிறது. அதுவும் தற்செயலாக இல்லை.
தொகுதிகளை மறுசீரமைத்து, நாடாளுமன்றத்தை விரிவுப்படுத்தி, மாநிலங்களுக்கிடையில் நிலவும் அரசியல் அதிகாரத்தை சமமற்றதாக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்நிபந்தனையாக வைத்துக் கொண்டு வந்திருக்கிறது இட ஒதுக்கீடு.
இது இனிமேலும் பெண்கள் பற்றியது மட்டுமல்ல. இட ஒதுக்கீடு என்கிற பெயரில் ஒரு மாபெரும் அநீதியை அரங்கேற்ற முயலும் நடவடிக்கை இது.
மிகப் பெரிய முரண் இதுதான்: இந்த நொடி பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாக இருக்கிறது. ஆனால் அமலில் இல்லை.
பல கட்சிகளும் இயக்கங்களும் கேட்டுக் கொண்ட பிறகும் அதை கடந்த தேர்தலில் அமல்படுத்தாமல் தள்ளிப்போட்டது பா.ஜ.க அரசு. அதன் எதிர்காலத்தை தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தோடு பிணைத்து வைத்தது. இப்போது 2029 தேர்தலுக்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று பரவலாக பல செய்திகள் சொல்கின்றன.
பா.ஜ.க அரசு நினைத்திருந்தால் இந்த நிலை உருவாகாமல் தடுத்திருக்க முடியும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதனுடனும் பிணைக்காமல், எதற்கும் முன்நிபந்தனையாக மாற்றாமல் கொண்டு வந்திருக்க முடியும். அவ்வளவு ஏன்? உண்மையில் இட ஒதுக்கீட்டின் மீது அக்கறை இருப்பதாக இப்போது பேசும் அரசும் பா.ஜ.கவின் தலைவர்களும் 2023 வரையில் ஏன் காத்திருக்க வேண்டும்? ராமர் கோவில் உள்ளிட்ட அதன் அனைத்து செயல் திட்டங்களையும் ஆட்சிக்கு வந்தவுடன் தொடங்கிவிட்ட அரசு, 2014லேயே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வரும் முயற்சிகளை ஏன் எடுக்கவில்லை? எப்படியும் தவிர்க்க முடியாததாகிவிட்ட கோரிக்கையை அதன் லாபத்துக்கு எப்படி பயன்படுத்தலாம் என்கிற நோக்கம் அன்றி இதில் வேறு என்ன இருக்க முடியும்? இதில் உண்மையில் பெண் வெறுப்பு எங்கு வெளிப்படுகிறது?
பல பத்தாண்டுகளாக உள்ளாட்சிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. தள்ளி வைக்க வேண்டும் என்கிற ஒன்றிய அரசின் முடிவுக்கு பின்னாலிருக்கும் அதிகார அரசியலை இன்னும் நுணுக்கமாக புரிந்து கொள்வது அவசியம்.
உத்தேசமாக 850 மக்களவை உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 1272 உறுப்பினர்களுக்கான புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு அதில் இயற்றப்பட்ட முதல் மசோதாக்களில் ஒன்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா. செப்டம்பர் 2023ல் இது நடந்தது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா தொடங்கி தொடக்க விழா வரையில் இந்துமத குறியீடுகள் நிறைந்திருந்தன. கட்டடத்தின் சுவரோவியங்களில் ஒன்று: அகண்ட பாரதம். அதில் ஒரே முரணாக இட ஒதுக்கீடு மசோதா இருந்திருக்கக் கூடும்.
திடீரென்று பெண்கள் இட ஒதுக்கீடு என்கிற இந்த நடவடிக்கை, உண்மையில் பெண்களின் அரசியல் உரிமை சார்ந்த அக்கறையில்லை என்பதை பலரும் அறிவார்கள். கிட்டத்தட்ட நாடாளுமன்றக் கட்டடம் கட்டத் தொடங்கிய காலகட்டத்தில்கூட இட ஒதுக்கீட்டை தொகுதி மறுசீரமைப்புக்கான முன்நிபந்தனையாக பா.ஜ.க திட்டமிட்டிருக்கக் கூடும்.
தொகுதி மறுசீரமைப்பின் மூலம் எதிர்கால தேர்தல் வெற்றிகளை உறுதியாக்கிக் கொள்ளலாம். பெண்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் அது குறித்து வரும் விமர்சனங்களை, எதிர்ப்புகளை எதிர்கொள்ளலாம்.
மீனாக்ஷி லெகி சொன்னதுபோல பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்க்கத் துணிபவர்கள் “பிற்போக்கானவர்கள், பெண்கள் மீது அக்கறையில்லாதவர்கள்” என்பது எவ்வளவு வசதியான வாதம்!
தொகுதி மறுசீரமைப்பை ஒரு இயல்பான, அரசியல் சாசனம் சார்ந்த ஒரு நடவடிக்கையாக பா.ஜ.க அரசு பார்க்கவில்லை என்பது தெளிவு.
இனி வரும் பல பத்தாண்டுகளுக்கு இந்தியாவில் யார் கைகளில் அதிகாரம் குவிந்திருக்கும், எந்தந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும், தொகுதிகள் எப்படி மறுசீரமைக்கப்படும், தேர்தல் சலுகைகள் எப்படி பங்களிக்கப்படும் என்பதை இது முடிவு செய்யும்.
ஏற்கனவே மக்கள் கணக்கெடுப்பு ஏப்ரல் 2026ல் தொடங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த தொகுதி மறுசீரமைப்பு 2011 மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் அமல்படுத்தப்படக்கூடும் என்பது இன்னொரு முரண். அதாவது தற்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்கள் சுதந்திரம் பெற்றதிலிருந்து மிகப்பெரிய மக்கள் தொகை அதிகரிப்பைப் பார்த்திருக்கின்றன. இந்த எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தற்போது 195 தொகுதிகள் இருக்கின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டால், 800 தொகுதிகள் கொண்ட மக்களவையில் அந்த எண்ணிக்கை 328ஆக உயரும்.
அதே நேரம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய ஐந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு இப்போது 129 தொகுதிகள் இருக்கின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெறும் 168ஆக மட்டுமே உயரும். தற்போது இந்தி பேசும் மாநிலங்களுக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையில் இருக்கும் 66 தொகுதிகள் வேறுபாடு என்பது 160ஆக உயரும்.
இதன் பொருள் 543லிருந்து 850ஆக தொகுதிகள் உயரும்போது தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பா.ஜ.க சொல்வதுபோல கூடுதல் தொகுதிகள் கிடைத்தாலும் பிரதிநிதித்துவம் குறையும் என்பதுதான். ஆக 2011 கணக்கெடுப்பின் கீழ் மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பில் பா.ஜ.க பெறும் வெற்றிகள் மேலும் உறுதிபடுத்தப்பட்டிருக்கும்.
இந்த நிலையில்தான் பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இந்த விரிவாக்கம் தேவை என்றொரு அபத்தமான வாதம் முன்வைக்கப்படுகிறது. அடிப்படையான கேள்வி இதுதான்: ஏற்கனவே இருந்த 543 தொகுதிகளில், கிட்டத்தட்ட 86 சதவீதம் ஆண்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தில் ஏன் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லை? அப்படி உருவாக்கினால் பா.ஜ.கவின் அதிகார மையங்களாக வலம் வரும் பல ஆண்களின் இடங்கள் கைமாறியிருக்கும்.
ஆண்கள் ஏற்கனவே வகித்திருக்கும் இடங்களை அப்படியே வைத்திருப்பார்கள், பெண்களுக்காக புதிய இடங்களை வேண்டுமானால் உருவாக்குகிறோம் என்பது என்ன மாதிரியான சமத்துவம்? என்ன மாதிரியான நீதி?
அதில் சிக்கல் என்னவென்றால் ஆண்கள் ஆக்ரமித்து வைத்திருக்கும் அதிகாரப் பீடங்களை இன்னும் நிலைப்படுத்த, பெண்களோடு ஆண்களும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் கூடுதல் எண்ணிக்கையில் நுழைவார்கள்.
இதை மாற்றம் என்று பா.ஜ.க முன்னிறுத்துவதைப் போன்ற ஏமாற்று வேலை வேறு எதுவும் இல்லை.
பெண்களுக்கான குரல் ஒலிக்க வேண்டும் என்பதும் ஆண்கள் ஆக்ரமித்திருந்த இடங்களை பெண்களிடத்தில் தர வேண்டும் என்பதும்தான் பெண்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படை.
அது அதிகாரப்பீடங்களை அசைத்துப் பார்க்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதன் நோக்கம் அதுதான். பாதுகாப்பதும் கடத்துவதும் இல்லை.
ஆனால் அதன் இப்போதைய வடிவத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு என்பது அதிகாரப் பீடங்களை நிலைநிறுத்தும் ஒரு நடவடிக்கையாக இருக்கிறது என்பது எவ்வளவு முரண்.
இந்த வகையான மாற்றம், ஆணாதிக்கத்தை குறுக்கு விசாரணை செய்யவோ கூண்டில் நிறுத்தவோ துணியவில்லை. கைப்பற்றி நிற்கிறது. பா.ஜ.கவின் செயல்திட்டம் அதுதான்.
இரண்டு பெரும் மாநிலங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்கூட உரையாடல், விவாதங்கள், தொடர்புடையவர்களுடனான பரந்துபட்ட கலந்தாலோசனை என எதுவும் இல்லாமல் அதன் தேர்தல் வெற்றிகளுக்கு சாதகமான தொகுதி மறுவரையையும், முன்நிபந்தனையாக பெண்கள் இட ஒதுக்கீட்டையும் கொண்டு வர முயற்சிக்கும் பா.ஜ.க அரசின் எதேச்சதிகாரப் போக்கு அப்பட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காலம்காலமாக இட ஒதுக்கீட்டை சட்டமாகக் கோரி வந்த மகளிர் அமைப்புகளும் இயக்கங்களும் அதன் பின்னணியில் பா.ஜ.க செய்யும் அரசியல் அதிகார விளையாட்டுகளை கேள்விக்குட்படுத்தாமல், கண்டுகொள்ளாமல் ஆதரவளிப்பார்கள் என்று பா.ஜ.க நினைத்திருந்தால் அது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
எனில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பெண்களைப் பற்றியது மட்டுமல்ல, சமூகம் பற்றியது. சமூகத்தில் பிளவுகளை, சமத்துவமின்மையை, சமநிலையற்றத் தன்மையை உருவாக்கி அந்த வீழ்ச்சியின் மேடை மீது கையளிக்கப்படும் போலி அதிகாரத்தை சமூக அக்கறையும், பா.ஜ.கவின் பெண்கள் குறித்தான பார்வை பற்றிய புரிதலும் கொண்ட பெண்கள் நிராகரிப்பார்கள்.
பெண்கள் இட ஒதுக்கீடு என்பது பா.ஜ.கவின் அதிகார அரசியலுக்கு வளைந்து கொடுக்கும் சலுகை அல்ல.
அது வரலாற்றை நேர் செய்யும் நடவடிக்கை. பெண்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்டு வரும் உரிமை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதற்கான பாதை நியாயமாகவும் நீதியின்பாற்பட்டும் இருக்க வேண்டும் என்பதும்.
கட்டுரையாளர் குறிப்பு:
கவிதா முரளிதரன். ஊடகவியலாளர்
