Delimitation: அஞ்சும் பாஜக.. காரணம் இதுதான் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பிகள் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Delimitation Bill

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் நேற்று தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாக்களை மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

இதன் மீதான விவாதத்தின்போது, பேசிய திருமாவளவன் எம்பி,”கடந்த 2023 ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரித்தோம். 33 சதவீத இட ஒதுக்கீடு போதாது. 50 விழுக்காடு மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். சரிபாதி மக்கள் தொகையில் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு சரிபாதி இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சரி என்ற நிலைப்பாட்டை இன்றும் கொண்டிருக்கிறோம். அதையே மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ADVERTISEMENT

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். எனக்கும் எழுதியிருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உள்நோக்கம்

அந்தக் கடிதத்தைப் படித்தபோது, புரட்சியாளர் அம்பேத்கர் 1951 ம் ஆண்டு கொண்டு வந்த இந்துச் சட்ட மசோதா நினைவுக்கு வந்தது. அப்போது அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொடும்பாவிகளை எரித்தார்கள். ஆனால் இன்றைக்கு அது தலைகீழாக மாறியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இன்று மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முன் வந்திருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு நனவாகிறது என்பதில் பெருமைப்படுகிறேன்.

ADVERTISEMENT

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தற்போது இருக்கும் இந்த எண்ணிக்கையிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியும். அதற்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட பிறகுதான் இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால், உடனடியாக இதை நடைமுறைப்படுத்த விரும்புகிற அரசு, இந்த மறுவரையறை மசோதாவையும் சேர்த்துக் கொண்டு வந்திருப்பதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெரிய வருகிறது. மகளிருக்கு இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முதன்மையான நோக்கம் இல்லை. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அரசின் முதன்மையான நோக்கம் என்று தெரிய வருகிறது.ஏன் தன்னுடைய நிலைப்பாட்டை இந்த அரசு மாற்றியிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

ADVERTISEMENT

காரணம் என்ன?

கடந்த முறை பேசும்போது, “மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த முடியாது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் டிலிமிடேஷன் கமிஷன் அமைத்து மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம்” என்று சொன்ன அரசு, தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன?சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த இந்த அரசுக்கு விருப்பமில்லை. ஏனென்றால், அப்படி நடத்தினால் இந்திய அளவில் OBC மக்கள் தொகை எவ்வளவு என்பது தெரிய வரும். அதன் மூலம் இதுவரை மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாமல் போனதை அறிந்து, OBC சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்கான ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கக் கூடும். இதற்கு இந்த அரசு அஞ்சுகிறது என்று உணர முடிகிறது.

அது மட்டுமல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன் அடிப்படையில் OBC சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கும் உள் இட ஒதுக்கீடு கோரப்படும், வலியுறுத்தப்படும். அதற்கான போராட்டங்கள் வெடிக்கும் அதனால்தான் OBC பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் இந்த அரசுக்கு உடன்பாடு இல்லை – அதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே இந்த மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்ற ஐயம் எழுகிறது. இந்தப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Urban Naxals

மகளிர் இட ஒதுக்கீட்டில் அரசமைப்புச் சட்டத்தின்படி SC, ST பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனால் OBC பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அந்தக் கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இங்கே பேசிய பல உறுப்பினர்கள் கூட அந்த உள் இட ஒதுக்கீடு பற்றிப் பேசினார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எண்ணமில்லை. அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அப்படிச் செய்தால் OBC பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும். அதைத் தவிர்க்கவே இந்த நிலைப்பாட்டை இந்த அரசு மேற்கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ஆகவே, இதிலிருந்து தெரிய வரும் உண்மை என்னவென்றால், இவர்கள் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க விரும்பவில்லை. அதிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க விரும்பவில்லை.

அது மட்டுமல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னவர்களை “Urban Naxals” என்று பிரதமரே வசைபாடியிருக்கிறார். இந்த நிலையில் OBC மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் இந்தப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டவும், கண்டிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

3 காரணங்கள்

OBC மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மூன்று காரணங்களுக்காக இந்த டிலிமிடேஷன் மசோதாவை கைவிட வேண்டும் அல்லது கூட்டுக் குழு (JPC) அனுப்ப வேண்டும் என்று கோருகிறேன்.

தென் மாநிலங்கள் இதனால் வஞ்சிக்கப்படும். Proportionate அதாவது விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது. அப்படி உயர்த்தினால் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்.

OBC பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பதன் காரணமாகவும் இந்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மிக முக்கியமாக: டிலிமிடேஷன் மசோதா என்பது சாதாரண பெரும்பான்மை (Simple Majority) போதும் என்ற நிலைக்கு மாற்றி அமைத்திருப்பது ஏற்புடையதல்ல. அரசமைப்புச் சட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. எனவே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், “பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அடிப்படை உரிமையை, இன்று இருக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை என்ற சிக்கல் நிறைந்த இரு விஷயங்களோடு இதனை இணைக்கும் பாஜகவின் சதியை முழுமையாக இந்த அவையில் நாங்கள் எதிர்க்கிறோம். இதுவரை நீங்கள் தென்னிந்தியர்களின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் நிதியைப் பறித்தீர்கள். இப்போது எங்களின் உரிமையைப் பறிக்க நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள். நாட்டை ஆள்வதில் எங்களுக்கு இருக்கும் பங்கை நீர்த்துப் போகச் செய்ய நீங்கள் சதி செய்கிறீர்கள். இது ‘நாரி சக்தி’ மசோதா அல்ல. பாஜகவின் ‘நரித்தன’ மசோதா என்பதை இந்த அவையில் நான் குறிப்பிட்டுக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இரண்டு பெரிய மாநிலங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு அவசரமாக இந்த அவையைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? மக்களவையைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்கள் தேர்தல் களத்தை விட்டு இங்கு வந்து நிற்கிறோம். உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஏனென்றால், பாஜகவையோ அல்லது அதன் கூட்டணியான அதிமுகவையோ ஒரு எம்பி கூட தமிழ்நாட்டு மக்கள் தேர்வு செய்யவில்லை. எனவே நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, நாங்கள் இங்கு வந்து நிற்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு தேர்தல் வெற்றி தோல்வியை விட, தமிழ்நாட்டின் வெற்றிதான் முக்கியம் என்பதுதான் காரணம்.

எல்.முருகன் எங்கே?

இங்கு பிரதமர் மிக நீண்ட நாற்பது நிமிடங்கள் உரையாற்றினார். “எதிர்க்கட்சிகளே, எனது உரையை கேளுங்கள், கேளுங்கள்” என்று சொன்னார். அது சரி. நாங்கள் நாற்பது பேரும் இங்கு இருக்கிறோம். ஆனால் நாடாளுமன்ற விவகாரத் துறையின் இணை அமைச்சர் எங்கே இருக்கிறார்? பிரதமரின் உரையை கேட்காமல் எல். முருகன் அவர்கள் எங்கே இருக்கிறார்? அவினாசியில் ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். மேட்டுப்பாளையத்தில் எடப்பாடியோடு சேர்ந்து பொதுக்கூட்டத்தில் இருக்கிறார். நண்பர்களே! உங்களுக்குத் தேவை தமிழக மக்களின் ஓட்டு. எங்களுக்குத் தேவை தமிழ்நாட்டு மக்களின் தன்மானம் மிகுந்த வெற்றி. தன்மானம் மிகுந்த வெற்றி.

அந்தத் தொகுதி மறுவரையறை பிரச்சினை இன்றைக்கோ நேற்றைக்கோ அல்ல. ஏற்கனவே 1952, 1962, 1972 ஆகிய காலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தது. ஆனால், தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை கணக்கெடுப்பை 1971-ல் நிறுத்தி வைத்து, ஐம்பது ஆண்டுகளாக அதே அடிப்படையில் நடத்தி வருகிறீர்கள். ஏனென்றால் இந்தப் பிரச்சினை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பன்மைப்பட்ட, அசமத்துவம் கொண்ட, பல கலாச்சாரம் கொண்ட ஒரு தேசத்தில் மிக நுட்பமாகக் கையாள வேண்டிய பிரச்சினை இது.ஐம்பது ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும் ஒரு பிரச்சினையை, ஐம்பது மணி நேரத்துக்கு முன்பு மசோதாவைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக விவாதிக்கிறீர்கள். உங்களது நோக்கம் தேசத்தின் ஒற்றுமை அல்ல. தேசத்தின் ஒற்றுமையின்மையும் வெறுப்பும்தான் உங்களின் அடிப்படை நோக்கம்.

நண்பர்களே! இன்று இருக்கும் 543 எம்பிக்கள் எண்ணிக்கை 888 ஆக உயர்ந்தால், தமிழ்நாட்டுக்கு சராசரியாக 50 எம்பிக்கள் வர வேண்டும். ஆனால் மறுவரையறை கமிஷன் இந்த மசோதா எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளப் போகிறது என்பதைப் பற்றி பேசவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு துண்டுச் சீட்டை வைத்து நிறைய கணக்கு சொன்னார். அதை டைப் அடிக்க உங்களுக்கு நேரம் இல்லையா? மசோதாவில் அதைச் சொல்ல முடியவில்லையா? எந்த Census அடிப்படையில் இந்த மறுவரையறை கமிஷன் செயல்படப் போகிறது என்பதை ஏன் பேச மறுக்கிறீர்கள்?

2011 Census என்றால் தமிழ்நாட்டுக்கு 60 வராது, 51 தான் வரும். 2026 என்றால் 60 வராது, 47 தான் வரும்.நண்பர்களே! தெரிந்து கொள்ளுங்கள். இப்போது இருக்கும் இந்த அவையில் தமிழ்நாட்டின் பங்கு 7.18 சதவீதம். ஆனால் இனி வரப்போவது 5.7 சதவீதம் மட்டும்தான். நீங்கள் எங்கள் எண்ணிக்கையைக் குறைக்க என்னவெல்லாம் சதி செய்கிறீர்கள். அமித் ஷா நிறைய புள்ளிவிவரங்களைச் சொன்னார். நாங்கள் கேட்பது ஒரே ஒரு கேள்விதான். 1971-ம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் ஒரே மக்கள் தொகை கொண்ட மாநிலங்களாக இருந்தன. தமிழ்நாடு 4.1 கோடி, பீகார் 4.2 கோடி. எனவே தமிழ்நாட்டுக்கு 39 எம்பிக்கள், பீகாருக்கு 40 எம்பிக்கள்.

இன்று என்ன நிலைமை?

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.6 கோடி. பீகாரின் மக்கள் தொகை 12.3 கோடி. ஏறக்குறைய இரு மடங்கு. நீங்கள் எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து எண்ணிக்கையைத் தீர்மானிக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.இன்று மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியிருப்பதால் வந்திருக்கும் வெற்றிக்கு, எங்களுக்கு நீங்கள் என்ன பரிசைத் தருகிறீர்கள்? உலகம் முழுக்க மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது அரசாங்கத்தின் உத்தரவால் நடப்பதில்லை. மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது ஒரு சமூகத்தின் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றோடு இணைந்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெண் கல்வி உயர்ந்ததால்தான் மக்கள் தொகை கட்டுப்பாடு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. Total Fertility Rate (TFR) தமிழ்நாட்டில் 2.10% என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் சராசரியை விட இது குறைவு. அதனால்தான் இந்தியாவில் 7 சதவீதம் மட்டுமே இருக்கும் தமிழ்நாட்டு மக்கள், இந்தியப் பெண் தொழில் முனைவோர்களில் 44 சதவீதம் இருக்கிறார்கள்.

இந்தச் சாதனைக்குப் பின்னால் இருப்பது கடந்த 1971 முதல் 2011 வரை தமிழ்நாட்டு மக்கள் தொகை 75 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் ராஜஸ்தான் 166 சதவீதம், பீகார் 146 சதவீதம், உத்தரப்பிரதேசம் 138 சதவீதம் அதிகரித்துள்ளன. மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது எங்கள் வெற்றி. எங்கள் வெற்றியின் மீது நீங்கள் காட்டும் வெறுப்புதான் இந்த மசோதா. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியதால் நீங்கள் காட்டும் பாரபட்சம்தான் இந்த மசோதா.

இங்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் “நான் வஞ்சனை செய்ய மாட்டேன்” என்று மீண்டும் மீண்டும் சொன்னார். தமிழில் சொல்லுங்கள். “நான் வஞ்சனை செய்ய மாட்டேன்” என்றார். நாங்கள் வெளிப்படையாகக் கேட்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாக் காலத்திலும் நடந்து வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு 1960-70-ல் போர் நடந்தபோதும் நடந்தது. ஆனால் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தவில்லை? மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை எழுப்பி 888 இருக்கைகளை ஏன் அமைத்தீர்கள்? இப்போது மசோதாவை வைக்கிறீர்கள். “நாங்கள் மக்களவையின் எண்ணிக்கையை 888 ஆக உயர்த்தப் போகிறோம்” என்று திரைமறைவில் எல்லா வேலையும் செய்துவிட்டு, “எங்களை நம்புங்கள்” என்று சொன்னால், பகுத்தறிவு உள்ள நாங்கள் ஒருபோதும் உங்களை நம்ப மாட்டோம். உங்களது திரைமறைவு அஜெண்டாவுக்கு நாங்கள் முடிவு கட்டுவோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கி, மறு மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கிய காலத்தில், தொகுதி மறுவரையறையை அரசின் சுதந்திரத்திலிருந்து அகற்றி, எளிய சட்டத் திருத்தத்தின் மூலம் இங்கே நீங்கள் தாக்கல் செய்கிறீர்கள்.நண்பர்களே! நான் இரண்டு ஆவணங்களை இந்த அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

முதலாவது: கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அவர்கள் வழங்கிய மிக முக்கியமான தீர்ப்பு. 1962-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு 41 எம்பிக்கள் இருந்தன. ஆனால் 1967-ல் 39 ஆகக் குறைந்தன. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடந்த 15 தேர்தல்களில் 30 எம்பிக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். எனவே 1962-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர். அதை இந்த அவையில் சமர்ப்பிக்கிறேன்.

இரண்டாவது: கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நியமித்த மத்திய-மாநில உறவுகள் பற்றிய உயர்மட்டக் குழுவின் அறிக்கை. ஒரு மாதத்துக்கு முன்பு வந்த இந்த அறிக்கை மிக முக்கியமாகச் சொல்லும் உண்மை என்னவென்றால்:

கடந்த தொகுதி மறுவரையறை விஷயத்தில் இந்திய அரசு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. 2226-ல் தான் மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவியல் பூர்வமான ஆய்வின் அடிப்படையில் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால், ஐ.நா. கணக்கெடுப்பின்படி 2066-ல் இந்தியாவின் மக்கள் தொகை உச்சத்தில் அடையும்.

இறுதியாக, பெண்களைப் பணயம் வைத்து அரசியல் செய்வது வலதுசாரிகளுக்கு எப்போதும் இருக்கும் பழக்கம். இப்போதும் பெண் இட ஒதுக்கீட்டு மசோதாவின் அடிப்படையில்தான் இதை நீங்கள் கொண்டு வருகிறீர்கள். நிச்சயமாக, திரௌபதியைப் பணயம் வைத்து கபட நாடகம் ஆடியதைப் போல, நீங்கள் எங்கள் பெண்களை கபட நாடகம் ஆட நினைக்கிறீர்கள்.” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share