நாடாளுமன்ற மக்களவையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்துள்ள 3 முக்கிய மசோதாக்கள் மீது இன்று ஏப்ரல் 17-ந் தேதி மாலை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, புதுவை, அஸ்ஸாம் மாநிலங்களில் வரும் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப்பின் 131-வது திருத்த மசோதா
- மக்களவை, சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்யும் மசோதா 2026 (Delimitation)
- யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகியவை மத்திய அரசு தாக்கல் செய்த 3 மசோதாக்கள்.
இந்த மசோதாக்களுக்கும் அறிமுக நிலையிலேயே காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
கடந்த செப்டம்பர் 2023-ல், அரசியலமைப்பு 106-வது திருத்தச் சட்டமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் இந்தச் சட்டம், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது (ஏப்ரல் 16-18, 2026) மத்திய அரசு கூட்டியுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் நோக்கில் புதிய திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திருத்த மசோதா மக்களவையின் இடங்களின் எண்ணிக்கையை 543-ல் இருந்து சுமார் 815 முதல் 850 வரை அதிகரிக்க வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த அதிகரித்த இடங்களில் 33% அதாவது சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது ஒருபுறம் பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் என்றாலும், மறுபுறம் தொகுதி மறுவரையறை குறித்த விவாதம் தென் மாநிலங்களை ஆட்டம் காண வைத்துள்ளது.
தொகுதி மறுவரையறை மக்கள் தொகையின் அடிப்படையில் நடத்தப்பட்டால், கடந்த பல ஆண்டுகளாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்கள் குறையக்கூடும் அல்லது வடமாநிலங்களின் இடங்கள் பெருமளவு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
அதனால் “இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தாமலும், தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்காமலும் தற்போதைய இடங்களிலேயே 33% இடஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இந்த 3 மசோதாக்கள் மீது இன்று மாலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாஜக தனது எம்பிக்களுக்கு ‘கொறடா’ உத்தரவையும் பிறப்பித்துள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க உள்ளன.
