போதைப் பொருள் விற்பனை குறித்த தகவல் அளித்த மாணவன் கொலை – உதயநிதி பேச்சு

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் ஏன் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில்இன்று (ஆகஸ்ட் 12) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவர், நேற்று சக மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை ஏதோ ஒரு தனிநபர் சம்பவமாகப் பார்க்கக் கூடாது; இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

ADVERTISEMENT

வழக்கு விசாரணை ஒன்றிற்காக மாணவர் அமுதனை, கோவை செட்டிப்பாளையம் காவல்துறையினர் நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் சிலரைப் பற்றி அமுதனிடம் காவல்துறையினர் விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.

ஆனால், அவ்வாறு பெறப்பட்ட ரகசியத் தகவல்களைப் பாதுகாத்துக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களிடமே அதுகுறித்த விவரத்தைக் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர் அந்த கோபத்தில்தான் அவர்கள் மாணவனை அடித்து கொலை செய்து விட்டதாக அமுதனின் பெற்றோர் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளனர்.

ADVERTISEMENT

காவல்துறையினர் ஏன் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு இந்த அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த மூன்று நாட்களில் மட்டும் இதுபோன்று அடுத்தடுத்து நான்கு சம்பவங்கள் நடந்துள்ளன. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் காவல்துறையின் இத்தகைய அலட்சியப்போக்கு இனியும் தொடரக் கூடாது. மாணவர் அமுதனின் படுகொலைக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் ” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தச் சட்ட ஒழுங்குப் பிரச்சனை உருவாகியுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே இருந்த கோஷ்டி மோதலின் காரணமாகவே இது நடந்துள்ளது” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share