கோவை கல்லூரி மாணவர் கொலை.. செல்போன் தகராறா அல்லது போதைப்பொருள் விவகாரமா? – நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் செல்போன் காணாமல் போன விவகாரத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், கள்ளகுறிச்சியை சேர்ந்த அமுதன் என்ற மாணவர் சக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் தங்கள் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 கல்லூரி மாணவர்களை பிடித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அமுதன்(20). இவர் கோவை- பொள்ளாச்சி மலுமிச்சம்பட்டி அடுத்த பிரீமியர் மில்ஸ் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (10.8.2026) அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமன் என்பவரும் காலை 8.45 மணியளவில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றனர். அப்போது திடீரென ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அமுதனை அழைத்து சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தின போது உடன் இருந்த ஸ்ரீமனை அந்த கும்பல் மிரட்டியதால் ஸ்ரீமன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

ADVERTISEMENT

பின்னர் அமுதன் தனது அறைக்கு சென்றுள்ளார். திடீரென பிற்பகல் 3 மணியளவில் அமுதனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அறையில் இருந்த சக மாணவர்கள் அமுதனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற செட்டிப்பாளையம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அமுதனின் நண்பன் ஸ்ரீமன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 மாணவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

காவல்துறையினரின் விசாரணையில் அமுதன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அமுதன் மற்றும் சிலர் நேற்று முன்தினம் அதிகாலை ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் இளவரசன் என்ற மாணவரின் அறைக்கு சென்று அங்குள்ள மாணவர்கள் மிரட்டி தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து இளவரசன் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அமுதன் கடந்த மாதம் கல்லூரி விடுதி சமையலரை தாக்கியதாகவும் அதனால் கல்லூரி விடுதியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அமுதனின் பெற்றோர் கூறுகையில் அமுதன் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்தார். இரண்டாம் ஆண்டு விடுதி உணவு சரியில்லாததால் வெளியில் அறை எடுத்து தங்கி படித்தார். மீண்டும் மூன்றாம் ஆண்டு கல்லூரி விடுதியில் மீண்டும் சேர்ந்து படிப்பை தொடர்ந்தார்.

சில தினங்களுக்கு முன் கல்லூரி விடுதிக்கு பின்புறம் அமுதன் மற்றும் ஒரு நண்பர் கீழே விழுந்த ஹெட்போனை எடுக்கச் சென்ற பொழுது அங்கு விடுதிக்கு சமையல் செய்யும் சில வடமாநில தொழிலாளர்கள் போதை பொருளை பயன்படுத்தி கொண்டிருந்ததாகவும் அதனை தட்டி கேட்டதற்கு வட மாநில தொழிலாளர்கள் அமுதன் மற்றும் அவரது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டனர். ஆனால் அமுதன் அவர்களை தாக்கவில்லை என்றனர். இது கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வர கல்லூரி நிர்வாகம் அமுதன் மற்றும் அவரது நண்பர் இருவரையும் விடுதியில் இருந்து வெளியில் செல்லுமாறு கூறியது. இதனால் சில தினங்கள் அமுதன் மற்றொரு நண்பரது அறையில் தங்கியதாக கூறினார். பின்னர் அந்த பிரச்சனை முடிந்து ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் கல்லூரி விடுதிக்கே அமுதன் வந்த நிலையில் அமுதன் மற்றும் மற்றொரு நண்பரை வழிமறித்த கும்பல் அமுதனை சரமாரியாக தாக்கிக் கொன்று விட்டதாக தெரிவித்தனர்.

அமுதனை அந்த கும்பல் தாக்கியதற்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என்றும் ஏனென்றால் இதற்கு முன்பே விடுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையின் பொழுது போதைப் பொருட்களை கல்லூரி விடுதியில் யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று அமுதனிடம் கல்லூரி நிர்வாகம் விசாரித்துள்ளனர். இதனால் அந்த கும்பல் அமுதனை தாக்கிக் கொன்று விட்டதாக குற்றம் சாட்டினர்.

மேலும் கல்லூரியை சுற்றி போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதால் தங்கள் மகனுக்கு நேர்ந்த இந்த நிலை வேறு எந்த மகனுக்கும் ஏற்படக் கூடாது. தனது மகனுக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share