பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனிநாடாகிவிட்டதாக பலுசிஸ்தான் மாகாணம் பிரகடனம் செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் நாடு 2-வது முறையாக பிளவுபட்டுள்ளது.

நமது நாட்டின் விடுதலையின் போது 1947-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது. அப்போது 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ந் தேதி பலுசிஸ்தான் பகுதி தம்மை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது. ஆனால் 1948-ம் ஆண்டு பலுசிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. அன்று முதல் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் 1971-ல் கிழக்கு பாகிஸ்தான் பகுதி, விடுதலைப் போராட்டம் நடத்தி இந்தியாவின் உதவியால் சுதந்திர நாடானது. அதுதான் இன்றைய வங்கதேசம் (பங்களாதேஷ்).
வங்கதேசம் பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தற்போது மீண்டும் தனிநாடு பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.

பலுசிஸ்தான் குடியரசு ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிட்ட பிரகடனம்: பலுசிஸ்தானின் 6 கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ந் தேதி தங்கள் தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.
இன்று நாம் வெறும் சுதந்திர தினத்தை மட்டும் கொண்டாடும் நிலைமையை தாண்டிவிட்டோம். பலுசிஸ்தானின் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், தூதரக ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரும் நிலையை அடைந்துள்ளோம்.
பலுசிஸ்தானில் வசிக்கும் பலூச், பஸ்தூன், இந்து, சீக்கியர், கிறிஸ்தவர் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு இந்த புனிதமான சுதந்திரத் திருநாளில் மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிவரும் காலங்களில் பலுசிஸ்தான் நாட்டை பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக அழைப்பதையோ, எழுதுவதையோ அல்லது குறிப்பிடுவதையோ தவிர்த்து, அதை ஒரு ”சுதந்திர நாடாக” குறிப்பிட என்று பலுசிஸ்தான் குடியரசு சர்வதேசத்தை கோருகிறது.
வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் ராஜதந்திரம் சார்ந்த அனைத்துப் பொறுப்புகளையும் தாங்களே ஏற்கும் உரிமையை இப்போது பலுசிஸ்தான் பெற்றுள்ளது. மிக விரைவில் பாஸ்போர்ட், நாணயம், பலுசிஸ்தானின் ஊடக நிறுவனங்கள், தூதரகங்கள் ஆகியவை முறைப்படி தொடங்கப்படும், அதற்கான உரிய தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
பலுசிஸ்தான் தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்து வருவதுடன், வரலாற்றில் முதல்முறையாக நாம் அனைவரும் இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் படைகளைத் தோற்கடிக்க முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவின் ஊடகங்கள், சிந்தனைக் குழுக்கள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், குடிமைச் சமூகம், வணிகச் சமூகம், மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலுசிஸ்தானின் குரலை உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்று நமது மக்களின் குரலாக மாறிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பலுசிஸ்தான் குடியரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பலூசிஸ்தான் மக்களுக்கு அனைவரும் தார்மீக ஆதரவை தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும், அப்போதுதான் புற்றுநோய் போன்ற பாகிஸ்தானை நமது பலுசிஸ்தான் மண்ணிலிருந்து அகற்ற முடியும்.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்த நமது மக்களை நாங்கள் பெருமையுடன் பார்க்கிறோம். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலுச் குடிமக்கள் இன்னும் பாகிஸ்தானின் சித்திரவதைக்கூடங்களில் ஈவிரக்கமற்ற முறையில் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் அவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். நமது பெரும் தியாகிகள், ஆயிரக்கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் கைதிகளின் அழியாத தியாகங்களால்தான் இன்றைய சுதந்திரத்தின் வெற்றி சாத்தியமாகியுள்ளது.
சுதந்திரம் வெள்ளித் தட்டில் வைத்து வழங்கப்படுவதில்லை என்பதை நாம் அறிவோம். நமது ஆயிரம் ஆண்டு வரலாற்று தியாகங்கள் நிரம்பியது. முகலாயர்கள், மாவீரன் அலெக்சாந்தர் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு படையெடுப்பாளர்களையும் எதிர்த்து நமது முன்னோர்கள் பலூசிஸ்தானத்தைப் பாதுகாத்து வெற்றி பெற்றனர்.

மாவீரன் அலெக்சாண்டரின் தாயார், அவருக்கு எழுதிய கடிதத்தில் பலுசிஸ்தானைக் கைப்பற்றுவதில் ஏன் தாமதிக்கிறீர்கள் என்று கேட்டபோது, ”பலுசிஸ்தானில் தாங்கள் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பதாக” அவர் பதிலளித்தார்.
பலுசிஸ்தான் மக்கள் எப்போதும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களைத் தடுத்து மண்ணை விட்டு வெளியேறச் செய்துள்ளனர். பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான டாங்கிகள், நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ஒரு பெரிய இராணுவத்தைக் கொண்டிருக்கலாம்,
ஆனால் நமது பலுசிஸ்தான் மக்களின் போர் வலிமை பாகிஸ்தானை விட பத்து மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகவும் வெற்றிகரமானதாகவும் உள்ளது.
பலுசிஸ்தான் ராணுவம் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு வலிமையான வம்சமாகும், உலகின் தொழில்முறை இராணுவங்களை எதிர்கொள்ள எப்போதும் நாம் தயார்.
பலுசிஸ்தான் குடியரசு 50,000 வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தைத் உருவாக்குகிறது.
பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல, மாறாக பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் உலக வரைபடத்தில் உள்ள எதிர்காலத்தின் ஒரு வலிமையான நாடாகும். இது அனைத்து வகையான மத தீவிரவாதத்திலிருந்தும் விடுபட்ட ஒரு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாகும்.
பிரிட்டிசார், இந்திய துணை கண்டத்தை விட்டு வெளியேறியபோது, 1947 ஆகஸ்ட் 11 அன்று பலுசிஸ்தானும் தனது சுதந்திரத்தை அறிவித்தது. அன்றிலிருந்து இன்று வரை நாம் உலக வரைபடத்தில் ஒரு சுதந்திர நாடாகவே வாழ்ந்து வருகிறோம்.
இப்போது நமது போராட்டம் சுதந்திரப் பிரகடனத்தை உலகளாவிய அங்கீகாரம் பெறும் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, ஆசியான், ஆப்பிரிக்க ஒன்றியம், ஓ.ஐ.சி (OIC) மற்றும் ஐரோப்பாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் அர்த்தமுள்ள மவுனத்தைக் கலைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
பாகிஸ்தானைப் போல் பிச்சை எடுப்பதற்குப் பதிலாக, சுகாதாரம், கல்வி மற்றும் மனித நலனுக்காக உலகிற்கு கணிசமான நிதியையும் உதவியையும் வழங்கக்கூடிய வளமான பகுதிகளில் பலுசிஸ்தானும் ஒன்றாகும்.
ஐக்கிய நாடுகளும் பலூசிஸ்தானின் வரலாற்றை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன் சுதந்திரம் மற்றும் வளங்கள் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு, பலுசிஸ்தான் இப்பகுதியில் உள்ள ஏழை நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்க விரும்புகிறது.
இப்பகுதியில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாட்டு மக்களுக்காக சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க பலுசிஸ்தான் குடியரசு தயாராக உள்ளது.
வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இரண்டு டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்ய பலுசிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
ஒரு மதிப்பீட்டின்படி, பலுசிஸ்தானில் 50 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பல்வேறு வகையான அரிய பூமி கனிமங்கள் மற்றும் எரிசக்தி வளங்கள் உள்ளன. நட்புறவு நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் அசாதாரண தேச கட்டுமானத் திட்டங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பலுசிஸ்தான் ஒரு சொர்க்கமாகும். வளர்ச்சி விரைவுபடுத்தப்பட எங்களுக்கு திறமையான நபர்கள் தேவை.
பலுசிஸ்தானின் சுதந்திரக் கொண்டாட்டங்களைத் தடுக்க, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு ராணுவம் மொபைல் மற்றும் இணைய சேவைகளைத் துண்டித்துள்ளது. மேலும் பலுசிஸ்தானின் கலாத், குவெட்டா, குஸ்தார் மற்றும் சில பகுதிகளில் ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களைச் சுற்றி பெரிய அகழிகளைத் தோண்டியுள்ளனர்; இது பாகிஸ்தான் ராணுவத்தின் பயத்திற்கும் தோல்விக்கும் தெளிவான சான்றாகும்.
பலுசிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் பாகிஸ்தானின் விமானப்படை இன்னும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது, வானில் ட்ரோன்கள் பறக்கின்றன, மற்றும் ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஆனால் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் நிழலில் கூட, பலுசிஸ்தான் மக்கள் அந்தந்தப் பகுதிகளில் சுதந்திரத்தைக் கொண்டாடி, பாகிஸ்தானின் அனைத்து தடைகளையும் முறியடித்துள்ளனர்.
இணையத் தடை காரணமாக, படங்கள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் வர தாமதமாகிறது, ஆனால் மிக விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தையும் தோல்வியையும் முழு உலகிற்கும் வெளிப்படுத்துவோம். இவ்வாறு பலுசிஸ்தான் குடியரசு அறிவித்துள்ளது.

பலுசிஸ்தான் எங்கே உள்ளது?
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பலுசிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுடன் தன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாண எல்லையில் அமைந்துள்ளது.
பலுசிஸ்தானின் தென் பகுதியில் அரபிக் கடல் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஓமன், ஹோர்முஸ் ஜலசந்தி அமைந்துள்ள கடற்கரைப் பகுதிகள் உள்ளன.
எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் கொண்ட பூமி பலுசிஸ்தான்.
திராவிட மொழி பிராகுய்
பலுசிஸ்தானில் பலூச், பஷ்டூ, பிராகுய், உருது, பாரசீக மொழிகள் பேசப்படுகின்றன.
இதில் பிராகுய் மொழி ‘திராவிட’ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்கின்றனர் மொழியியல் வல்லுநர்கள். பண்டைய சிந்துசமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாகவும் பிராகுய் மொழி பேசும் பலுசிஸ்தானின் பிராகுய் மக்களை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
