அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு: ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு!

Published On:

| By Mathi

Teachers, Govt Employees Upset Over TVK Govt on TAPS

TAPS ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற நிதி அமைச்சர் மரிய வில்சனின் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், CPS ஒழிப்பு இயக்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்

ADVERTISEMENT

இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.15,997.05 கோடியிலிருந்து ரூ.4,997.05 கோடியாகக் குறைத்து, ரூ.11,000 கோடியை அரசு நீக்கம் செய்துள்ளது.

மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.3,000 கோடியும், பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீட்டில் ரூ.4,007 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ் தலைமையிலான குழுவின் பரிந்துரையைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு கடன் வாங்க அனுமதித்தால் மட்டுமே TAPS திட்டத்தை அமல்படுத்த முடியும் எனக் கூறி அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயல்கிறது.

மத்திய அரசைச் சாடி ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் வஞ்சிப்பது ஏற்புடையதல்ல. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசாங்கத்தையும், வலுவான போராட்டங்களின் மூலம் மாற்றக்கூடிய வல்லமை ஊழியர்களுக்கு உண்டு என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

எனவே, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, நிதியமைச்சரின் ஓய்வூதியம் தொடர்பான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பூர்வாங்கப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

இடைக்கால நிவாரணமாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியைத் தாமதமின்றி உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முதுகலை ஆசிரியர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளைச் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

CPS ஒழிப்பு இயக்கம்

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜராஜ ராஜேஸ்வரன், பிரெடெரிக் எங்கெல்ஸ், செல்வகுமார் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: TAPS திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக செயல்படும் தவெக அரசை கண்டிக்கிறோம்.

மத்திய அரசு கடன் வழங்கினால் TAPS திட்டத்தை அமுல்படுத்தலாம் என்று ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் தலைவர் ககன் சிங் பேடி பரிந்துரை செய்துள்ளார் என்றும், மத்திய அரசு கடன் வழங்க ஒப்புக்கொண்டால் TAPS திட்டம் அமுல்படுத்தபடும் என்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அலுவலர் குழுவின் முழுமையான பரிந்துரை என்ன? திமுக அரசு எந்த அடிப்படையில் TAPS திட்டத்தை அறிவித்தது? என்பதை தெளிவுபடுத்திட அலுவலர் குழுவின் பரிந்துரைகளையும், அதன் அறிக்கையையும் தமிழக அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தவெக தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்துள்ளது.

தவெக தனது தேர்தல் வாக்குறுதிப்படி திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட TAPS திட்டத்தை ஒழிப்பதற்கு பதிலாக மத்திய அரசு கடன் உதவி வழங்கினால் TAPS திட்டத்தை அமல்படுத்துவோம் என்று நிதியமைச்சர் கூறுவது, தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை மீறும் செயலாகும்.

நிதி அமைச்சர் தெரிவித்த கருத்து அரசு ஊழியர் ஆசிரியர் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது.

தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மத்திய அரசின் கடன் கிடைத்தால் TAPS திட்டத்தை அமல்படுத்தவோம் என்று தெரிவித்ததற்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என்று வலியுறுத்துவதற்கு மாறாக, திமுக அரசு அறிவித்த TAPS திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை திமுக நிர்பந்தம் செய்வது வேதனைக்குரியது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக TAPS திட்டத்தை அறிவித்தது. அதற்குரிய பலனை திமுக தற்போது அனுபவித்து வருகிறது.

அதே நேரத்தில் தவெக தனது தேர்தல் அறிக்கையில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் அறிவித்தாார்கள்.

ஆனால், தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் 200 யூனிட் மின்சாரம் மற்றும் பயிர் கடன் ரத்து வாக்குறுதிகள் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலை உருவாகியுள்ளது.

அதே போன்று அரசு ஊழியர் ஆசிரியர்களை ஏமாற்றலாம் என்று தவெக அரசு நினைத்தால் திமுகவுக்கு ஏற்பட்ட நிலைதான் தவெக-வுக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம்.

TAPS திட்டம் மெல்ல கொல்லும் நஞ்சு என்பதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே என்பதே CPS ஒழிப்பு இயக்கத்தின் நிலைபாடு.

ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டிஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போன்று தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share