பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு கொடுக்கப்போகிறதா? உயர் நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

நீட் தேர்வுக்கு எதிரான பேரணியை முடக்குவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக இருசக்கர வாகன பிரச்சார பயணத்தை மேற்கொள்ள, திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நான்கு நாட்கள் இந்த பேரணி மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்ட நிலையில், போலீசார் அனுமதிக்கவில்லை.

ஜூலை 30ஆம் தேதி பெரியார் திடலில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் வாகன பிரச்சார பயணத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று (ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது.

அப்போது போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.

காவல்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், ”இந்த அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல. போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளனர். பெரியார் திடல், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் சென்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

ஏற்கனவே அனுமதி கேட்ட தேதி முடிந்து விட்டதால் புதிதாக மனு கொடுக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலினை செய்யப்படும்” என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பேச்சுரிமை கருத்துரிமை போல போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை. அதற்கு தடை விதிக்க முடியாது

நீட் தேர்வு முடிவு வெளியாகி கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இப்போது ஊர்வலம் செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

இந்த வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு கொடுக்கப்போகிறதா? இல்லையே…பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களால் இவ்வாறு அனுமதி மறுத்தால் ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?

மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் செல்லும் வழியை மறித்து  கார் பந்தயம் நடத்திய போது ஏற்படாத போக்குவரத்து நெரிசல், ஊர்வலம் செல்லும் போது ஏற்பட்டு விடுமா?” என்று கேள்விகளை எழுப்பினார். 

இதுதொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share