அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகையா? அமைச்சர் அருண்ராஜ் சொன்ன பதில்!

Published On:

| By Mathi

Incentive for having a third child? Minister Arunraj's response

ஆந்திராவைப் போல தமிழ்நாட்டில் 3-வது குழந்தை பெற்றால் அரசு ஊக்கத் தொகை வழங்குமா? என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று ஆகஸ்ட் 9-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:

ADVERTISEMENT

‘மொத்த கருத்தரிப்பு விகிதம்’ (Total Fertility Rate) என்பது, ஒரு தம்பதியினருக்குச் சராசரியாக எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதைக் குறிக்கும் கணக்காகும். இந்த விகிதம் 2.1 ஆக இருந்தால் மட்டுமே தற்போதைய மக்கள் தொகை அதே அளவில் தொடர்ந்து பராமரிக்கப்படும்.

ஆனால், நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விகிதம் 1.4-க்கும் கீழே குறைந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன; விரைவில் வரவிருக்கும் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலமே சரியான புள்ளிவிவரம் தெரியவரும்.

ADVERTISEMENT

நம் தமிழ் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக முதுமை அடைந்து வருகிறது என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 16 சதவீதம் பேர் உள்ளனர். எனவே, தம்பதியினர் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்ற சிந்தனை வருங்காலத்தில் எழலாம்; அது நிச்சயமாக வரக்கூடும்.

ஆந்திரா போன்ற மாநிலங்களில் 3-வது குழந்தையைப் பெற்றுக்கொள்வோருக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ADVERTISEMENT

அதுபோன்று வருங்காலங்களில் நமது மாநிலத்திலும் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால், மனித வளமே மிகப் பெரிய சொத்தாகும். நம்மிடம் எத்தகைய வளங்கள் இருந்தாலும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி மேலும் பெருக்குவதற்கு மனித வளம் அவசியம்.

தற்போது குழந்தை பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவது பொது சுகாதாரத் துறையில் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. எனவே, நமது அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசி, இதை எவ்வாறு சரிசெய்யலாம் மற்றும் மேலும் மேம்படுத்தலாம் என்று ஆலோசிக்கும். மக்கள் தொகை தொடர்ந்து ஒரே சீராக இருக்க வேண்டுமென்றால், அதற்கான மாற்று விகிதம் (Replacement Level of Fertility) உறுதியாக இருக்க வேண்டும்; அதை தக்கவைக்க நாம் என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்போம்.

செய்தியாளர்: அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஊக்கத்தொகை அல்லது அனுமதி உண்டா?

அமைச்சர் அருண்ராஜ்: இது நீண்ட காலத் திட்டமிடலைச் சார்ந்ததாகும்; இதை உடனடித் தீர்வாக நம்மால் யோசிக்க முடியாது. தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது என்பது யதார்த்தமான உண்மையாகும். இந்தப் பிரச்சினையை எந்த அளவுக்கு எதிர்கொள்ள வேண்டும் என்பது கொள்கை அளவில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு சூழலாகும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share