ஓசை காளிதாசன்
யானைகள் புவிப் பரப்பில் வாழும் பெரிய விலங்கினம். உலகெங்கும் சுமார் 48,000 முதல் 52,000 வரையிலான ஆசிய யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 15,000 வளர்ப்பு யானைகளைத் தவிர்த்த காட்டு யானைகளின் எண்ணிக்கை இது. ஆசிய யானைகள் 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையில் தற்போது பாதியாகக் குறைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் சுமார் 27,000 முதல் 30,000 வரை யானைகள் வாழ்வதாக 2017 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 2025-ல் இந்திய வன உயிரின நிறுவனம் ( WII) வெளியிட்ட இந்தியாவின் முதல் மரபணு ( DNA) அடிப்படையிலான கணக்கெடுப்பின்படி 22,446 காட்டு யானைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

13 நாடுகளில்..
ஒரு காலத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்பட்ட யானைகள், தற்போது 13 நாடுகளில் உள்ள மிகச் சிறிய, துண்டாடப்பட்ட காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. இந்த 13 நாடுகளில் 59 காட்டுப் பகுதிகள் யானைகளின் வாழ்விடங்களாக ( Asian elephant ranges) வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 8,73,107 சதுர கிலோமீட்டர்.

புகழ்பெற்ற ஆசிய யானை ஆய்வாளரான முனைவர் பீட்டர் லேம்குரூபர் (Dr. Peter Leimgruber) மற்றும் அவரது குழுவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ஆய்வின்படி, அந்த வாழ்விடப் பகுதிகளில் உள்ள சாலைகள், அணைக்கட்டுகள், விளைநிலங்கள், அடிக்கடி காட்டுத்தீ பரவும் இடங்கள் மற்றும் பிற இடையூறுகளைத் தவிர்த்து கணக்கிட்டால், 4,47,408 ச.கி.மீ காடுகள் மட்டுமே யானைகள் வாழத் தகுதியானவையாக உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வரையறுக்கப்பட்ட வாழ்விடங்களில்கூட சுமார் 49% பகுதி மனிதச் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது துண்டாடப்பட்டுள்ளது.
யானைகளின் வாழ்விடம்
இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. வரையறுக்கப்பட்ட யானை வாழ்விடமான 1,51,309 ச.கி.மீ பரப்பில், 46,880 ச.கி.மீ (31%) மட்டுமே இடையூறுகள் இல்லாத யானைகளின் வாழ்விடமாக எஞ்சியுள்ளது. இது இந்தியாவின் காட்டு பரப்பில் 6.55 % , மொத்த நிலப்பரப்பில் 1.42% ஆகும். இருபது ஆண்டுகளைக் கடந்து தற்போதைய நிலைமை இன்னும் மோசமானதாகவே இருக்கும்.
யானைகள் உருவில் பெரியவை. பெரிதாக இருப்பதால் அதிக உணவு தேவைப்படுகிறது. அதிக உணவு தேவைப்படுவதாலும் கூட்டமாக இருப்பதாலும் பரந்த வாழ்விடம் அவசியமாகிறது.

ஒரு வாழ்விடத்தில் நீண்ட காலமாக யானைகள் வாழ்வதற்கு குறைந்தபட்சமாக எவ்வளவு பரப்பளவு கொண்ட காடு தேவைப்படுகிறது என்பதை அறிஞர்கள் வரையறுத்துள்ளனர்.
அதன்படி, யானைகளின் ஆண்–பெண் விகிதாசாரம் 1:5 என இருக்கும் ஒரு காட்டில், இனப்பெருக்கத்திற்குத் தகுதியுடைய யானைகள் 500 இருந்தால், 10 சதுர கிலோமீட்டரில் 5 யானைகள் வாழ முடியும். இந்த மதிப்பீட்டின்படி, அந்தக் காட்டில் உள்ள மொத்த யானைகளுக்கு சுமார் 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடு தேவைப்படுவதாகப் புகழ்பெற்ற யானை ஆய்வாளர் முனைவர் ராமன் சுகுமார் வரையறுத்துள்ளார். மழைக்காடுகள் எனில், அதே எண்ணிக்கையிலான யானைகளுக்கு 13,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடு தேவைப்படலாம்.

ஆசிய யானைகள் வாழும் 59 காட்டுப் பகுதிகளில், 10 இடங்களில் மட்டுமே 1,000 யானைகளுக்கு மேல் வாழ்வதாக முனைவர் பீட்டர் லேம்குரூபர் மதிப்பிட்டுள்ளார். அவை அனைத்தும் குறைந்தபட்சம் 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டவையாக உள்ளன.
யானை காடுகள்
இந்தியாவில் 15 காட்டுப் பகுதிகள் யானைகளின் வாழ்விடங்களாக வரையறுக்கப்பட்டிருந்தாலும்,
- அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களில் பரவியுள்ள 22,722 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மபுத்திரா–நாகா–மிஷ்மி வாழ்விடப் பகுதி,
- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள 5,860 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாகர்ஹோலே–பந்திப்பூர்–நீலகிரி – நிலாம்பூர் – கிழக்குத் தொடர்ச்சி மலை வாழ்விடப் பகுதி,
- தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சார்ந்த 3,558 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெல்லியாம்பதி– ஆனைமலை–பெரியாறு வாழ்விடப் பகுதி,
- மேகாலயா மாநிலத்தில் உள்ள 2,050 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காசி–ஜெயின்டியா மலை வாழ்விடப் பகுதி
ஆகிய நான்கு காட்டுப் பகுதிகள் மட்டுமே 1,000 யானைகளுக்கும் மேல் வாழும் வாழ்விடங்களாகும். எனவே 1,000 யானைகள் வாழ்வதற்குக் குறைந்தபட்சமாக 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான தொடர்ச்சியான காடு தேவைப்படுகிறது என்பதையே இந்த விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
வாழ்விடத்தின் தரம், யானைகளின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தி, தொடர்ச்சியான வாழ்விடம், காடுகள் துண்டாடப்படுதல் ஆகிய காரணிகளே யானைகளுக்கு எவ்வளவு பரப்பளவு வாழ்விடம் தேவை என்பதைத் தீர்மானிக்கின்றன.
இந்தியாவில் பிரம்மபுத்திரா–நாகா–மிஷ்மி மலைத்தொடர், நாகர்ஹோலே–பந்திப்பூர்–நீலகிரி நிலப்பரப்பு, ஆனைமலை–பெரியாறுவாழ்விடம் ஆகியவை, அளவிலும் அமைப்பிலும் பெரிதும் வேறுபட்ட நிலப்பரப்புகளில் பெரிய யானைத் தொகுதிகள் எவ்வாறு நிலைத்திருக்க முடியும் என்பதை விளக்கும் மாதிரிப் பகுதிகளாகும்.
ரஜத் நாயக், உல்லாஸ் காரந்த் உள்ளிட்ட அறிவியலாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 7,83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடுகள் 3,52,674 துண்டுகளாகப் பிளவுபட்டுள்ளன.
வாழ்விடங்கள் சுருங்கிப் போவதும், துண்டாடப்படுவதும் யானை போன்ற பேருயிர்களின் இருத்தலுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும்.

யானை மரணங்கள்
சில மாதங்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 1,683 யானைகள் மனிதச் செயல்பாடுகளால் கொல்லப்பட்டுள்ளன. இவற்றில் 1,105 யானைகள் (சுமார் 67%) மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. இதில் பெரும்பாலானவை விதி மீறி அமைக்கப்பட்ட மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்தவையாகும். வாழ்விடங்கள் சுருங்கிப் போனது, அவற்றின் தரம் குறைந்தது, வலசைப் பாதைகள் மறிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் விளைநிலங்களை நோக்கி வந்த யானைகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்த எண்ணிக்கையில் 225 யானைகள் (சுமார் 14%) ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. யானைகளின் வாழ்விடங்களைக் கிழித்து அமைக்கப்பட்ட ரயில் பாதைகளே இந்த மரணங்களுக்குக் காரணமாகின்றன.
வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கையை (214) விட வாழ்விடச் சிக்கல்களால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்தியாவில் உள்ள யானைகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் 11,934 யானைகள் உள்ளதாக கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
இது மொத்த யானைகளின் எண்ணிக்கையில் 53 % ஆகும்.
இந்தியாவில் 1000 யானைகளுக்கு மேல் வாழும் 4 காட்டுப்பகுதிகளில் இரண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. அவை இரண்டும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளாகும்
இந்த எண்ணிக்கை ஒருவகையில் நமக்கு பெருமிதம் தந்தாலும் யானைகளைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதையும் உணர முடிகிறது.
வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் மூலமாகவே யானைகளைப் பாதுகாக்க இயலும்.
வலசை பாதைகள்
யானைகளின் வாழ்விடம் என்பது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மட்டுமல்ல. காடுகளுக்கு வெளியே உள்ள வலசைப் பாதைகளும் அவற்றின் வாழ்விடத்தின் ஒரு பகுதியாகும். அவை தனியாரிடமும் அரசின் பிறத் துறைகளிடமும் உள்ள நிலங்களாக இருக்கலாம். அந்த இடங்கள் கட்டடமயமாதல் போன்ற எவ்வகையான நில அமைப்பு மாறுதலுக்கு உட்பட்டாலும் யானைகளுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும். எனவே யானைகளின் வலசைப் பாதைகளை அடையாளம் கண்டு பாதுகாப்பது அவசியமாகும்.

அரசால் அமைக்கப்பட்ட அறிஞர்கள் குழுவால் அடையாளம் காணப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள 42 யானைகளின் குறுகிய வலசைப் பாதைகளை (Elephant Corridors) அங்கீகரித்து, அவற்றின் நில அமைப்பு மாறாமல் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (HACA), காடுகளுக்கு வெளியே யானைகள் பயன்படுத்தும் பகுதிகளில் ஏற்படும் நில அமைப்பு மாற்றத்தைத் தடுப்பதற்கு ஓரளவு வழிவகை செய்கிறது. ஆனால், அந்த ஆணையத்தின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. விதிகளை மீறியவர்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

அண்மையில் கோவை வனக்கோட்டத்தை ஒட்டியுள்ள பெரும் நிலப்பரப்பைக் கட்டடமயமாக்கும் செயல்பாட்டை ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனால் யானை–மனித முரண் மிகுந்த இப்பகுதியில் நிலைமையை மேலும் மோசமாக்கும். யானைகளும் மனிதர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இத்தகைய செயல்பாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இவை போன்றே, யானைகள் வாழும் காடுகளில் புதிய சாலைகள், ரயில் பாதைகள், அணைக்கட்டுகள், சுரங்கப் பணிகள், பெரும் கால்வாய்கள் என எத்தகைய வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.
யானைகளின் பாதுகாப்பு
யானைகளைக் கொண்டாடும் விழாக்கள் மூலம் மட்டுமே அவற்றை காப்பாற்றிவிட இயலாது. எந்த வகையிலும் யானைகள் வாழும் காடுகளும் அந்தக் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளும் பாதிப்படையாமல் பாதுகாப்பதன் மூலமே யானைகளைக் காப்பாற்ற இயலும்.
மாநில, ஒன்றிய அரசுகளின் அக்கறையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் மூலமே இவை சாத்தியமாகும். நமது கானகத்தின் பெருமிதமாகவும் ஆதார உயிராகவும் உள்ள யானைகளைக் காப்பாற்ற அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியமாகிறது.
கட்டுரையாளர் குறிப்பு

ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் சேர்ந்து `ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை 2000 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். கனரா வங்கியில் பணிபுரிந்த காளிதாசன் சுற்றுச்சூழல் கருத்தியலைப் பரப்புவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழ்நாடு வன உயிரின வாரியம், தமிழகக் கடலோர மேலாண்மைக் குழுமம், ஆனைமலை புலிகள் காப்பக ஆளுமைக்குழு உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இவரைத் தொடர்புகொள்ள : 9443022655, pasumaiosai@gmail.com
