கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் தாயார் கோவை போத்தனூர் பகுதியில் இன்று (மே 24) மாலை செய்தியாளர்களைச் சந்தித்து, காவல்துறையினர் மற்றும் கணவர் குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சிறுமியின் தாயார், “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை மருத்துவமனையிலிருந்து வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமலேயே எரித்துள்ளனர். மருத்துவமனையில் என் குழந்தையைப் பார்க்க என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அங்கு உடன் இருந்தனர். குழந்தையின் உடலைப் பார்ப்பதற்காகப் பிணவறை (Mortuary) அருகே என் குடும்பத்தாரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை; ஆனால், என் கணவர் குடும்பத்தாரை மட்டும் அனுமதித்துள்ளனர்.
உடலை வாங்குவதற்கும் என்னை அனுமதிக்கவில்லை. பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை எப்போது ஒப்படைத்தார்கள் என்ற விபரமும் எனக்குத் தெரியாது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்த பிறகே என் குழந்தையின் உடலை வாங்குவேன் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் மட்டும் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் குழந்தையின் உடலை என் கண்ணில் கூட காட்டவில்லை.
யார் மீது தவறு என்பதைக் கண்டறிய இப்போது குழந்தையின் உடலே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் என் கணவரின் மனதை மாற்றி, அவசர அவசரமாகக் குழந்தையின் உடலை வாங்கிச் சென்றுள்ளனர். உடலை ஒப்படைத்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். உடலை எரிப்பதில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டப்பட்டது?
இங்கு கடந்த மூன்று நாட்களாக நாங்கள் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எவ்வித சம்பந்தமும் இல்லாமல், இப்போது ஏன் அவசர அவசரமாகக் கொண்டு போய் உடலை எரிக்க வேண்டும்? என் குழந்தையை நான் கடைசியாகப் பார்க்கக் கூட இல்லை.
இதற்கிடையே என் மீது தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த வழக்கைத் திசைதிருப்புவதற்காகவே என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு அரசாங்கத்தின் நிதியுதவி வேண்டாம், என் மகளின் மரணத்திற்கு நீதி மட்டுமே வேண்டும். கொலையாளிக்குக் கொடுக்கும் தண்டனையைப் பார்த்து, இனிமேல் யாரும் இதுபோன்ற கொடூரமான தவறைச் செய்யத் துணியக் கூடாது. என் குழந்தை அணு அணுவாகச் சித்திரவதையை அனுபவித்து இறந்துள்ளது; அதேபோன்ற கடுமையான தண்டனை அந்தக் கொலையாளிகளுக்கும் கிடைக்க வேண்டும்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகக் குறிப்பிட்ட தாயார், “வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேரில் வந்து சந்திப்பதாகவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கொலையாளி கார்த்தியுடன் இருந்த பெண்ணுக்கும் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அந்தப் பெண்ணிடமும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது” என்றும் தெரிவித்தார்.
