தமிழக சட்டசபையில் பாஜக குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், ஏன் இந்தத் தீர்மானம்? எங்களுடைய முதலமைச்சர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இந்த அவையில் கொண்டுவந்திருக்கிறார்.
இந்தத் தீர்மானத்தின் அடிப்படை, மாநிலங்கள் இல்லாத ஒன்றிய அரசு இல்லை. அறிஞர் அண்ணா வலியுறுத்தியது போல, பாராளுமன்றத்தில் முழங்கியது போல, மாநில சுயாட்சி இல்லாமல் ஒரு இந்தியாவை உருவாக்க முடியாது.
மாநிலங்களைத் தவிர்த்து இந்திய நாட்டுடைய வளர்ச்சியை உருவாக்க முடியாது.
வடக்கு தெற்கு யுத்தம்
அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாக இருந்தபொழுது ஒரு யுத்தத்தை எதிர்கொண்டார். அந்த யுத்தம் வடக்கு, தெற்கு என்கின்ற யுத்தம். அதே போல்தான் இன்று வடக்கு, தெற்கு என்கின்ற யுத்தத்தில் இன்றைக்கும் இந்தியாவும், நாமும் எதிர் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் வரலாறு
புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆர்டிகிள் 14 எல்லாரும் சமம். எல்லோருக்குமான அரசியல் அதிகாரம் உருவாக்கப்பட வேண்டும். அதில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது. நம்முடைய பாஜக சகோதரர் கேட்டார், “ஏன் இந்த அவசரம்?” என்று.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாத பொழுதே, தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் அண்ணாவும் இணைந்து அரசியலமைப்பில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். இதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.
உதயநிதிக்கு நன்றி
இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்டது. அரசியல் கட்சிகள் மாறலாம். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு எப்பொழுதும் நிரந்தரமானது. அந்த அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்தத் தீர்மானம்.
இதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி சொல்கிறோம்.
அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அண்ணா உருவாக்கிய கொள்கை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் உருவாக்கவில்லை. தமிழ்நாட்டிற்காகவும், இந்தியாவுக்காகவும் உருவாக்கிய கொள்கை. அந்தக் கொள்கை வழியில் வந்தவர்கள் நாங்கள்.
கலைஞர், மாநில சுயாட்சிக்காகவும் இதே அவையில், இதே தமிழ்நாட்டில் உயிருள்ள வரை உயிர் மூச்சு உள்ளவரை மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்து வந்தார். அதேபோல எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்தனர்.
மாநில சுயாட்சி பறிபோகும்
இந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய அம்சம் என்பது நாம் மாநில சுயாட்சியை நாம் இழப்போம் என்பதுதான். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
அண்ணா அன்றே முழங்கினார்.. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என.. இன்றைக்கு வரைக்கும் அந்தப் பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 புதுச்சேரி உட்பட வெற்றி பெறுவோம். நமது எம்.பி.க்கள் தமிழ்நாட்டிற்கு எதிரான அனைத்துச் சட்டங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நீட்டாக இருக்கட்டும், ஜிஎஸ்டி ஆக இருக்கட்டும், சிஏஏ-வாக இருக்கட்டும். கடந்த 10 ஆண்டுகளாக நமக்கான சட்டங்கள் நமக்கு எதிராகத்தான் இருந்துட்டு இருக்கு.
இந்திராவும் வாஜ்பாயும்
2001-ல் ஃப்ரீஸ் செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும் பொழுது, நமக்கான குரலும் நமக்கான உரிமையும் பறிக்கப்படும்.
அன்று இந்திரா காந்தி அம்மையாரும் பின்னர் வாஜ்பாயும் 543 என்கின்ற பாராளுமன்ற உறுப்பினருடைய விகிதாச்சாரத்தை உறுதி செய்தனர்.
அமெரிக்காவின் நிலை என்ன?
அமெரிக்கா, மக்கள் தொகையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை உருவாக்கவில்லை. 20 கோடியில் இருந்து 50 கோடி, 60 கோடி ஆனாலும், இன்றைக்கு வரைக்கும் அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் தான்.
நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 50% உயரும்போது நமக்கு பலன் என்று சொன்னால் அது உண்மை இல்லை. 5 அல்லது 6 வட மாநிலங்கள் சேர்ந்தால் ஒரு பிரதமர்ரை உருவாக்க முடியும் என்கின்ற நிலை உள்ளது. அது மாற்றப்பட வேண்டும்.
தென்னிந்தியாவிலிருந்து ஏன் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் எதிர்காலத்தில் உருவாக்கப்பட கூடாது? அதிகாரம் உத்தரப் பிரதேசத்திற்கோ, பீகாருக்கோ, குஜராத்திற்கோ மட்டுமல்ல. நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல ஒரு நாள் ஒரு நாள் பாராளுமன்றத்தில் ஒரு பிரதம மந்திரி மூலமாக ஒலிக்க வேண்டும். அதற்குத்தான் இந்தத் தீர்மானம்.
நாம் பொருளாதாரத்தில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறோம். ஆனால் பாராளுமன்றத்தில் அனைத்து சட்டங்களும் ஏன் தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கிறது? இந்தத் தீர்மானம் மாநில சுயாட்சியும், இந்திய ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்கு.
நாளைக்கு காங்கிரஸ் பிரதமராகலாம், பிஜேபி பிரதமராகலாம். அண்ணாவும் பெரியாரும் புரட்சியாளர் புரட்சியாளர் அம்பேத்கரும் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு இந்தியா என்கின்ற நாட்டிற்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் சிந்தித்தார்கள்.
தேர்தல் காலங்களில் வெற்றி பெறுவதற்காக நாம் சண்டையிடலாம். ஆனால், இந்தத் தீர்மானம் நீட்டை விட முக்கியமான ஒரு தீர்மானம்.
ஏனென்றால், அந்த நீட் கொண்டுவரப்படுவதே பாராளுமன்றத்தில் அதிகப்படியான பெரும்பான்மை இருப்பதால்.
நமக்கு 100 எம்பி இருந்தா நீட் கொண்டுவர முடியுமா? ஜிஎஸ்டி கொண்டுவர முடியுமா? கொண்டுவர முடியாது.
முதல் குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்
இந்த தொகுதி மறுவரையறைக்கு எதிராக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்தார். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களுடைய தலைவரும் 2025 ஆண்டிலிருந்து இதுவரைக்கும் மூன்று அறிக்கை கொடுத்திருக்கிறார். நாங்களும் எதிர்க்கிறோம்.
ஏனெனில் இது அண்ணாவின் கொள்கை.
இப்போது 50% அளவுக்கு மாநிலங்களின் தொகுதிகளை உயர்த்தலாம் என்கின்றனர். அந்த 50% இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டால் மற்ற மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினருடைய பிரதிநிதித்துவம் அதிகமாவது போல தமிழ்நாட்டிற்கு அதிகமாகிறதுதானே என்கின்றனர். இந்தக் குரல் நியாயமற்றது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தேச உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா இந்த மாநிலங்களை இணைத்தாலே இந்த 50% அதிகமாகும் பொழுது, தேர்தல் அரசியலில் சுலபமாக மீண்டும் வடஇந்தியாவின் ஆதிக்கம் நிலைபெறும். 50% உயர்த்தினாலும் உருவாகும். அதனால், இன்றைக்கு, நியாயமான தொகுதி மறுவரையறை என்பதை விட 543 என்பதை அப்படியே நிலை நிறுத்து என்பதுதான் முக்கியம். வட இந்திய ஆதிக்கத்தில்- இந்தி மொழி பேசும் மாநிலங்களிடம் நாம் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தீர்மானம்.
வடகிழக்கு போல தென்னிந்திய மாநிலங்கள்..
வடகிழக்கில் ஏழு, எட்டு மாநிலங்கள் இருக்கு. ஏன் அவர்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கவில்லை? பிரதிநிதித்துவம் இல்லை. நாளைக்கு வடகிழக்கு மாநிலங்கள் போல தென் மாநிலங்களும் உருமாறிடக் கூடாது. அதுக்குத்தான் இந்தத் தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்.
நாம் சமூக நிதியின் அடிப்படையில் கல்வியை உருவாக்கினோம், உயர்கல்வியை உருவாக்கினோம். அதிகமான மெடிக்கல் காலேஜஸ் இருக்கு. நமக்குள்ள போட்டிகள் இருக்கலாம், அரசியல் சண்டைகள் இருக்கலாம்.
வளர்ந்த மாநிலமாக இருக்கிறோம். ஆனால், அந்த வளர்ச்சி அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும்.
நம்ம ஒரு ரூபாய் கொடுத்தா நமக்கு நாற்பது பைசா திருப்பி கொடுக்கிறாங்க (எதிர்ப்பு) 29 பைசாதான் தருகிறது மத்திய அரசு. இதுதான் நமக்கான அதிகாரம் இல்லை. நாம் உழைக்கிறோம். அதிகாரத்தை உருவாக்க முடியல.
அன்று தொகுதி மறுவரையறை மசோதாவை 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நின்று எதிர்த்ததைப் போல வெளிநடப்பு செய்யாமல் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்.
2026 தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸுக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடு இருக்கலாம். உங்களோடு காங்கிரஸ் இருந்தார்கள், இன்றைக்கு மக்களுடைய முடிவிற்காக எங்களோடு இணைந்தார்கள். ஆனால், மாநில சுயாட்சிக்குப் பிரச்சனை வரும்போது 39 எம்.பி.க்களும் இனநிது எதிர்க்க வேண்டும். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.
அமித்ஷாவுக்காக வாதாடிய எடப்பாடி பழனிசாமி
இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 7.18 விகிதாச்சாரம் தமிழ்நாட்டுக்கு குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். அதை நம்பித்தான் ஆக வேண்டும். இங்கே இருக்கிற அமைச்சர்கள் கூட நிறைய உறுதிமொழி கொடுக்கிறீர்கள்.. இதை எப்படி நம்புறது என கேள்வி கேட்க முடியுமா? என்றார்.
பாஜக குறித்த விமர்சனம் நீக்கம்
பாஜகவின் குரல் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தமது பேச்சின் போது குறிப்பிட்டார். அதை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
