தவெகவில் அதிமுக சிங்கை ராமச்சந்தின்- ஜெ.விடம் அன்று தந்த வாக்குறுதி வீடியோ வைரல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுகவில் இருந்து விலகி சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்துள்ள சூழலில் ஜெயலலிதாவுடன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் சிங்கை ராமச்சந்திரன். குறிப்பாக, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (IT Wing) இவர் ஆற்றிய பணிகள் கவனம்பெற்றன. இவரது தந்தை கோவிந்தராசு, ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த 1991–1996 காலகட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தார். இதன் மூலம் கட்சியில் முக்கியத்துவம் பெறும் சூழலைச் சிங்கை ராமச்சந்திரன் பெற்றார்.

ADVERTISEMENT

கோவை பி.எஸ்.ஜி மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்ற இவர், படிக்கும் காலத்திலேயே அதிமுகவின் மாணவர் அணிச் செயலளாராக இருந்தார். சிறந்த மேலாண்மை வல்லுநராகப் பணியாற்றி பல்வேறு நாடுகளுக்குப் பயணித்த இவரை, 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக நியமித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ் ஆதரவாளராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராகவும் மாறினார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அதிமுகவில் தனக்கு முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமான நிலையில், சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகினார். தற்போது தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தபோது ஜெயலலிதாவுடன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் ஜெயலலிதா, சிங்கை ராமச்சந்திரனிடம், “சிங்கை கோவிந்தராஜனின் மகனா நீங்கள்? ரொம்ப சந்தோஷம்! அவரை எனக்கு நன்றாகத் தெரியும்” என்கிறார். அதற்கு ராமச்சந்திரன், “அப்பாவைப் போலவே நானும் விசுவாசியாக இருப்பேன்” என்கிறார். அதற்கு ஜெயலலிதா, “அவர் பெரிய விசுவாசி; நீங்களும் அப்படியே இருப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது” எனக் கூறுகிறார்.

சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள நிலையில், இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி அவர் மீது அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தபோது சிங்கை ராமச்சந்திரன், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைந்தபோது ‘கட்சி அவ்வளவுதான்’ என்று பலர் எண்ணியபோதும் கட்சி நிலைத்திருப்பதற்குத் தொண்டர்கள்தான் காரணம். அதிமுக சரித்திரத்திலேயே எதிர்க்கட்சியாக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கும் தொண்டர்கள்தான் காரணம். ‘எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும்’ என்று ஜெயலலிதா எந்தத் தனிமனிதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை; தொண்டர்களை நம்பித்தான் சொன்னார்.” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share