தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி, 2026–27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 12) பதிலுரையாற்றினார்.
அப்போது, சட்டமன்றத்தில் இது தன்னுடைய கன்னிப் பேச்சு எனக் குறிப்பிட்டு உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், ஒரு குட்டிக்கதையைக் கூறினார்:
“நாட்டை அடுத்து ஆளப்போவது யார் என்று தீர்மானிக்க பெரியவர் ஒருவர் ஒரு போட்டியை வைத்தார். அதற்குப் பல இளைஞர்களை அழைத்து அவர்களிடம் தலா ஒரு விதையைக் கொடுத்தார். ‘நீங்கள் அனைவரும் மூன்று மாதங்கள் கழித்து இந்த விதையை மரமாக வளர்த்து, பூத்துக் குலுங்கும் செடியுடன் இங்கு வர வேண்டும்’ எனக் கூறினார்.
மூன்று மாதங்கள் முடிந்த பின் அனைத்து இளைஞர்களும் வந்தனர். பெரிய பெரிய தொட்டிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கிய செடிகளுடன் அவர்கள் வந்தனர். அப்போது ஒரு இளைஞர் மட்டும் செடி வளராத வெறும் பானையை எடுத்து வந்தார். அதைப் பார்த்து மற்ற அனைவரும் சிரித்து கிண்டல் செய்தனர்.
ஆனால் பெரியவர் , அந்த வெறும் பானையைக் கொண்டு வந்த இளைஞரே வெற்றி பெற்றவர் என அறிவித்தார். ‘நாங்கள் அனைவரும் செடியை வளர்த்து வந்துள்ளோமே’ என மற்றவர்கள் கேட்க, அதற்கு பெரியவர், ‘நான் உங்களுக்குக் கொடுத்தது வேகவைக்கப்பட்ட விதை, அது ஒருநாளும் முளைக்காது. எனவே வெற்றி பெறுவதற்குப் பொய் சொல்லாமல், குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காமல் நேர்மையாக இருந்தால் இங்கு எல்லாம் சாத்தியம் என்பதை இவர் நிரூபித்துள்ளார்’ என்றார்.”
‘பொய்’ வார்த்தைக்குச் சபாநாயகர் நீக்கம்:
அமைச்சர் கதையைக் கூறி முடித்ததும் குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ‘பொய்’ என்ற வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘உண்மைக்கு மாறாக’ என்ற வார்த்தை இடம்பெறும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு, “பேரவை விதிகளின்படி ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரைப் பார்த்து ‘பொய் சொல்கிறார்’ என்றுதான் கூறக் கூடாதே தவிர, ‘பொய்’ என்ற வார்த்தையே அவையில் இடம்பெறக் கூடாது என்பது பொருளல்ல. திருவள்ளுவரே பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
என திருக்குறளில் ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்; அதை நாம் மாற்ற முடியாது. எனவே ‘பொய்’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, “பேரவையில் ‘பொய்’ என்ற சொல் நேரடியாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ‘உண்மைக்கு மாறாக’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் மரபு உள்ளது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இத்தகைய சொற்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. எனவே அந்தச் சட்டமன்ற மரபையே தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நிதியமைச்சர் கூறிய குட்டிக்கதையில் இடம்பெற்ற ‘பொய்’ என்ற ஒற்றைச் சொல், சட்டப்பேரவையில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
