கோவையில் கடந்த 10 நாட்களில் 4 கொலைகள் நடந்துள்ள நிலையில் தவெக ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் பட்சத்தில் காவல் துறையிடமிருந்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஆகஸ்ட் 13) தனது எக்ஸ் தள பக்கத்தில், “தொழில் நகரம் என்ற பெருமைக்குரிய கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் கொடூர கொலை சம்பவங்களால் பொது மக்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு கொடூர கொலை குற்ற சம்பவங்கள் அரங்கேறி கோவை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் கொலை வரை செல்வது தவெக அரசில் சட்டம் ஒழுங்கின் திறனற்ற செயலையே காட்டுகிறது.சிறைக்காவலில் இருக்கும் கைதிகளுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் பட்சத்தில் காவல் துறையிடமிருந்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே.
இந்நிலை தொடர்ந்தால் கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து பாதுகாப்பற்ற மாநிலம் என்ற சூழல் உருவாகும்.எனவே காவல்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை உனடியாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
