கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நேற்று வீடு புகுந்து பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (58) என்ற பெண், தன் மகனுடன் வசித்து வந்தார். இவரது மகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், சாந்தியும் வீட்டு வேலைக்குச் சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் மகன் வேலைக்குச் சென்றதை தொடர்ந்து சாந்தியும் வேலைக்கு சென்றிருந்தார். மாலையில் சாந்தியும் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகன், கதவு பூட்டப்பட்டிருந்ததால் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது சாந்தி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது முகத்திலும், தலை உள்ளிட்ட பல இடங்களிலும் பலத்த காயங்கள் இருந்தன.
இதுகுறித்துத் தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாந்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு மீண்டும் திரும்பியது. மேலும், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றி, கொலையாளிகளைத் தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, கோவையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி நவீன், 6-ஆம் தேதி அஸ்வின், 10-ஆம் தேதி அமுதன் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் கடும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
