தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) பல்வேறு திட்டங்கள் மூலம் விற்பனைக்கு உள்ள 7,659 வீடு, மனைகள், கடைகள் உள்ளிட்டவை வாங்க http://tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ப. ராஜ்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின் மூலம் மனைகள் மற்றும் வீடுகள் கடந்த ஆண்டு 2630 அலகுகள் மட்டும் மின்னுணு முறையில் விற்பனை செய்யப்பட்டன.
தற்பொழுது, இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள 7,659 அலகுகளில் (வீடுகள், மனைகள், கடைகள்)
விற்பனை நடைபெறும் நாட்கள்
1) 21.08.2026 முதல் குலுக்கல் முறையில் – 2,842 அலகுகளுக்கும்,
2) 24.08.2026 முதல் முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை அடிப்படையில் (FCFS) – இடஒதுக்கீடு விகிதாசார முறையில் – 2,184 அலகுகளுக்கும்
3) 25.08.2026 முதல் பொது ஒதுக்கீடு முறையில் (Common Pool) இட ஒதுக்கீடு விகிதாசாரமின்றி, முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமையில் – 1,749 அலகுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்காக Tamil Nadu Housing Board Online Portal-ல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இன்றைய தினத்திலிருந்து 7 தினங்கள் கடந்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்
பொதுமக்கள் பின்வருவனவற்றினை தயார் செய்ய மேற்படி கால இடைவெளியினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User ID and Password)
- இணைய தளத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் அல்லது திட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்று விருப்பமான அலகினை தெரிவு செய்து கொள்ளலாம்.
- இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
- முன்பதிவு செய்வதற்கான கட்டணத் தொகையினை செலுத்துவதற்கு ஏதுவாக தங்களது வங்கி பணப் பரிவர்த்தனை வரம்பினை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
- எந்தெந்த பிரிவில் விண்ணப்பிக்கப்படுகிறதோ, அதற்கான நிபந்தனைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், விற்பனைக்கு தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள் / பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) e-Tender cum e-Auction முறையில் 25.08.2026 முதல் 24.09.2026 வரை மின் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான தளம் Tamil Nadu e-Tenders Portal ஆகும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வெளிப்படையான இந்த செயல்பாடு, பொதுமக்களுக்கு வீடு மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படுகின்றது.
மேலும் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இவ்வாண்டில் விலை உயர்வு எதும் செய்யாமல் விற்பனை உள்ளது.
ஒவ்வொரு திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் முன்பதிவு தேதிகள் தனித்தனியாக TNHB அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhb.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இடங்கள்:

ஈரோடு: பெரியார் நகர், முத்தம்பாளையம், தாராபுரம் & பெருந்துறை
ஓசூர்: ஃபேஸ் – XVI, ஃபேஸ் – XVI மண்டலம் 3 & ஃபேஸ் – XIX
சென்னை: அண்ணா நகர், திருமுல்லைவாயில், முகப்பேர் & நொளம்பூர்
செங்கல்பட்டு: ராஜகுலிப்பேட்டை
காஞ்சிபுரம்: கீழ்முதலம்பேடு
ராமநாதபுரம்: பட்டினம்காத்தான்
கோவை: பெரியநாயக்கன்பாளையம், சிங்கநல்லூர் & கணபதி
சேலம்: ஆத்தூர் & சீலாவாரி
மதுரை: சின்னாளபட்டி, திருமங்கலம், தத்தனேரி & அருப்புக்கோட்டை
வேலூர்: கழிஞ்சூர்
திருநெல்வேலி: கீழநத்தம்
இணையதள குலுக்கல் முறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. உயர் வருவாய் பிரிவு (HIG), மத்திய வருவாய் பிரிவு (MIG), குறைந்த வருவாய் பிரிவு (LIG) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 2842 குடியிருப்பு மற்றும் மனைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
மொத்த வீடுகள்: 2842
விலை: 3 லட்சம் முதல் 298 லட்சம் வரை
பரப்பளவு: 333 – 5942 சதுரடி
2. இடங்கள்

சென்னை: சோழிங்கநல்லூர், ஜாஃபர்கான்பேட்டை, கோயம்பேடு, ஷெனாய் நகர் & அண்ணா நகர்
திருச்சி: வரகனேரி, நாவல்பட்டு & வாழவந்தான்கோட்டை
ஈரோடு: முத்தம்பாளையம்
சேலம்: எடப்பாடி
வேலூர்: தாராபடவேடு
மதுரை: ராஜபாளையம், விருதுநகர் & சிவகாசி
இணையதளத்தில் “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை” (FCFS) என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. உயர் வருவாய் பிரிவு (HIG), மத்திய வருவாய் பிரிவு (MIG), குறைந்த வருவாய் பிரிவு (LIG) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 1749 குடியிருப்பு மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன
மொத்த வீடுகள்: 1749
விலை: 3 லட்சம் முதல் 146 லட்சம் வரை
பரப்பளவு: 344 – 3624 சதுரடி
3. இடங்கள்

சென்னை: அயனாவரம்
செங்கல்பட்டு: ராஜகுலிப்பேட்டை
மதுரை: உச்சப்பட்டி, தோப்பூர், எல்லிஸ் நகர் & தத்தனேரி
ஈரோடு: பள்ளிப்பாளையம்
திருநெல்வேலி: பாலை
புதுக்கோட்டை: முள்ளூர்
விற்பனை முறை: இணையத்தில் “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை – பங்கீட்டின்படி” (FCFSR) என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. உயர் வருவாய் பிரிவு (HIG), மத்திய வருவாய் பிரிவு (MIG), குறைந்த வருவாய் பிரிவு (LIG) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 2184 குடியிருப்பு மற்றும் மனைகள் விற்பனைக்கு வரவற்கப்படுகின்றன.
மொத்த வீடுகள்: 2184
விலை: 5 லட்சம் முதல் 131 லட்சம் வரை
பரப்பளவு: 242 – 4089 சதுரடி
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை – பங்கீட்டின்படி (FCFSR) என்ற அடிப்படையில் பங்கீட்டின் (Reservation) எண்ணிக்கையைச் சமன் செய்வதற்கும் ஒதுக்கீடுகளில் உள்ள பற்றாக்குறைகளை நிரப்புவதற்கும் இணையதளம் மூலம் அலகுகள் (குடியிருப்பு மற்றும் மனைகள்) ஒதுக்கீடு செய்யப்படும்.
