தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு, செய்யாறு ஆற்றங்கரையில் விவசாயிகள் திதி கொடுத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். ஆனால், விவசாயிகள் நீண்ட எதிர்பார்த்து காந்திருடிந்த பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இதில் இடம் பெறவில்லை. இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்தது.
இந்நிலையில், ஆடி அமாவாசையான இன்று செய்யாறு ஆற்றங்கரையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் 15-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். அங்கு, தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசின் வேளாண் பட்ஜெட்டுக்குத் திதி கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ” வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எந்தவொரு அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று நம்பியிருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வறட்சி நிவாரணம் வழங்குவதற்கும் அரசு முறையான கணக்கெடுப்பு எதையும் நடத்தவில்லை. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை” என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆடி அமாவாசை நாளில் விவசாயிகள் பட்ஜெட்டுக்கு திதி கொடுத்து நடத்திய இந்த போராட்டம், செய்யாறு பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
